படஅதிபர் பஞ்சு அருணாசலம் இயற்கை எய்தினார்: பிரபலங்கள் அஞ்சலி
பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலம் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 75.
ஆரம்ப நாட்களில் கண்ணதாசனிடம் உதவியாளராக பணியாற்றிய பஞ்சு அருணாசலம், பின்னாளில் பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் வளர்ந்தார்.
‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர். ‘அன்னக்கிளி’, ‘உல்லாசப் பறவைகள்’, ‘முரட்டுக்காளை’, ‘அன்புக்கு நான் அடிமை’ உட்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘பிரியா’, ‘வீரா’, ‘குரு சிஷ்யன்’, ‘கல்யாணராமன்’, ‘ஜப்பானில் கல்யாணராமன்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘ராசுக்குட்டி’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘சொல்லமறந்த கதை’, ‘மாயக் கண்ணாடி’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் பஞ்சு அருணாசலம்.
‘இளைய தலைமுறை’, ‘என்ன தவம் செய்தேன்’ ‘சொன்னதை செய்வேன்’, ‘நாடகமே உலகம்’, ‘மணமகளே வா’ ,’புதுப்பாட்டு’, ‘கலிகாலம்’, ‘தம்பி பொண்டாட்டி’ ஆகிய படங்களை இயக்கியவர்.
சென்னை தி.நகரில் வசித்து வந்த பஞ்சு அருணாசலம், உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, நடிகை குஷ்பு, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர், பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக பஞ்சு அருணாசலம் உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது மகனும், மகளும் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்ததும், மீண்டும் வீட்டுக்கு உடல் எடுத்து வரப்பட்டு, இறுதிச்சடங்கு வியாழக்கிழமை மாலை நடத்தப்படும் என தெரிகிறது.