பருந்தாகுது ஊர்குருவி – விமர்சனம்
நடிப்பு: நிஷாந்த் ரூஸோ, விவேக் பிரசன்னா, காயத்ரி, வினோத், கோடாங்கி வடிவேலு மற்றும் பலர்
இயக்கம்: தனபாலன் கோவிந்தராஜ்
ஒளிப்பதிவு: அஷ்வின் நோயல்
படத்தொகுப்பு: நெல்சன் அந்தோணி
இசை: ரெஞ்சித் உன்னி
தயாரிப்பு: லைட்ஸ் ஆன் மீடியா
பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார் & சிவா (டீம் எய்ம்)
நம்பிக்கைக்குரிய உறவினர் துரோகியாக மாறி உயிர் பறிக்க முனைகையில், முன் பின் தெரியாத அன்னியன் உதவிக்கரம் நீட்டி உயிரைக் காப்பாற்ற முயன்றால், அது தான் ‘பருந்தாகுது ஊர்குருவி’ திரைப்படம்.
தமிழ்நாடு – கேரளா எல்லை அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஆதி (நிஷாந்த் ரூஸோ). திருட்டு, அடிதடி போன்ற சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு அடிக்கடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்.
இந்நிலையில், காட்டுக்குள் மாறன் (விவேக் பிரசன்னா) என்ற இளைஞர் பலத்த காயங்களுடன் கொலையுண்டு சடலமாகக் கிடப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் கிடைக்கிறது. காட்டை நன்கு அறிந்த ஆதியை வழி காட்டுவதற்காக அழைத்துக்கொண்டு போகிறார் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் (கோடங்கி வடிவேலு).
காட்டுக்குள் கிடக்கும் மாறனுடைய சடலத்தின் கையோடு ஆதியின் கையை சப்-இன்ஸ்பெக்டர் விலங்கு போட்டு பூட்டிவிட்டு போன் பேச சென்றுவிடுகிறார். சற்று நேரத்தில், சடலமாகக் கிடப்பதாக நினைத்த மாறனுக்கு திடீரென உயிர் வந்து நினைவு திரும்புகிறது. ஆதி அச்சமடைகிறார். அப்போது கைபேசியில் தொடர்புகொள்ளும் யாமினி (காயத்ரி) என்ற பெண், அங்கே பலத்த காயங்களுடன் இருப்பது தனது கணவர் மாறன் என்றும், அவரை காப்பாற்றி கொண்டு வந்தால் ரூ.10லட்சம் தருவதாகவும் ஆதியிடம் கூறுகிறார்.
அதை ஏற்றுக்கொள்ளும் ஆதி, நடக்க இயலாமல் இருக்கும் மாறனைத் தூக்கி சுமந்துகொண்டு சிரமப்பட்டு காட்டுக்குள் பயணிக்கிறார். அப்போது, மாறனைக் கொல்ல நினைக்கும் சூத்திரதாரி யார் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்து, பணத்திற்காக அல்லாமல், ஒரு அப்பாவியின் உயிரை காப்பாற்றியே தீருவது என தீவிரம் கொள்கிறார் ஆதி. அவர்களை மாறனைக் கொல்ல முயன்ற கும்பல் ஒருபுறமும், காவல்துறை மறுபுறமும் துரத்துகின்றன. மாறனை ஆதி காப்பாற்றினாரா? மாறனைக் கொல்ல முயன்ற கும்பலை ஏவியது யார்? எதற்காக கொலை முயற்சி நடக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘பருந்தாகுது ஊர் குருவி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
அறிமுக நாயகனாக இருந்தபோதிலும், ஆதி கதாபாத்திரத்தில் வரும் நிஷாந்த் ரூஸோ, மிகுந்த ஆர்வத்துடன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என எல்லா அம்சங்களிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுகிறார்.
துரோகத்தால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான மாறன் கதாபாத்திரத்தில் வரும் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் சிறப்பாக நடித்திருக்கிறார். உடல் வலியையும், துரோக வலியையும் பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகையாகவும், மாறனின் காதல் மனைவியாகவும் யாமினி கதாபாத்திரத்தில் வரும் காயத்ரி, அழகாகத் தோன்றி, விஷப்பாம்பின் குணாம்சத்தை குறைவின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்.
இன்ஸ்பெக்டர் தர்மராஜாக வரும் வினோத், சப்-இன்ஸ்பெக்டர் போஸாக வரும் கோடங்கி வடிவேலு, ம்ாறனை கொலை செய்ய முயலும் வில்லன்களாக வரும் கௌதம், ராஜேஷ், ஆனந்த், ஆதிக் ஆகியோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்கள்.
ஒரு இரவு, ஒரு பகலில் நடக்கும் கதையில் தேவையில்லாத விஷயங்களை திணிக்காமல் தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும், அதே சமயம் எளிமையாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ். படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நம் கவனத்தை ஈர்த்துவிடும் இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ், இரண்டு கதாபாத்திரங்களை வைத்துகொண்டு காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி ரசிக்க வைக்கிறார்.
அஷ்வின் நோயலின் ஒளிப்பதிவும், ரெஞ்சித் உன்னியின் பின்னணி இசையும் படத்தின் சிறப்பான மேக்கிங்குக்கு மிகப் பெரிய அளவில் கை கொடுத்திருக்கின்றன.
‘பருந்தாகுது ஊர்குருவி – விறுவிறுப்பாக நகரும் படம்; கண்டு களிக்கலாம்!