பாட்னர் – விமர்சனம்

நடிப்பு: ஆதி பினிசெட்டி, யோகி பாபு, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வாணி, ஜான் விஜய், பாண்டியராஜன், முனீஸ்காந்த், ரவி மரியா, ரோபோ சங்கர், தங்கதுரை, அகஸ்டின் மற்றும் பலர்

இயக்கம்: மனோஜ் தாமோதரன்

ஒளிப்பதிவு: ஷபீர் அகமது

படத்தொகுப்பு: பிரதீப் இ.ராகவ்

இசை: சந்தோஷ் தயாநிதி

தயாரிப்பு: ‘Crew Royal Fortuna Creations’ கோலி சூர்யபிரகாஷ்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

நாயகனுடன் ஒரே கட்டிலில் படுத்துறங்கும் நண்பன், காலையில் எழும்போது பெண்ணாக மாறியிருந்தால், அதன்பின் என்னவெல்லாம் நடக்கும் என்பதை வயிறு குலுங்க சிரிக்கச் சிரிக்க சொன்னால்… அதுதான் ‘பாட்னர்’ திரைப்படம்.

கிராமத்தில் அப்பா, தங்கையுடன் வசிக்கும் நாயகன் ஸ்ரீதர் (ஆதி பினிசெட்டி), 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தொழில் தொடங்குகிறார். தொழில் நஷ்டமடைகிறது. கடன் கொடுத்தவன், “அசலை வட்டியுடன் திருப்பிக் கொடு. இல்லையென்றால் உன் தங்கையை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடு” என்று ராவடி செய்கிறான். அவனிடம் வீராப்பாக வசனம் பேசிவிட்டு, அவனது கடனை அடைக்கத் தேவையான பணத்தை தனது நண்பன் கல்யாணிடம் (யோகி பாபுவிடம்)  வாங்கி வருவதற்காக சென்னை செல்கிறார்.

கல்யாண் தன்னிடம் அவ்வளவு பணம் எல்லாம் இல்லை என்று கை விரிக்கிறார். அவரே சட்ட விரோதமான ஹைடெக் திருட்டு வேலைகள் செய்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருப்பது தெரிய வருகிறது. வேறு வழியில்லாமல் அவருடன் கூட்டு சேருகிறார் ஸ்ரீதர்.

அப்போது ஒரு விஞ்ஞானியின் (பாண்டியராஜன்) ஆய்வகத்தில் உள்ள ஒரு முக்கியமான கண்டுபிடிப்பின் ரகசியத்தை திருடிக்கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்றும், இதற்கு 50 லட்சம் ரூபாய் தருவதாகவும் கல்யாண் மற்றும் ஸ்ரீதரிடம் டீல் பேசுகிறார் வில்லன். இவர்கள் சரி என்று சொல்லி, பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

திருடுவதற்காக விஞ்ஞானியின் ஆய்வகத்திற்குப் போகிறார்கள். அங்கே நடக்கும் சில குளறுபடிகளால் குறிப்பிட்ட பொருளைத் திருட முடியாமல் போவதோடு, கல்யாணியை ஊசி ஒன்று குத்திவிடுகிறது. விளைவாக, இரவில் கட்டிலில் ஸ்ரீதரின் அருகில் படுத்துறங்கும் கல்யாண், காலையில் எழும்போது பெண்ணாக – கல்யாணியாக (ஹன்சிகா மோத்வானியாக) – மாறியிருக்கிறார். இதனால் ஏகப்பட்ட காமெடி களேபரங்கள் அரங்கேறுகின்றன.

திருடுவதற்காக பணம் கொடுத்த வில்லன் ஒரு பக்கம் துரத்த, மறுபக்கம் கிராமத்தில் தன் தங்கையை திருமணம் செய்யப் போவதாக கடன்காரன் மிரட்ட, இதற்கு மேலாக கல்யாணியாக மாறியிருக்கும் கல்யாணுடன் ஒரே ரூமில் வசிப்பதால் தன் காதலி பிரியாவினால் (பாலக் லால்வாணியால்) புதுப்புது பிரச்சனைகள் முளைக்க, இந்த சிக்கல்களிலிருந்து ஸ்ரீதர் எப்படி மீள்கிறார் என்பது ‘பாட்னர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1a

ஸ்ரீதர் என்ற நகைச்சுவை நாயகன் கதாபாத்திரத்தில் வரும் ஆதி பினிசெட்டி, வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். இயன்ற வரை சிரிக்கவும் வைக்கிறார். காதலி பாலக் லால்வாணி மற்றும் ஹன்சிகாவிடம் மாட்டிக்கொண்டு அவர் படுகிற தவிப்பு ரசிக்க வைக்கிறது.

கல்யாணி என்ற சிக்கலான கதாபாத்திரத்தை எந்த சிரமமும் இல்லாமல் சிறப்பாகக் கையாண்டு பாராட்டத் தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. பெண் தோற்றத்தில் உள்ள ஆணாக அவர் படும் ரகளையை ரசிக்கலாம்.

நாயகனின் நண்பன் கல்யாணாக வரும் யோகி பாபு எப்போதும் போல அலட்டிக்கொள்ளாமல் சிரிக்க வைக்கிறார்.

நாயகனின் காதலியாக வரும் பாலக் லால்வாணிக்கு நடிக்க வாய்ப்பு மிகக் குறைவு.

அமைச்சர் அக்கினி குஞ்சாக வரும் ரவி மரியா, விஞ்ஞானியாக வரும் பாண்டியராஜன், திருட்டு கம்பெனியின் ஹெச்.ஆர். விக்கிரவாண்டி வைகுண்டமாக வரும் முனீஸ்காந்த், சமாதானமாக வரும் ரோபோ சங்கர், அன்னதானமாக வரும் தங்கதுரை, பிளாக் பெர்ரியாக வரும் அகஸ்தியன், யோகி பாபுவின் காதலியாக வரும் ‘மைனா’ நந்தினி, மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய் என அனைவரும் பார்வையாளர்களை சிரிக்க வைக்க பயன்பட்டிருக்கிறார்கள்.

சுவாரஸ்யமான அடித்தளக் கதையை வைத்துக்கொண்டு, விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, காட்சிகளாலும் வசனங்களாலும் நகைச்சுவையை அள்ளித் தெளித்து காமெடிப்படமாக இதை கொடுத்து பார்வையாளர்களை திருப்திப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் மனோஜ் தாமோதரன்.

ஷபீர் அகமதுவின் ஒளிப்பதிவும், சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.

‘பாட்னர்’ – காமெடிக்கு எதற்கு லாஜிக் என்ற தெளிவுடன் போனால் நிறையவே சிரித்துவிட்டு வரலாம்!

.