படவெட்டு (மலையாளம்) – விமர்சனம்
நடிப்பு: நிவின் பாலி, அதிதி பாலன், ஷாமி திலகன், ஷினே டாம் சக்கோ, இந்த்ரன்ஸ், விஜயராகவன், மனோஜ் ஓமன், ரம்யா சுரேஷ் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: லிஜு கிருஷ்ணா
ஒளிப்பதிவு: தீபக் டி.மேனன்
இசை: கோவிந்த் வசந்தா
படத்தொகுப்பு: ஷாபிக் முகமது அலி
தயாரிப்பு: யோட்லீ பிலிம்ஸ் & சன்னி வாய்ன் புரொடக்சன்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
’படவெட்டு’ என்ற மலையாளச் சொல்லுக்கு ’யுத்தம்’ என்பது பொருளாம். யுத்தம் என்ற தலைப்பைக் கொண்டுள்ள இந்த படத்தில், யுத்தம் புரிவது யார்? எதற்காக யுத்தம்? யாருக்கு எதிராக யுத்தம்? படம் என்ன சொல்லுகிறது? பார்க்கலாம்.
கேரள மாநிலத்தில், விவசாயத்தை முக்கியத் தொழிலாக – வாழ்வாதாரமாக – கொண்ட கண்ணூரில் உள்ள மலூர் என்ற கிராமத்தில் இப்படக்கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் வசிப்பவர் ரவி (நிவின் பாலி). தடகள வீரர். ஆனால், ஒரு விபத்தில் ஏற்பட்ட கால்முறிவு அவர் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடுகிறது. அதன்பின் அவர் சதா உள்முகமாக சிந்தித்துக் கொண்டிருப்பவராகவும், சோம்பல் மிகுந்தவராகவும் மாறிப்போகிறார். அவரது சிறிய வீட்டில் விளையாடுவதையும் சும்மா உட்கார்ந்திருப்பதையும் தவிர அவர் வேறு எதையும் செய்வதில்லை – மற்றொரு சம்பவம் அவரது வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை புரட்டிப் போடும் வரை,
அந்த சம்பவம் குய்யாலி (ஷாமி திலகன்) என்ற அரசியல்வாதியின் சுயநலத்தால் நிகழ்கிறது. அதாவது, விவசாயத்தை நம்பியிருக்கும் மலூர் கிராமத்தில், கிராம மக்களின் தேவைகளை கிராம சபை நிர்வாகிகள் பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள். இந்நிலையில், மக்களுக்கு இலவசத் திட்டங்களை அறிவித்து அந்த கிராமத்தில் காலூன்றும் அரசியல் கட்சியின் தலைவனான குய்யாலி, அந்த கிராமத்து விவசாய நிலங்களை அபகரிக்க திட்டம் போடுகிறான். குய்யாலியின் சதித்திட்டத்தின் முதல் இலக்காக இருக்கும் ரவி, உண்மையை உணர்ந்து, பொங்கி எழுந்து, புரட்சிகர செயல்பாட்டாளராக மாறி, கிராம மக்களின் ஆதரவுடன் குய்யாலியின் அயோக்கியத்தனத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதை உணர்ச்சிகரமாக சொல்லுகிறது ‘படவெட்டு’ திரைப்படம்.
கால்முறிவால் பாதிக்கப்பட்ட ரவி கதாபாத்திரத்தில் வரும் நிவின் பாலி அசால்டாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விரக்தியும், சோம்பலும் மிகுந்த இளைஞர் பாத்திரத்துக்கு அவரது உடல்மொழி பொருத்தமாக இருக்கிறது, பின்னர் இந்த சமூக அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் எரிமலையாக மாறி அவர் புரட்சிக்குழம்பைத் தெறிக்க விடுவது அழகோ அழகு.
நாயகியாக வரும் அதிதி பாலனுக்கு காதல் காட்சிகளோ, டூயட் பாடல்களோ இல்லை. என்றாலும், பார்வையாலேயே ஆழமான காதலை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
குய்யாலி என்ற அயோக்கிய அரசியல் தலைவன் பாத்திரத்தில் வில்லனாக வரும் ஷாமி திலகன், இயல்பான நடிப்பு மூலமே மிரட்டலான வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். நாயகனின் அத்தையாக வரும் ரம்யா சுரேஷ் மற்றும் ஷினே டாம் சக்கோ, மனோஜ் ஒமன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் கவனிக்கத்தக்க விதத்தில் நடித்திருக்கிறார்கள்.
’விவசாயிகள் பாதிக்கப்படும்போதும், சுயநல அரசியல்வாதிகள் தங்களின் சூழ்ச்சி விளையாட்டுகளைத் தொடரும்போதும், ஒரு சாமான்ய மனிதன் பொங்கி எழுந்து இந்த சமூக அமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர போராடுகிறான்’ என்ற ஒருவரிக் கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் லிஜு கிருஷ்ணா. படம் முடியும் தறுவாயில் நாயகனும், விவசாயிகளும் எழுப்பும் முழக்கங்களில் பிரசார நெடி இருந்தாலும், அவை பார்வையாளர்களின் நரம்புகளை முறுக்கேறச் செய்வதோடு, இயக்குனரின் அரசியல் சார்பையும் பிரகடனப்படுத்துகின்றன. பாராட்டுகள்.
கோவிந்த் வசந்தாவின் இசையமைப்பில் நாட்டுப்புற சாயலுடன் கூடிய பாடல்கள், அனல் பறக்கும் புரட்சிக் கவிதைகள், பின்னணி இசை என அனைத்தும் அருமை.
தீபக் டி.மேனனின் கேமரா கிராமத்தின் அழகை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது. நாயகன் காட்டுப்பன்றியை துரத்தும் இரவு காட்சியில் ஒளிப்பதிவு சூப்பர்.
’படவெட்டு’ – அனைத்துத் தரப்பினரும் பார்த்து, ரசித்து கொண்டாடத் தக்க படம்! இதுபோன்ற அழுத்தமான அரசியல் படங்கள் தமிழிலும் வராதா என நம்மை ஏங்க வைக்கும் படம்!