பண தட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நாடாளுமன்ற பொது கணக்கு குழு சம்மன்!
நாட்டில் நிலவும் பணத் தட்டுப்பாடு குறித்து விளக்கம் அளிக்க நேரில் வருமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு சம்மன் அனுப்பியுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதிக்குள் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு முன்பு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ஆம் தேதி நரேந்திர மோடி அறிவித்தார். இதனால் நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தினமும் வங்கி வாசல்களிலும், ஏடிஎம் வாசல்களிலும் மக்கள் காத்திருக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுபாடு ஒரு வாரத்தில் சரியாகி விடும் என்று மோடி கூறினார். 50 நாளில் சரியாகும் என்று பின்னர் அறிவித்தார் மோடி. 25 நாட்களாகி விட்டது. மக்கள் பணத்திற்காக அலைமோதி வருகின்றனர். “இந்த நிலை இன்னும் மூன்று மாதம் முதல் 6 மாதம் வரை நீடிக்கும்” என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திடீரென வெடிகுண்டு வீசியிருக்கிறார்.
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு குறித்து விளக்கம் தர டிசம்பர் 15ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகுமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் நிதித்துறை செயலாளர், நித்தம் நித்தம் புதுசு புதுசாய் ஒரு அறிவிப்பு வெளியிட்டுவரும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்த தாஸ் ஆகியோரும் ஆஜராக வேண்டும் என்று நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் வீரப்ப மொய்லி உத்தரவிட்டுள்ளார்.