பனாமாவுக்கு கடத்தப்பட்ட பாரத மாதா!

பனாமா என்றதும் அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் பனாமா கால்வாய் நினைவுக்கு வரும். முதலாளிகளுக்கு பனாமா என்றதும் பணமா என்றே பொருள் தரும். பனாமா கால்வாயின் புகழுக்கு போட்டியாக பனாமா நாடும் உலகெங்கிலும் உள்ள திருட்டு பணத்தை, ஊழல் சொத்தை, வரி ஏய்ப்பு வருமானத்தை பத்திரமாக பாதுகாக்கும் தொழிலுக்கு பெயர் பெற்றது.

உலகெங்கிலும் பறந்து சென்று இந்தியாவின் புகழை பரப்பி வரும் மோடிஜியின் பணிக்கு பனாமாவும் துணை நிற்கிறது. ஆம் நண்பர்களே, சென்ற வருடம் ஸ்விட்சர்லாந்தில் உள்ள HSBC Geneva ஜெனிவா வங்கியில் 1,100 இந்தியர்களின் கள்ளக் கணக்குகளும் கருப்புப் பணமும் அம்பலத்திற்கு வந்தன. அது ஜெனிவா லீக்ஸ் என்றால் இந்த வருடம் பனாமா லீக்ஸ். பனாமா லீக்ஸில் அலங்கரிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் மேல்.

வரியற்ற சொர்க்கம் என்று அழைக்கப்படும் பனாமா நாடு வட அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவை இணைக்கும் மத்திய அமெரிக்காவில் உள்ளது. இந்நாட்டில் செயல்படும் மொசாக் பொன்செகா Mossack Fonseca, எனும் புகழ் பெற்ற சட்ட மற்றும் முதலாளிகளுக்கு சேவை செய்யும் நிறுவனத்தின் அலுவலக ஆவணங்களை வைத்து இந்த ஊழல் வெளியே பீறியிருக்கிறது. இந்த நிறுவனம்தான் உலகெங்கிலும் உள்ள முதலாளிகள், அதிகாரிகள், பணக்காரர்கள், அரசியல் தலைவர்களின் பணத்தை பதுக்கி வைக்க பினாமி நிறுவனங்களை துவக்கி பராமரித்து வரும் திருப்பணியினைச் செய்கிறது. பினாமி நிறுவனங்களை ஆரம்பிப்பதை ஒரு தொழிற்சாலை உற்பத்தி போலவே அந்நிறுவனம் செய்து வருகிறது.

ஒரு நபர் இந்நிறுவனத்திற்கு கட்டணத்தையோ கமிஷனையோ வெட்டினால் அவருக்காக உலகெங்கிலும் உள்ள வரியற்ற மற்றும் வரிச் சலுகை நாடுகளில் நிறுவனங்களை துவக்கி சொத்துக்கள், வருமானத்தை காப்பாற்ற இவர்கள் ஏற்பாடுகளையும், பராமரிப்புகளையும் செய்வார்கள். ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை சேமிக்க முடியுமென்றால் பனாமாவில் நேரடி வங்கிக் கணக்கு ஆரம்பிக்க முடியாது. அதற்கு  பதிலாக பனாமாவில் ஏதாவது ஒரு உப்புமா கம்பெனி ஆரம்பித்து அதில் ஆ யிரம் ரூபாய் முதலீடு போட்டு கம்பெனியின் வங்கிக் கணக்கில் நீங்கள் பில்லியன் கணக்கில் பணத்தை போட்டு வைக்கலாம். இந்த திருட்டு பனாமா பாணி ஸ்பெஷல்.

உலக ஊடக வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான ஊழல் கசிவு செய்திகளை பனாமா லீக்ஸ் கொண்டிருக்கிறது. இதற்காக வாஷிங்டனில் உள்ள சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டியக்கத்தின் மூலம் 80 நாடுகளைச் சேர்ந்த நானூறு செய்தியாளர்கள் – நூறு ஊடக நிறுவனங்கள் பனாமா லீக்ஸ் புலனாய்வில் பங்கேற்றனர். இந்தியாவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடும் இதில் பங்கேற்றது. கடந்த ஒரு வருடமாக இந்த புலனாய்வு நடவடிக்கைகள் நடந்து வந்தன.

பனாமாவின் மொசாக் பொன்செகாவின் வாடிக்கையாளர்களில் உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் பலர் உண்டு. சர்வதேச காலபந்து சம்மேளனங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த டாமியானி, எஜினியோ பிகரிடோ போன்றோரும் இந்த திருட்டு பண பதுக்கலில் உள்ளவர்களே!

மொசாக் பொன்செகா நிறுவனத்திதன் பணி என்ன ? பனாமா நாட்டின் சட்டப் பணி நிறுவனமாக பதிவு செய்து கொண்டிருக்கும் மொசாக் பொன்செகா உலகெங்கிலும் உள்ள பினாமி, அனாமதேய நிறுவனங்களை உருவாக்குகிறது. இந்த அனாமதேய நிறுவனங்களின் மூலம் அதன் உரிமையாளர்களின் பண பரிவர்த்தனைகள், ஒப்பந்தங்கள், வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் திரைமறைவாக செய்ய முடியும். இதற்காகவே உலகெங்கும் 35 நாடுகளில் அலுவலகங்களை வைத்துக்கொண்டு மொசாக் பொன்செகா நிறுவனம் செயல்படுகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான அனாமதேய நிறுவனங்களை உருவாக்கி, விற்பனை செய்து, மேலாண்மையும் செய்து வருகிறது மொசாக் பொன்செகா. சூரிச், இலண்டன், ஹாங்காங் போன்ற முக்கியமான நாடுகள் – நகரங்களில்கூட மொசாக்கின் வரி ஏய்ப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

ஒரு தனிநபர் குறைந்தபட்சம் ஆயிரம் டாலர் அல்லது 66,290 ரூபாயை அளித்தால் மோசாக் நிறுவனம் ஒரு அனாமதேய நிறுவனத்தை வாங்கித் தரும். இதனினும் அதிகமாக கட்டணம் செலுத்தினால் போலி இயக்குநர்களை நியமிப்பது, வாடிக்கையாளர் விரும்பும் நபர்களுக்கு பங்குகளை மாற்றித் தருவது அனைத்தையும் ஏற்பாடு செய்கிறது இந்த மாமா கம்பெனி.

மொசாக்கை அம்பலப்படுத்திய இந்த பனாமா லீக்ஸ் எப்படி நடந்தேறியது? ஒரு அனாமதேய ஆர்வலர் மூலம் ஜெர்மன் பத்திரிகையான Süddeutsche Zeitung-க்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தகவல் கிடைத்தது. அதில் மொசாக் பொன்செகா நிறுவனத்தின் அலுவலக ஆவணங்கள் பல்லாயிரக்கணக்கில் இருந்தது தெரிய வந்தது. கணினி மொழியில் சொன்னால் டேட்டாக்களின் அளவு 2.6 டெராபைட்ஸ் ஆகும். இந்த ரகசிய தகவல்களை அளித்தவர் பதிலுக்கு பணமோ அல்லது எந்த நிதி சார்ந்த இலாபத்தையோ எதிர்பார்க்காமல், தன் பாதுகாப்பை மட்டும் உறுதி செய்துகொண்டார்.

அதன்படி உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் பிரபலங்கள் இந்நிறுவனத்தின் மூலம் சொத்துக்களை பதுக்கி, பிதுக்கி, விரித்து கல்லா கட்டுகின்றனர். அதில் ரசியா அதிபர் புதினுக்கு நெருக்கமானவர்கள், சீன அதிபர், சவுதி மன்னர் குடும்பம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், கால்பந்து வீரர் மெஸ்ஸி, லிபிய அதிபர் இறந்து போன கடாஃபி உள்ளிட்ட பலர் உண்டு. மேலும் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் வண்டவாளங்கள் சந்திக்கு வந்திருக்கின்றன. அதில் வெளிநாடுகளில் இவர்களது கள்ள – பினாமி நிறுவனங்கள், அறக்கட்டளைகள், ட்ரஸ்ட்டுகள் போன்றவற்றை மொசாக் பொன்செகா நடத்தி வருகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு கிடைத்த 36,000 கோப்புகள் மற்றும் 234 இந்தியர்களது கடவுச்சீட்டுக்களை வைத்து இந்த புலனாய்வை அந்நாளேடு நடத்தியிருக்கிறது. அதன்படி 300-க்கும் மேற்பட்ட முகவரிகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்து சோதித்திருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இந்த ஆவணங்களின் படி மொசாக் பொன்செகா நிறுவனம் கிரமமாக உலக பணக்காரர்களின் முதலீடுகளைப் பெற்றுக்கொண்டு அவற்றை வரி ஏய்ப்பு இதர மோசடிகளுக்கு வசதியாக மேலாண்மை செய்வது பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கசிய வந்த ஆவணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே ஐந்து இலட்சம் ஆகும். அவை மின்னஞ்சல், பிடிஎஃ.ப், புகைப்படக் கோப்புகள் மற்றும் மொசாக் நிறுவனத்தின் டேட்டா பேசில் உள்ள சுருக்கமான செய்திகள் ஆகும். இந்த விவரங்களின் காலம் 1970 முதல் 2016 வரை ஆகும்.

அந்த பட்டியலில் உள்ள சில இந்திய முதலைகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கிறது.

ஐஸ்வர்யா ராய்

“எதிர்காலத்தில் நான் அன்னை தெரசாவாக ஆவேன்” என்று உலக அழகிப் போட்டியில் கிளிசரின் கண்ணீர் சிந்தும் சடங்கை உறுதிப்படுத்திய ஐஸ்வர்யா, பிரிட்டீஷ் விர்ஜீன் தீவுகளில் இருக்கும் ஆமிக் பார்ட்னர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குநராகவும், பங்குதாரராகவும் இருக்கிறார். இவரது தந்தை கிருஷ்ண ராய், தாய் விரந்தா கிருஷ்ணா ராய், சகோதரர் ஆதித்யா ராய் அனைவரும் அந்த உப்புமா கம்பெனியில் இயக்குநர்களாக 2005-லிருந்து இருக்கிறார்கள். 2008-ல் இந்தக் கம்பெனி கலைக்கப்படுவதற்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் மட்டும் இயக்குநரிலிருந்து பங்குகள் வைத்திருக்கும் பங்குதாரராக மாற்றப்பட்டார்.

அமிதாப் பச்சன்

ஐஸ்வர்யா ராயின் மாமனாரும், பிரபல இந்தி நட்சத்திரம் மற்றும்‘ஜனகன மண – பணம்’ புகழ் அமிதாப்பச்சன் அவர்கள் பஹாமா மற்றும் பிவிஐ British Virgin Islands பகுதியில் நான்கு கப்பல் கம்பெனிகளில் இயக்குநராக இருந்தார். இவை 1993-ம் ஆண்டில் செட்டப் செய்யப்பட்ட நிறுவனங்கள். இந்நிறுவனங்களின்ன் சான்றளிக்கப்பட்ட கூட்டு மூலதனம் ஐயாயிரம் முதல் ஐம்பதாயிரம் டாலர் வரை இருந்தாலும் அவர்களின் வர்த்தகம் பல மில்லியன் டாலர்களைத் தாண்டும்.

சமீர் கெகிலத்

இந்தியாபுல்ஸ் எனும் நிறுவனத்தின் முதலாளியான சமீர் கெகிலத் இலண்டனில் மூன்று முக்கியமான சொத்துக்களை வாங்கியிருக்கிறார். இதற்கான பரிவர்த்தனைகளை கர்னால், தில்லி, பஹாமாஸ், ஜெர்ஜி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் – ஊர்களில் இருக்கும் அவரது குடும்ப நிறுவனங்கள் மூலம் நடந்திருக்கின்றன. இலண்டனில் இருக்கும் அந்த சொத்துக்கள் தற்போது குடியிருப்பு மற்றும் ஓட்டல் கட்டுமானத் திட்டங்களாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை 2012 அக்டோபரில் ஏற்படுத்தப்பட்ட சமீர் கெகலத்தின் குடும்ப ட்ரஸ்ட் மூலம் கவனித்துக் கொள்கிறார்கள்.

 கே.பி சிங்

டி.எல்.எஃப் நிறுவனரான சிங், 2010-ம் ஆண்டில் தனது மனைவி இந்திராவை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டு பிரிட்டீஷ் விர்ஜின் தீவுகளில் ஒரு கம்பெனியை வாங்கியிருக்கிறார். மேலும் 2012-ம் ஆண்டில் மகன்  ராஜிவ் சிங் மற்றும் மகள் பியா சிங் மூலம் இரண்டு கம்பெனிகள் நிறுவப்பட்டன. இம்மூன்று நிறுவனங்களின் மதிப்பு சுமார் பத்து மில்லியன் டாலரைத் தாண்டும். இந்திய மதிப்பில் 66,24,54,500 ரூபாய் ஆகும். கே.பி.சிங்கின் ஒன்பது குடும்ப உறுப்பினர்கள் இத்தொழிலில் இருப்பதாக தெரிகிறது.

இவர்களின்றி அப்பல்லோ டயரின் நிறுவனர், அதானி குழுமத்தின் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, அரசியல்வாதிகளான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷிஷீர் பஜோரியா, தில்லி லோக்சத்தா கிளையின் தலைவரான அனுராக் கேஜ்ரிவால் ஆகியோரும் இந்த வெளிநாட்டு திருட்டுக் கம்பெனிகளின் மூலம் தமது சொத்துக்களை பதுக்கி வருகின்றனர்.

இறந்து போன மும்பை தாதாவான இக்பால் மிர்ச்சியும் பட்டியலில் உண்டு. பல முகவரிகள் ஏதோ ஒரு இடத்தை குறிப்பது உண்மையென்றாலும் அதன் உரிமையாளர்களை வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்திருக்கின்றன.

இப்படி சில முதலாளிகளும், பிரபலங்களும் மட்டும் வெளிநாட்டில் பினாமி கம்பெனிகளை  உருவாக்கி சொத்துக்களை பாதுகாக்கவில்லை. இந்தியாவில் நடக்கும் பல்வேறு வணிக நடவடிக்கைகள் – கிரிக்கெட் அணிகளை விலைக்கு வாங்கியது உட்பட – இத்தகைய வெளிநாட்டு பினாமி கம்பெனிகளின் பண பரிவர்த்தனைகளோடு தொடர்பில் இருக்கின்றன. இவர்களில் சிலர் சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறையின் கண்காணிப்பிலும் இருந்திருக்கின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி 2003-க்கு முன்பு வரை ஒரு இந்தியக் குடிமகன் இந்திய பணத்தை சுதந்திரமாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது. பிறகு 2003-ம் ஆண்டில் அதை மாற்றி வருடத்திற்கு 25,000 டாலர் வரை எடுத்துச் செல்லலாம் என்றும் தற்போது அதை வருடத்திற்கு 2,50,000 டாலர் (1,65,60,612 ரூபாய்) என்றும் மாற்றியிருக்கிறார்கள். எனினும் இந்தப் பணத்தை வைத்து ஒரு தனிநபர் வெளிநாடுகளில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமே அன்றி அந்த நிறுவனத்தையே வாங்கவோ நிர்மாணிக்கவோ முடியாது. பனாமா லீக்ஸ் ஊழலின்படி உள்ள கள்ள நிறுவனங்கள் அனைத்தும் இந்திய சட்டப்படியே சட்ட விரோதமானவைதான். 2013-ஆகஸ்டில்தான் இந்தியர்கள் – தனிநபர்கள், வெளிநாடுகளில் மூலதனம் இடுவது வெளிநாட்டு நேரடி முதலீட்டு சாளரத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டது. பனாமா ஊழல் அதற்கும் முற்பட்டவை.

இதன்மூலம் அழுகி வரும் முதலாளித்துவத்தின் இருண்ட முகம் உலக மக்களின் முன் அம்பலப்பட்டு போயிருக்கிறது. மொசாக் பொன்செகா நிறுவனத்தின் ஆவணங்கள்படி உலகில் உள்ள பெரும் வங்கிகள், சட்ட நிறுவனங்கள், சொத்துக்களை மேலாண்மை செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேச அளவில் பிரபலங்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், கால்பந்து சங்க நிர்வாகிகள், மோசடிக்காரர்கள், போதை பொருள் கடத்துபவர்கள் அனைவரது சொத்துக்களை இரகசியமாக மேலாண்மை செய்யப்படுவது தெரிய வருகிறது. இப்படி முதலாளிகளும் அவர்களின் உலகைச் சேர்ந்தோரும் ஏன் திருட்டுத்தனமாக பணத்தை பதுக்க வேண்டும்?

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தனிநபர்கள் மேலும் மேலும் சமூக சொத்துக்களை சுவீகரிப்பது நடந்துகொண்டே இருக்கும். சுரண்டலின் வரம்பு குறைய குறைய, ஏதுமற்ற மக்களின் வாங்கும் திறன் குறைய குறைய முதலாளிகளின் இலாபம் குறைகிறது. அதை குறையாமல் பார்த்துக் கொண்டால்தான் இலாபம் எனும் பகாசுர பசி அடங்கும் என்பதால் முதலாளிகள் எல்லாவிதமான திருட்டுத்தனங்களிலும் இறங்குகிறார்கள். அமெரிக்க வீட்டு வசதி கடன் நெருக்கடி முதல் கிரீஸ் நாடு திவாலானது வரை அதன் சமீபத்திய சாதனைகள் பெரும் பிரச்சினைகளை முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்படுத்தி வருகின்றன.

அதன் தீர்வுகளில் ஒன்றாகத்தான் இந்த பனாமா மோசடிகளை ஏற்பாடு செய்து நிதியை அமுக்குகின்றனர். தற்போதைய மோசடி விவரங்களில் ரசிய அதிபர் புதின் நண்பர், சீன அதிபர் வட்டாரங்களை குறிவைத்து மேற்கத்திய ஊடகங்கள் பேசுகின்றன. மேலும் பட்டியலில் உள்ள இங்கிலாந்து கேமரூன் கூரூப் ஆட்களையெல்லாம் பி.பி.சியோ இன்ன பிற மேற்கத்திய ஊடகங்களோ பேசுவதில்லை. அவர்கள் திரும்பத் திரும்ப புடின், கடாபி, சிரிய அதிபர் அசாத் என்றே பேசுகிறார்கள். ஒரு வகையில் இந்த அம்பலப்படுத்தல் அமெரிக்காவிற்கு ஆதரவான முறையில் எதிர்நாடுகளை குறிவைத்து இருக்கலாம். இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய முதலாளிகள் சைவப் புலி என்பதல்ல. ஊழலைப் பொறுத்த வரை முதலாளிகள் அல்லது ஏகாதிபத்திய நாடுகளின் முரண்பாடுகளுக்கேற்பவும் வெளியே வரலாம். மேலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சட்டப்பூர்வமாகவே கொள்ளையடிப்பதற்கும், பதுக்கி வைப்பதற்கும் நிறைய ஏற்பாடுகள் இருப்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

எது எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரை இந்த பனாமா ஊழல் அக்மார்க் தேசபக்தர்களின் யோக்கியதையை சந்திக்கு கொண்டு வந்து விட்டது. கருப்புப் பணத்தை கொண்டு வர மோடி, உச்சநீதிமன்றங்களின் சவால்கள், சபதங்களின் உண்மை முகத்தை பனாமா காட்டுகிறது. சென்ற தேர்தலில் மோடிக்கு ஸ்பான்சர் செய்த அதானி குழுமம், காங்கிரசுக்கு நெருக்கமான டி.எல்.எப் அனைத்து வகை முதலாளிகளும் எப்படி நம் நாட்டு மக்கள் பணத்தை திருட்டு வழிகளில்  கடத்திச்சென்று பதுக்குகின்றனர் என்பதை பனாமா தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் அமிதாப், மோடி விமானப் பயணத்தின் நிரந்தரக் கூட்டாளி அதானி போன்ற செய்திகளைப் பார்க்கும்போது பனாமா ஊழல் குற்றவாளிகளை விசாரிப்போம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சொல்வது அயோக்கியத்தனமானது.

தமிழகத் தேர்தலில் அம்மா, அண்ணி, விஜயகாந்த், வைகோ என்று அக்கப் போர்களையே பரபரப்பு செய்திகளாக கடத்திக் கொண்டிருக்கும்போது இந்த அமைப்பின் யோக்கியதை என்ன என்பதை பனமா முகத்தில் அறைந்து காட்டுகிறது. இராமநாதபுரத்தில் சூரிய ஒளி மின்தகடுகள் திட்டத்திற்காக தமிழக மக்களின் பணத்தை பிக்பாக்கெட் அடிக்கும் அதானி குழுமம் அதை பனாமாவில் கொண்டு போய் வட்டிக்கு விடுகிறது. இங்கே அம்மா முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் கட்டிங்கும், கமிஷனும் கொடுக்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனையை எப்படியாவது தொடர வேண்டும் என்று அ.தி.மு.க அரசு வெறியாக இருப்பதற்கும், அதன் பொருட்டு இன்றும் தேசத்துரோக வழக்கு தொடுப்பதற்கும் மது தயாரிப்பு பணம் பெருமளவு சேருவதையும் அது பனாமா போன்ற வரியில்லா சொர்க்கங்களில் பாதுகாக்கப்படுவதையும் யார் மறுக்க முடியும்?

ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று அ.தி.மு.க ஏற்பாடு செய்ய, டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும் என மக்கள் அதிகாரம் உறுதியுடன் போராடுகிறது. தேர்தல் அரசியல் ஒரு ஏமாற்று என்பதை பனாமா ஓங்கி உரைக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

நன்றி: வினவு டாட்காம்