சென்னை பாஜக அலுவலக முற்றுகை: பெண்களை தரதரவென இழுத்து சென்றது போலீஸ் – வீடியோ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துவிட்ட மத்திய பாஜக அரசை கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் அடித்து, ரோட்டில் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தது போலீஸ்.

“தமிழினத்திற்கு எதிரான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சி!

ஒருதலைப்பட்சமான ஒருமைப்பாட்டுக்கு கட்டுப்பட மறுப்போம்!”

என்ற முழக்கத்தை முன்வைத்து, 4.10.2016 நண்பகல் 12 மணியளவில், சென்னை, தி.நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகம் அருகில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அவர்களை முன்னேற விடாமல் தடுத்தது போலீஸ். அதைத் தொடர்ந்து அது சாலை மறியலாக மாறியது. போராட்டத்தில் மோடி அரசிற்கு எதிராகவும் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து மோடியின் உருவப்படத்தை எரித்தனர்.

மோடி படம் எரிக்கப்பட்டதால் கோபமடைந்த போலீஸ், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் அடித்து, ரோட்டில் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தது. கைது செய்யப்பட்டோர் அருகாமையில் உள்ள ஸ்ரீமகாலில் தங்க வைக்கப்பட்டனர்.

https://youtu.be/anzZ4TO-_34

பின்னர்  மக்கள் அதிகார அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்ற மோடி அரசின் முடிவு தமிழினத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சி. தமிழர்களுக்கு தண்ணீர் தர கூடாது என கர்நாடகத்தில் சிறுபான்மை தமிழர்களை எதிரியாக அடையாளப்படுத்தி வன்முறை கலவரத்தை நடத்துவது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.தான். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முடியாது என மத்திய சட்ட அமைச்சர் பேசுகிறார். இத்தகைய கலவரத்தின் மூலம் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது.

கர்நாடக கலவரத்தால் ஒரு லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக லாரி உரிமையாளர்களும் வணிகர்களும் பெருமுதலாளிகளும் தெரிவிக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் தண்ணீர் கொடு என மீண்டும் மீண்டும் உத்தரவு போடுகிறது. கர்நாடக அரசு அமல்படுத்தாமல் தொடர்ந்து மீறுகிறது. மத்திய அரசு ஒருசார்பாக ஒதுங்கி நிற்கிறது. தமிழக அரசு மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல் வழக்கு போடுகிறது. கோழியிலிருந்து முட்டையா, முட்டையிலிருந்து கோழியா? என கோர்ட் வாசலிலேயே காவிரி பிரச்சினை சுற்றிக் கொண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கி, தோற்றுப்போய் திணறுகிறது என்பதை எளிதாக காட்டுகிறது.

தமிழகமே பாலைவனமாக மாறக்கூடிய அபாயகரமான பிரச்சினையில் அரசியல்ரீதியாக தமிழக கட்சிகள், அமைப்புகளை ஒன்றுபடுத்தித் தீர்வு காண முயற்சிக்காமல் மீண்டும் மீண்டும் வழக்குப் போடுவதன் மூலம் எந்தத் தீர்வும் கிடைக்காது என்பது தற்போது நிரூபணமாகி விட்டது. காங்கிரஸ், பிஜேபி கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதாலும் தமிழகத்தில் ஒருநாளும் காலூன்றுவது கடினம் என்பதாலும் காவிரிப் பிரச்சினையில் ஓரவஞ்சனையாக நடந்துகொள்கின்றன.

காங்கிரசு, பிஜேபி காவிரியில் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது, சேதுகால்வாய்த் திட்டம், கூடங்குளம், நீட் தேர்வு, கெயில், மீத்தேன் என அனைத்துப் பிரச்சினைகளிலும் ஓரவஞ்சனையாகத்தான் நடக்கின்றன.

தமிழகத்தில் வலுவாக உள்ள சமஸ்கிருத எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு என்ற திராவிட கருத்தியல்களின் மீது ஆர்.எஸ்.எஸ் பிஜேபிக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியும்,. டெல்டா மாவட்டங்களின் நிலக்கரியையும் மீத்தேனையும் கைப்பற்றும் பன்னாட்டு முதலாளிகளின் சதியை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளின் கொள்கையும், காவிரியில்  தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்கு பின்னணியாக இருக்கிறது.

நீர் ஆதாரங்களை பாதுகாக்காமல் ,சீர்குலைத்து, மாநிலங்களுக்கிடையில் நியாயமான பங்கீடு செய்ய மறுத்து மேலும் மேலும் இருமாநில மக்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தியது இந்த ஒட்டுமொத்த அரசு கட்டமைப்புதான். அதனால்தான் சொல்கிறோம். இந்த அரசுக் கட்டமைப்பின் வழியாக தீர்வு சாத்தியமில்லை.

ஆர் எஸ் எஸ் – பிஜேபியை தமிழகத்தில் அரசியல்ரீதியாக சமூகப் புறக்கணிப்பு செய்தாக வேண்டும். காரணம்,  ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆக்கபூர்வமான கொள்கைகளை, மக்கள் பிரச்சினைகளை ஒரு நாளும் பேசுவதில்லை. இனக்கலவரம், மதக்கலவரம், சாதிக்கலவரம் ஆகியவற்றைதான் அடிப்படையாக வைத்து செயல்படுகிறது. இத்தகைய கலவரங்கள் மூலம் சமூகத்தில், அனைவரின் மீதும் எழுதப்படாத பாசிசத்தை நிலைநாட்டிக்கொள்கிறது. இதற்கான காலாட்படையாக நாடு முழுவதும் பல நூற்றுக்கணக்கான பினாமி அமைப்புகளை ஆர் எஸ் எஸ் –  பிஜேபி தோற்றுவித்துள்ளது. இதை வைத்துதான் கர்நாடகாவில் மிகப்பெரிய வன்முறைக் கலவரத்தை நடத்திக்காட்டியது.

தற்போதைய கோவைக் கலவரம் கூட, அப்படியானதுதான். பிணம் திண்ண காத்திருக்கும் கழுகுகள் போல் கலவரத்திற்காக காத்திருக்கிறார்கள். இவர்களுடைய அட்டூழியங்கள் குறித்து யாரும் மாற்றுக் கருத்தே பேசமுடியாது என்ற நிலையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அப்படிப் பேசுபவர்களை படுகொலையும் செய்கிறார்கள்.

இத்தகைய ஆர்.எஸ.எஸ். பிஜே.பியின் பார்ப்பன பாசிசம் இஸ்லாமியர்கள், தலித்துக்கள், மற்றும் பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. இதற்கு தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பு வழியாக பாதுகாத்து கொள்ளவோ தீர்வுகாணவோ முடியாது.

திட்டமிட்டு வன்முறை கலவரம் நடத்துகின்ற  இத்தகைய அமைப்புகளுக்கு ஆதரவாக நிற்கிறது காவல் துறை. கோவை கலவரத்தை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக பல ஊர்களில் எமது தோழர்கள் மீது வழக்கும் கைது நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளது. ஆர்பாட்டம் நடத்தகூட தடைவிதிக்கிறது காவல் துறை.

இன்றைக்கு தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு, தமிழினத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக எதிரியாக அப்பட்டமாக தன்னை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. கும்பல் வெளிப்படுத்தி கொண்டுள்ளது. அதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு போராடுவது மட்டுமல்லாமல் அரசியல் சமூக புறக்கணிப்பு செய்வதை கடமையாக கொள்ள வேண்டும் என கோருகிறோம்.

இன்று ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் தீராத நெருக்கடியில் சிக்கி தீர்வளிக்க முடியாமல் தோற்றுப்போய் மக்களுக்கு எதிராக மாறி நிற்கிறது. இந்த கட்டமைப்பிற்கு வெளியில் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பதை நிகழும் பல்வேறு சம்பவங்கள் வழியாக அனைவரும் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்..

தோழமையுடன்
சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.