ஆட்சியை கவிழ்க்காமல் முதல்வரை மட்டும் மாற்ற களம் இறங்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்!
அதிமுகவின் பழனிச்சாமி அணி, பன்னீர்செல்வம் அணி ஆகிய இரண்டும் நேற்று இணைந்ததை அடுத்து, தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே.சசிகலா விரைவில் நீக்கப்படலாம் என தகவல் வெளியானது.
இதனால் ஆவேசம் அடைந்துள்ள துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், அதிமுக ஆட்சியைக் கவிழ்க்காமல், முதல்வர் பழனிச்சாமியையும், அவரது அமைச்சரவை சகாக்களையும் பதவியிலிருந்து நீக்கும் திட்டத்துடன் இன்று (ஆகஸ்ட் 22) காலை 10 மணியளவில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.
“எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு இழந்துவிட்டதால் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட உத்தரவிட வேண்டும்” என கோரும் கடிதத்தை அவர்கள் ஆளுநரிடம் வழங்கினர். அந்தக் கடிதத்தில், “முதல்வரை மாற்ற வேண்டும்” என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆளுநரை இன்று சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் விவரம்:
செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிபட்டி), பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), எம்.ரங்கசாமி (தஞ்சாவூர்), எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்), எஸ்.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), எஸ்.டி.கே.ஜக்கையன் (கம்பம்), ஆர்.சுந்தர்ராஜ் (ஒட்டப்பிடாரம்), ஆர்.தங்கதுரை (நிலக்கோட்டை), கே.கதிர்காமு (பெரியகுளம்), பி.வெற்றிவேல் (பெரம்பூர்), எஸ்.முத்தையா (பரமக்குடி), டி.ஏ.ஏழுமலை (பூந்தமல்லி), எம்.கோதண்டபாணி (திருப்போரூர்), ஆர்.முருகன் (அரூர்), ஆர்.பாலசுப்பிரமணியன் (ஆம்பூர்), ஜெயந்தி (குடியாத்தம்), என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்).