“கலைத்தாய் என்னை தத்தெடுத்து இருக்கிறாள்”: பவர்ஸ்டார் சிரிக்காமல் சொன்ன தகவல்!

மதுரையை கதைக்களமாகக் கொண்டு, காதலும் கலாட்டாக்களுமாக ‘பாண்டியும் சகாக்களும்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அப்பு கே.சாமி.

ஜீன் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் இன்று வெளியிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் அதியமான், மனோஜ்குமார், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், ஆச்சி மசாலா நிறுவனர் ஐசக்,  பீ.ஆர்.ஓ யூனியன் செயலாளர் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

பவர்ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, “என்னைப் பற்றியும் நிறைய வதந்திகள். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நான் சினிமாவில் முன்னேறிக்கொண்டே இருப்பேன். கலைத்தாய் என்னை தத்தெடுத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு பாட்டுக்கு நடனமாட அழைத்தார்கள். நான் என்ன சிலுக்கா? என்று கேட்டேன். ஆனாலும், நான் ஆடினால் படம் ஓடும் என்று நம்பி வருகிறார்கள். அவர்கள் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை” என்றார்.

ஃபேஸ் டூ ஃபேஸ்  நிறுவனம் சார்பாக கே.முருகேசன் தயாரித்திருக்கும் இந்த படத்தை, 1970 களில் ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே கையாளப்பட்ட மேஜிக் ரியாலிசம் முறையில் இயக்கியிருப்பதன் மூலம், அந்த வகை படத்தை முதன்முதலாகத் தமிழுக்கு கொண்டுவந்திருக்கிறாராம் இயக்குனர் அப்பு கே.சாமி. படத்தைப் பற்றி மேலும் கூறிய அவர், “பரபரப்பான பல சம்பவங்களின் ஒருங்கிணைப்பாக இந்தப்படம் இருக்கும்… படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்குமாறு பார்த்து கொண்டோம். இந்தப்படத்தில் சமூகத்திற்குத் தேவையான ஒரு நல்ல விழிப்புணர்வு செய்தியும் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.