“பேரறிவாளனை பரோலில் விட சட்டத்தடை இல்லை!” – அமைச்சர் சண்முகம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி ஆக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை பரோலில் விட சட்டத்தில் எந்த தடையும் இல்லை என தமிழக முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளனை சிறையில் இருந்து பரோலில் விடுவிக்குமாறு அவரது தாய் அற்புதம்மாள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுங்கட்சி ஆதரவு எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோரும் வலியுறுத்தினர். இதையடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் சட்ட நிபுணர்களிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியபோது, ‘‘பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது தொடர்பாக சட்டத்துறையின் கருத்தை கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித் திருந்தார்.
இந்த நிலையில், ‘பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டத்தில் எந்த தடையும் இல்லை. விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கலாம்’ என்று சட்டத்துறை சார்பில் பரிந்துரைத்துள்ளேன். முதல்வர் இந்த கோப்புகளின் அடிப்படையில் நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.