பரிவர்த்தனை – விமர்சனம்
நடிப்பு: சுர்ஜித், ஸ்வாதி, ராஜேஸ்வரி, மொகித், சிமேகா, பாரதி மோகன், திவ்யா ஸ்ரீதர், ரயில் கார்த்திக் மற்றும் பலர்
திரைக்கதை, இயக்கம்: எஸ்.மணிபாரதி
ஒளிப்பதிவு: கே.கோகுல்
படத்தொகுப்பு: ரோலக்ஸ்
இசை: ரஷாந்த் அர்வின்
தயாரிப்பு, கதை, வசனம்: ’எம்.எஸ்.வி. புரொடக்ஷன்ஸ்’ பொறி.செந்தில்வேல்
பத்திரிகை தொடர்பு: மணவை புவன்
வணிகத்தில் கொடுக்கல் – வாங்கலை ‘பரிவர்த்தனை’ என்பார்கள். ஒரு காதல் கதைக்கு இது தலைப்பு என்றால்…? யார் யாருக்கிடையில், என்னென்ன பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்படுகிறது அல்லவா? அதற்காகத் தான் இப்படத்துக்கு இந்த தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
பவித்ராவும் (ஸ்வாதி), நந்தினியும் (ராஜேஸ்வரி) கல்லூரித் தோழிகள். படிப்பை முடித்த பிறகு சில ஆண்டுகள் இருவரும் தொடர்பு இல்லாமல் இருக்கிறார்கள். அக்காலத்தில் பவித்ரா திருமணம் ஆகியும், தாம்பத்திய உறவின்றி, கடமையே என்று கணவரும் டாக்டருமான நவீனுடன் (சுர்ஜித்) வாழ்கிறார். நந்தினியோ, தன் பள்ளிப்பருவ காதலனை நினைவில் ஏந்தி, திருமணம் செய்யாமல், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக்கொண்டு வாழ்கிறார்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு தோழிகள் இருவரும் சந்திக்கிறார்கள். நந்தினி மனம்விட்டு பேசுகிறார். அப்போது, திருமணம் செய்யாமல் வாழும் நந்தினி, பள்ளிப்பருவத்தில் காதலித்த, சாதி காரணமாக தன் அம்மாவால் திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டதால், ஊரைவிட்டு வெளியேறி டாக்டராக இருக்கும் நவீன் தான் தனது கணவர் என்பது பவித்ராவுக்கு தெரிய வருகிறது.
கணவர் தன்னோடு சந்தோஷமாக வாழாமல் இருப்பதற்கும் , தோழி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் காரணம் அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் இருப்பதுதான் என்பது புரிந்த நிலையில் பவித்ரா என்ன முடிவு செய்கிறார் என்பதே ‘பரிவர்த்தனை’ திரைப்படத்தின் மீதிக்கதை.
சமீபகாலமாக போதை மருந்து கடத்தல் என்ற பெயரில் துப்பாக்கிச் சண்டையும், ரவுடியிசம் என்ற பெயரில் வெட்டு-குத்துமாக பயங்கர வன்முறைக் காட்சிகள் நிறைந்த படங்கள் தான் தமிழில் வந்து கொண்டிருக்கின்றன. எழில் கொஞ்சும் கிராமம், வயல் பின்னணியில் மென்மையான காதலுணர்வுடன் கூடிய படங்கள் வருவது அபூர்வமாகி விட்டது. அந்த வகையில் ’பரிவர்த்தனை’ அழகிய கிராமத்துப் பின்னணியிலான காதல் கதையாக உருவாகி இருப்பது சிறப்பு.
‘வெத்து வேட்டு’, ‘தி பெட்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.மணிபாரதி இப்படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். காத்திருந்தால் காலம் கடந்தாலும் காதல் கைகூடும் என்ற கருத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க இளமை ததும்பும் காதல் கதையாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார். கிளைமாக்ஸும், அதில் இடம்பெறும் வசனங்களும் பாக்யராஜின் ’அந்த 7 நாட்கள்’ படத்தை ஞாபகப்படுத்தினாலும், அதன் முடிவிலிருந்து இந்த படத்தின் முடிவை புத்திசாலித்தனமாக மாற்றி வைத்திருக்கிறார் இயக்குனர்.
விஜய் டிவியின் ‘நம்ம வீட்டு பொண்ணு’ தொடரின் நாயகன் சுர்ஜித் இப்படத்தில் நாயகன் நவீனாகவும், ‘ஈரமான ரோஜாவே’ தொடரின் நாயகி சுவாதி இதில் நாயகி பவித்ராவாகவும், ஜீ தமிழ் டிவியின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ தொடரில் நடித்துள்ள ராஜேஸ்வரி இதில் இன்னொரு நாயகியான நந்தினியாகவும் நடித்துள்ளனர். இந்த மூவரும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்; என்றாலும், நவீனின் மனைவி பவித்ராவாக வரும் சுவாதி மிக மிக சிறப்பாக நடித்துள்ளார்.
சிறு வயது நவீன் – நந்தினியாக விதுன் – ஹாசினியும், பள்ளிப் பருவத்தில் காதலிக்கும் நவீன் – நந்தினியாக மோகித் – ஸ்மேகாவும் இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.
தேவிப்ரியா, பாரதி மோகன், திவ்யா ஸ்ரீதர், ரயில் கார்த்தி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
கே.கோகுலின் ஒளிப்பதிவு குளுமை. ரிஷாந்த் அர்வினின் இசை இனிமை.
‘பரிவர்த்தனை’ – காதலை காதலிக்கும் அனைவருக்கும் பிடிக்கும்!