“இந்தியா நடத்தியது தாக்குதல் அல்ல; துப்பாக்கிச்சூடு தான்!” – பாகிஸ்தான் அறிவிப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த முகாம்கள் பற்றி உளவுத்துறை கொடுத்திருந்த தகவலை அடுத்து, ஒருவாரமாகவே இவை கண்காணிக்கப்பட்டு இன்று தாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கண்டித்திருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர், “இந்தியா சொல்வது போல் இது தாக்குதல் அல்ல; வெறும் எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூடு தான்’ என்றும் சொல்லியிருக்கிறார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு இந்திய தாக்குதலை பற்றி கூறியிருப்பதாவது :
“எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டை ‘ராணுவத் தாக்குதல்’ என மிகைப்படுத்தி கூறி, ஊடகங்களில் புகழ் அடைய விரும்புகிறது இந்தியா. அப்படி தாக்குதல் எதுவும் நடத்தப்படுமானால் அதற்கு சரியான பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயாராகவே இருக்கிறது.”