”மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகள் தமிழ் தான்”: விளக்குகிறார் பெரியார்!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் குறித்து உங்கள் பார்வை என்ன..?
பெரியார்: பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை, ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நான்கு அக்கா-தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. இத்திராவிடத் தாய்க்கு பிறந்தது ஒரே மகள்தான். அது தமிழ்தான்!
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
அப்படியானால் தமிழில் இருந்துதானே மீதி மூன்று மொழிகளும் பிறந்திருக்க வேண்டும்?
பெரியார்: நான்கு பெயர்களில் வழங்கப்பட்டாலும் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் நான்கு இடங்களிலும் பேசப்படுவது தமிழ் ஒன்றுதான்.நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவதுதான் தவறு. ஒன்றுதான் நான்காக நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
மொழியறிஞர்கள் கூடவா இப்படி அறியாமையில் இருந்திருப்பார்கள்?
பெரியார்: போக்குவரத்து வசதியில்லாத, ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத அந்த காலத்தில் அந்தந்த மண்ணின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தமிழ் உச்சரிப்பில் சில மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. நம்மை நாலு ஜாதியாக பிரித்து வைத்த ஆரியம், நம் மொழியையும் நான்காக பிரித்து வடமொழியை புகுத்தி திராவிட மொழியையே கெடுத்துவிட்டது. அன்றைய பண்டிதர்கள் ஆரியத்திற்கு அடிமைப்பட்டிருந்ததால் அதை தடுத்தார்களில்லை. இன்றுவரை நமது பண்டிதர்களுக்கு அந்த ஆரிய மோகம் தீர்ந்தபாடில்லை.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
வடமொழியால் கெட்டதாக சொல்கிறீர்களே…அந்த திராவிடமொழி எது?
பெரியார்: திராவிடமொழி தமிழ் தவிர வேறு இருக்க முடியாது.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
உங்கள் கருத்தை மற்ற மூன்று மொழிக்காரர்களும் ஏற்பார்களா?
பெரியார்: ஆரிய மோகமற்ற ஒரு தெலுங்கு பண்டிதர், ஒரு கன்னடிய பண்டிதர், ஒரு மலையாளப் பண்டிதர், ஒரு தமிழ் பண்டிதர் ஆகிய நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து நாலு மொழி அகராதிகளையும் வைத்துக்கொண்டு அவற்றிலுள்ள வடமொழி வார்த்தைகளை நீக்கிவிட்டு பார்த்தால் எஞ்சியிருப்பது தமிழ் வார்த்தைகள் என்பதையும் 100க்கு 5 வார்த்தை கூட தமிழல்லாத வார்த்தைகள் இருக்காது என்பதையும் உணர்வார்கள்.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகள் தமிழ்தான் என்று நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம்?
பெரியார்: தமிழில் ‘வீடு’ என்பதை தெலுங்கன் ‘இல்’ என்றும், கன்னடன் ‘மனை’ என்றும், மலையாளி ‘பொறை’ என்றும் கூறுவான். தமிழில் ‘தண்ணீர்’ என்பதை தெலுங்கன் ‘நீளு’ என்றும், கன்னடன் ‘நீரூ’ என்றும், மலையாளி ‘வெள்ளம்’ என்றும் கூறுவான். நாம் ‘எனக்கு’ என்று கூறுவதை தெலுங்கன் ‘நாக்கு’ என்றும், கன்னடியன் ‘நெனக்கி’ என்றும் கூறுவான். நாம் ‘பசு’ என்பதை தெலுங்கன் ‘ஆவு’ என்றும், கன்னடன் ‘அசு’ என்றும், மலையாளி ”ஆவ்’ என்றும் கூறுகிறான். நாம் ‘அங்கே’ என்பதை ஒருவன் ‘அவடே’ என்றும் ஒருவன் ‘அக்கடே’ என்றும் கூறுகிறான். நேக்கு, நோக்கு, அவாள், இவாள் என்று பேசுவதெல்லாம் தமிழ் என்று கூறும்போது நாக்கு,நெனக்கி, எனக்கி, இல், மனை, பொறை, நீளு, வெள்ளம், என்று கூறும் மக்களைத்தானா வேறுமொழி பேசுபவர்கள் என்று ஒதுக்க வேண்டும்? ஆகவேதான் நான் கூறுகிறேன். இவை நான்கும் நாலு இடத்தில் நாலு பெயருடன் வழங்கப்பட்டு வரும் ஒரே மொழியே தவிர நான்கு அல்ல. ஆரியம் தான் இவற்றை நான்காக பிரித்து வைத்துள்ளது. இந்த ஆரியத்திற்கு கையாளாக இருப்பவர்கள்தான் தம் அறியாமையால் இப்பிரிவனைக்கு ஆக்கம் விளைவிக்கிறார்களே ஒழிய உண்மையில் இவை நான்கும் ஒன்றுதான். சுயநலம் மறந்து, உண்மை மொழிப்பற்று கொண்டு ஆரிய வட சொற்களை நீக்கிப் பார்த்தால் இவை நான்கும் ஒரே மொழிதான் என்பது தீர்க்கமாய் விளங்கும்.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
ஆக, நான்கு மொழிகளும் தமிழ்தானா?
பெரியார்: இவை நான்கும் ஒரு உதிரத்திலிருந்து உதித்தெழுந்ததல்ல. அந்த உதிரமேதான் இவை நான்கும். என்னருந் தமிழே! நீயேதான் தெலுங்கு, நீயேதான் மலையாளம், நீயேதான் கன்னடம் என்றுதான் நான் கூறுவேன். இவை வெவ்வேறு மொழிகளாயிருந்தால் இவைகளுக்கு முதல்நூல்கள் எங்கே? தமிழுக்குத்தான் முதல்நூல்கள் எத்தனையுள்ளன? அத்தனையும் ஆடிப்பெருக்கத்தில் ஒழித்த ஆரியக் கூட்டமும் அவர்களின் அடிவருடிகளும்தானே இன்று தமிழ், தமிழ் என்று கூப்பாடு போடுகிறார்கள்?
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
உங்கள் கருத்தால் தமிழுக்கு கேடு வராதா?
பெரியார்: உண்மையாக தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பாடுபடுபவர்கள் திராவிடர் கழகத்தார்கள்தான்.நாங்கள் திராவிட நாடு, திராவிட மொழி என்று கூறும்போது மொழி போச்சு, மொழி போச்சு என்று கூப்பாடு போடும் தோழனே! எங்கள் முயற்சியால் எது போகும்? உன் அறியாமை வேண்டுமானால் போகுமே ஒழிய உண்மையில் தமிழுக்கோ, தமிழ்நாட்டிற்கோ கடுகளவேனும் கேடு வருமா?
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
மேற்கண்ட கருத்துகள் 10.01.1948 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்களால் ‘மொழி ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் எழுதப்பட்டவையாகும்.
(நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? தொகுதி-1 பக்கம்-450 தொகுப்பாசிரியர்: பசு.கவுதமன்)
நீண்ட கட்டுரையை சுருக்கமாக கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்திருக்கிறோம்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படாத நிலையில், திராவிடநாடு கோரிக்கை வலுப்பெற்று இருந்த சூழலில் எழுதப்பட்ட கருத்துகளாக இருப்பினும், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டு உரிமைகளின் காவல் அரணாக தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை அவர் அமைத்துக் கொண்ட போதிலும் மொழி, பண்பாட்டு தளத்தில் இறுதிவரை பெரியாரின் அடிப்படை சிந்தனையோட்டம் இதுவே.
–Viduthalaiarasu Viduthalaiarasu பதிவு