தமிழ் மாணவர்கள் மீது ஆங்கிலத்தை திணித்தால் ஏற்படும் சீர்கேடுகளை சொல்லும் ‘பாடம்’!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2017/09/0a1d-61.jpg)
நமது நாட்டின் கல்வி முறையில் கொண்டுவரப்பட்ட சில குழப்பங்களால் பலிவாங்கப்பட்ட ஒரு உயிருக்காக நமது சமுதாயமே கொந்தளித்துக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், இது போன்ற ஒரு கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ‘பாடம்’.
இயக்குனர் ராஜேஷுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள ராஜசேகர் ‘பாடம்’ படத்தை இயக்கியுள்ளார். ‘Rollon Movies’ சார்பில் ஜிபின் இப்படத்தை தயாரித்துள்ளார். கதாநாயகனாக புதுமுக நடிகர் கார்த்திக்கும், கதாநாயகியாக புதுமுக நடிகை மோனாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களாக இப்படத்தில் நடித்துள்ளனர் . நடிகர் விஜித் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் ராஜசேகர் பேசுகையில், ”சமீபத்தில் கூட ஒரு உயிரை பறித்த ஒரு முக்கிய சமுதாய பிரச்னையை பற்றி ‘பாடம்’ பேசும். தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் மீது ஆங்கில கல்வியையும் மொழியையும் திணித்தால் நடக்கும் சீர்கேடுகள் பற்றிய படம் இது .
ஆங்கிலம் என்பது வெறும் ஒரு மொழியே தவிர வாழ்வு முறை கிடையாது என்பது நம்மில் பலருக்கு புரிவதில்லை. இதனை மையமாக வைத்து, ஒரு மாணவனுக்கும் அவனது ஆசிரியருக்கும் இடையே நடக்கும் ஒரு போர் தான் ‘பாடம்’ . இந்த போரில் மாணவன் எப்படியெல்லாம் சவால்களை சந்தித்து வெற்றி பெற்றான் என்பதே இப்படத்தின் கதை. புத்துணர்வும் தன்னம்பிக்கையும் ஊட்டும் படமாக இது இருக்கும்.
நமது முறையற்ற கல்வி முறையையும், பெற்றோர்களின் மனநிலையையும், மாணவர்கள் மீது போடப்படும் சமுதாய அழுத்தங்களையும் இப்படம் அலசும். எல்லா மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களை ‘பாடம்’ கதையுடன் இணைத்துக்கொண்டு ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.
இப்படம் கணேஷ் ராகவேந்திராவின் இசையில், மனோவின் ஒளிப்பதிவில், ஜிபினின் படத்தொகுப்பில், ‘ஆக்ஷன்’ பிரகாஷின் சண்டை காட்சியமைப்பில், பழனிவேலின் கலை இயக்கத்தில் உருவாகியுள்ளது.