‘பானி பூரி’ (இணையத் தொடர்) – விமர்சனம்

நடிப்பு: லிங்கா, சாம்பிகா, இளங்கோ குமாரவேல், கனிகா, வினோத் சாகர், ஸ்ரீகிருஷ்ண தயாள், கோபால் மற்றும் பலர்

இயக்கம்: பாலாஜி வேணுகோபால்

ஒளிப்பதிவு: பிரவீன் பாலு

படத்தொகுப்பு: பி.கே

இசை: நவ்னீத் சுந்தர்

தயாரிப்பு: ஃபுல் ஹவுஸ் எண்டர்டெய்ன்மெண்ட்

ஓடிடி தளம்: ஷார்ட்பிளிக்ஸ்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)

எந்திரமயமான இன்றைய கார்ப்பரேட் முதலாளிய சமூக அமைப்பில், பொருளுற்பத்தி மற்றும் வினியோக நடைமுறைகளில் மட்டுமல்ல, மனிதர்களுக்கு இடையிலான உணர்வுப்பூர்வமான உறவுகளிலும் மிகப் பெரிய மாற்றங்கள், சிக்கல்கள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றில் ஓர் உறவுத்தளமான ஆண் – பெண் உறவில் நிகழ்ந்துவரும் மாற்றங்களையும், குழப்பங்களையும் மையமாக வைத்து, சிறப்பாக உருவாகியுள்ள ‘பானி பூரி’ என்ற 8 எபிசோடுகள் கொண்ட இணையத் தொடர் ஷார்ட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த இணையத் தொடருக்கு ‘பானி பூரி’ என பெயர் சூட்டப்பட்டிருப்பதால், இந்த இணையத் தொடருக்கும் பானி பூரி என்ற தின்பண்டத்துக்கும் தொடர்பு ஏதாவது இருக்குமோ என குழப்பிக்கொள்ள வேண்டாம். தொடரில் நாயகன் லிங்காவின் பெயரான தண்டாயுதபாணியில் இருந்து பானியையும், நாயகி சாம்பிகாவின் பெயரான பூர்ணிமாவில் இருந்து பூரியையும் எடுத்து, இணைத்து, ‘பானி பூரி’ என பெயர் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு தான்.

கதை என்னவென்றால், நாயகன் பானியும் (லிங்கா), நாயகி பூரியும் (சாம்பிகா) ஒருவரையொருவர் உளமார காதலிக்கிறார்கள். பூரியை திருமணம் செய்துகொண்டு குடும்பமாக வாழ வேண்டும் என்று பானி ஆசைப்படுகிறான். ஆனால், தனது தோழியின் கல்யாண வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால், காதலிக்கும் ஆண்களின் அன்பு போலியானது என்றும், திருமணம் ஆன பிறகு அது மாறிவிடும் என்றும் நினைத்து அச்சம் கொள்ளும் பூரி, பானியுடனான காதலை முறித்துக்கொள்கிறாள்.

பூரியின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன என தெரிந்து கொள்வதற்காக  அவளது வீட்டுக்கு பானி செல்ல, விஷயம் பூரியின் அப்பாவுக்கு (இளங்கோ குமரவேல்) தெரிந்து விடுகிறது. அவர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஒரு யோசனை சொல்கிறார். அதாவது, திருமணம் செய்துகொள்ளாமல், கணவன் – மனைவியாக ‘லிவிங் டூ கெதர்’ முறையில் பானியும், பூரியும் 7 நாட்கள் வாழ வேண்டும்; இந்த 7 நாட்களில் பானியின் காதல் உண்மையாக இருந்தால் அவனை பூரி திருமணம் செய்துகொள்ளலாம்; இல்லை என்றால் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

பானியுடன் சேர்ந்து 7 நாட்கள் ’லிவிங் டூ கெதர்’ முறையில் வாழ்வதற்கு, சில நிபந்தனைகளுடன் சம்மதிக்கிறாள் பூரி. இருவரும் ’லிவிங் டு கெதர்’ ஆக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்குகிறார்கள். அந்த குடியிருப்பில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு பூரியின் அப்பாவை கவனித்துக் கொள்வது யார்? என்ற பிரச்சனையில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். அவர்கள் நிரந்தரமாக பிரிந்தார்களா? அல்லது மீண்டும் இணைந்தார்களா? என்பது ‘பானி பூரி’ இணையத் தொடரின் மீதிக்கதை.

வளர்ந்துவரும் ஹீரோ நடிகராக கவனம் ஈர்த்துவரும் லிங்கா, பானி என்ற நாயக கதாபாத்திரத்தில் அப்பாவியாகவும், இயல்பாகவும் அருமையாக நடித்து அசத்தியிருக்கிறார். அவரது காதலி பூரி கதாபாத்திரத்தில் வரும் சாம்பிகா, லிங்காவுக்கு ஈடுகொடுத்து தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். லிங்காவும், சாம்பிகாவும் இணைந்து சமகால காதலர்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்கள். ஈகோ, அன்பு, கோபம் என அனைத்தையும் கலந்து நல்ல நடிப்பை தந்துள்ளார்கள்.

சாம்பிகாவின் அப்பாவாக வரும் இளங்கோ குமரவேல், தானொரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். நாயகனின் நண்பனாக வினோத் சாகர், நாயகனின் அண்ணனாக ஸ்ரீகிருஷ்ண தயாள், அண்ணியாக கனிகா, அடுக்குமாடி குடியிருப்புவாசிகளாக கோபால் & கோ உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் பாலாஜி வேணுகோபால், மாறிக்கொண்டிருக்கும் சமகால இளைஞர்களின் உணர்வுகளையும், அவற்றை பெற்றோர்கள் எப்படி பக்குவமாக அணுக வேண்டும் என்பதையும் மிகவும் நுட்பமாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். கொஞ்சம் கவனக்குறைவு ஏற்பட்டால்கூட ஆபாசமாகிவிடக் கூடிய விஷயங்களை மிகுந்த எச்சரிக்கையுடன், விரசம் இல்லாமல் கண்ணியமாக காட்டியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்.

பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு, பி.கே-வின் பட்த்தொகுப்பு, நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை இத்தொடரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘பானி பூரி’ – காதலர்களும், தம்பதியரும் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கலாம்!