பட்டாம்பூச்சி – விமர்சனம்
நடிப்பு: ஜெய், சுந்தர்.சி, ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி மற்றும் பலர்
இயக்கம்: பத்ரி நாராயணன்
தயாரிப்பு: குஷ்பு சுந்தர்
ஒளிப்பதிவு: எசக்கி கிருஷ்ணசாமி
இசை: நவ்நீத்
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே.அகமது
இது ஒரு சைக்கோ கிரைம் திரில்லர். உடல் கோளாறும், மன பாதிப்பும் உள்ள சீரியல் கொலையாளி ஒருவன், தன்னால் கொடூரமாக கொல்லப்பட்ட நபர்களின் பிணத்தின் அருகே அழகான பட்டாம்பூச்சி படத்தை வரைந்து வைத்துவிட்டுச் செல்கிறான் என்பதால் இப்படத்துக்கு ‘பட்டாம்பூச்சி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். படம் முழுக்க பயங்கர வன்முறை காட்சிகள் விரவியிருப்பதாலும், ரத்தம் பெருக்கெடுத்து ஆறாய் ஓடுவதாலும் இப்படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.
தொடர் கொலைகள் செய்யும் சைக்கோவான சீரியல் கொலையாளி ஒருவனுக்கும், ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் கதைக்கரு.
இஸ்மாயில் என்ற நபரை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் சுதாகர் (ஜெய்). அவனது கடைசி ஆசை என்ன என்று கேட்கிறார்கள். நாளிதழ் ஒன்றின் பெயரைச் சொல்லும் அவன், அதில் பணிபுரியும் பெண் நிருபரான விஜயலட்சுமியை (ஹனி ரோஸ்) பார்க்க வேண்டும் என்கிறான். விஜயலட்சுமி வரவழைக்கப்பட்டு, அவனை சந்திக்க வைக்கப்படுகிறார். அவரிடம் பேசும் சுதாகர், “இஸ்மாயிலை நான் கொலை செய்யவில்லை. நான் செய்யாத கொலைக்காக என்னை தூக்கில் போடப் போகிறார்கள்’ என்று கூறுகிறான். அவன் அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை! ஆனால், ‘இந்த கொலையைத் தான் நான் செய்யவில்லை என்று சொன்னேன். ஆனால் ஏழு கொலைகள் செய்திருக்கிறேன். அந்த கொலைச் செய்திகளில் அடிபட்டதே… பட்டாம்பூச்சி என்ற பெயர்… அது நான் தான்” என்று சொல்லி திடுக்கிட வைக்கிறான்.
விவகாரம் நீதிமன்றத்திற்குச் செல்ல, தூக்குத் தண்டனை நிறைவேற்றம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, சுதாகர் நிபந்தனையுடன் விடுவிக்கப்படுகிறான். அவன் தான் ‘பட்டாம்பூச்சி’ என்ற சீரியல் கொலையாளியா என்பதை 30 நாட்களில் கண்டுபிடிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இதை புலன்விசாரணை செய்யும் பொறுப்பு காவல்துறை அதிகாரி குமரனுக்கு (சுந்தர் சி) வழங்கப்படுகிறது. இறுதியில் சுதாகர் தான் பட்டாம்பூச்சி என்பது நிரூபிக்கப்பட்டதா? அவன் ஏன் சைக்கோ ஆனான்? எதற்காக கொலைகள் செய்தான்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்லுகிறது மீதிக்கதை.
சிறுவயதில் தனது தந்தையாலேயே கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்டு, சைக்கோ ஆகி தொடர் கொலைகள் செய்யும் சுதாகர் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஜெய் வருகிறார். டூஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு அடிக்கடி கழுத்தை அசைத்து சிலுப்பிக்கொள்ளும் மேனரிசம் அவருடைய நடிப்பை மேலும் வித்தியாசமாகக் காட்டுகிறது. சைக்கோத்தனத்தை கண்களிலும், முகத்திலும் காட்ட அவர் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் அவருக்கு கூடுதலாக நல்ல பெயர் கிடைத்திருக்கும்.
சைக்கோவைத் துரத்தி, உண்மையைக் கண்டறியப் போராடும் காவல்துறை அதிகாரியாக வரும் சுந்தர்.சி தனது வழக்கமான நடிப்பை நிறைவாகக் கொடுத்திருக்கிறார். பெண் நிருபராகவும், ஒரு குழந்தைக்குத் தாயாகவும் வரும் ஹனி ரோஸ், அழகாக இருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் சீக்வன்ஸில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
‘வீராப்பு’, ‘ஐந்தாம்படை’ உள்ளிட்டபடங்களை இயக்கிய பத்ரி இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். சைக்கோ கிரைம் திரில்லருக்கான அடித்தளத்தை கச்சிதமாக அமைத்துக்கொண்ட இயக்குனர், திரைக்கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். கதை 1980களில் நடப்பதாக காட்ட வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு முதல் பாதியில் இல்லாதது ஒரு குறை.
எசக்கி கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும், நவ்நீத்தின் இசையும் படத்துக்கு பலம்.
‘பட்டாம்பூச்சி’ – பார்க்கலாம்!