பட்டாஸ் – விமர்சனம்

தந்தையை கொன்ற தீயவனை பழிவாங்கி, தாயின் சபதத்தை நிறைவேற்றும் மகனின் கதை தான் ‘பட்டாஸ்’.

நண்பனுடன் சேர்ந்து திருடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நாயகன் தனுஷ், தன் எதிர்வீட்டில் குடியிருக்கும் நாயகி மெஹ்ரீனின் லந்து தாங்க முடியாமல், அவர் வேலை பார்க்கும் குத்துச்சண்டைப் பயிற்சி மையத்தில் உள்ள மெடல், கோப்பைகளைத் திருடுகிறார்.

எனவே, மெஹ்ரீன் சம்பளத்தை ஒரேயடியாகக் குறைப்பதோடு, தொலைந்துபோன பொருட்கள் கிடைக்கும்வரை வேறெங்கும் வேலைக்குச் செல்லக் கூடாது என உத்தரவு போடுகிறார் பயிற்சி மையத்தின் நிர்வாகி. மெஹ்ரீனின் சான்றிதழ்கள் அங்கு இருக்க, தன் தவறுக்கு பிராயச்சித்தமாகவும், தன் மனதுக்குப் பிடித்த பெண் என்பதாலும் அந்த சான்றிதழ்களைத் திருடச் செல்கிறார் தனுஷ்.

இன்னொரு பக்கம், வெளிநாட்டுக்காரன் ஒருவனைக் கொன்ற குற்றத்துக்காக கேரளாவில் உள்ள சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார் சினேகா. தண்டனைக்காலம் முடிந்து வெளியே வரும் சினேகா, வில்லன் நவீன் சந்திராவைக் கொல்வதற்காக, அவனுடைய குத்துச்சண்டைப் பயிற்சி மையத்துக்குச் செல்கிறார். அங்கு, இறந்துவிட்டதாக நினைத்த தன் மகன் தனுஷைப் பார்க்கிறார் சினேகா.

சினேகா – மகன் தனுஷ் பிரிந்தது ஏன்? அப்பா தனுஷ் என்னவானார்? நவீன் சந்திரா வில்லன் ஆனது ஏன்? போன்ற கேள்விகளுக்கு விடைசொல்கிறது மீதிக்கதை.

0a1b

அப்பா (திரவியப் பெருமாள்) – மகன் (பட்டாஸ் என்கிற சக்தி) என இரட்டை வேடங்களில், அந்தந்த கதாபாத்திரங்களுக்குத் தேவையானதை 100 சதவீதம் தந்துள்ளார் தனுஷ். மீசை, தாடியை மழித்தாலே போதும்… சின்னப்பையன் லுக், எந்தவித மெனக்கிடலும் இல்லாமல் தானாக அமைவது தனுஷுக்கு கிடைத்த வரம். திருடனாக மகன் கதாபாத்திரத்தில் அவர் அடிக்கும் லூட்டிகள், நிஜமாகவே பட்டாஸ் ரகம். சதீஷுடன் சேர்ந்து அவர் செய்யும் காமெடிகள், வெடித்துச் சிரிக்க வைக்கின்றன.

அதேசமயம், பொறுப்புள்ள தற்காப்புக்கலை வீரனாக தந்தை கதாபாத்திரத்திலும் தன்னை நிரூபித்துள்ளார் தனுஷ். சங்க இலக்கியங்களில் கூறப்படும் ஆண்மகனின் காதல், வீரம் இரண்டையுமே செம்மையாக வெளிப்படுத்தியுள்ளார். அடிமுறை கலையில் அவர் அடியெடுத்து வைத்ததைப் பார்க்கும்போது, நம் நரம்புக்குள்ளும் ‘ஜிவ்’வென்று ரத்தம் பாய்கிறது.

கன்னியாகுமரி கதாபாத்திரத்தில் அப்பா தனுஷுக்கு மனைவி, மகன் தனுஷுக்கு அம்மா என நிறைவாகச் செய்துள்ளார் சினேகா. சினேகாவின் சினிமா வாழ்க்கையில் பேசப்படும் படமாக இது நிச்சயம் அமையும். படத்தின் மையப் பாத்திரமே சினேகாதான். அவரை வைத்துத்தான் கதையே நகர்கிறது.

அடிமுறைக் கலையை சொல்லித்தரும் ஆசானாக, அந்தக் கதாபாத்திரத்துக்கு உண்டான மரியாதையைத் தன் நடிப்பின் மூலம் நிலைநிறுத்தியிருக்கிறார் நாசர். இந்தப் படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமாகியிருக்கும் ‘கலக்கப்போவது யாரு’ சதீஷ், கிடைக்கிற கேப்பில் அடித்தாடுகிறார். சில பந்துகள் பவுண்டரி, சில பந்துகள் இரண்டு ரன்கள் என எந்தப் பந்தையும் வீணடிக்காமல் அடித்து ஆயிடியிருக்கிறார்.

அவருடன் சேர்ந்து சில இடங்களில் முனீஸ்காந்தும் சிரிக்க வைக்கிறார். மகன் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மெஹ்ரீன், கச்சிதமாக நடித்துள்ளார். தனுஷுக்கு நிகரான கதாபாத்திரமாக வில்லனாக வருகிறார் நவீன் சந்திரா.

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் ஓ.கே. ரகம். அறிவு எழுதி, பாடியுள்ள ‘மவனே’ பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு ரம்யமாக இருக்கிறது.

தமிழர்கள் கண்டுபிடித்த அடிமுறைக் கலையில் இருந்துதான் கராத்தே, ஜூடோ உள்ளிட்ட பிற தற்காப்புக் கலைகள் தோன்றின என்ற விஷயத்தைத் தமிழர் திருநாளில் தமிழனுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது ‘பட்டாஸ்’.