”ஆம், நாங்கள் ரவுடிகள் தான்”: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற பேரணியில் பா.ரஞ்சித் பேச்சு!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூர் லேங்க்ஸ் தோட்ட சாலையில் இருந்து ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் வரையில் நேற்று (20ஆம் தேதி) பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், நீதிபதி அரி.பரந்தாமன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி, இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நடிகர்கள் மன்சூர் அலிகான், தினேஷ், கானா கலைஞர்கள் சங்கத்தினர், தமிழக அரசு எஸ்சி – எஸ்டி அலுவலர் நலச் சங்கத்தினர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பேரணி முடிவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது:

ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கொல்லப்பட்ட உடனே அவரை ரவுடி என சிலர் எழுதினர். ஆம்ஸ்ட்ராங் அண்ணனை ரவுடி என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் எழுதிய அயோக்கியர்கள் யார்? முற்போக்குவாதிகள், அசல் முற்போக்குவாதிகள் தான் அப்படி எழுதினர். ஆம்ஸ்ட்ராங் தவறான நபர் என முதலில் பாஜக எழுதியது. உடனே மற்றொரு கும்பல் களமிறங்கியது. அது திமுக ஐடி விங். அவர்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் ஆம்ஸ்ட்ராங் பற்றி தவறான கருத்துகளை பரப்பினர். இவர்களுக்கு எல்லாம் கொஞ்சமும் யோசனையே கிடையாதா? அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ரவுடிகள் என்றால், ஆம்… நாங்கள் ரவுடிகள் தான். 

காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். ஆம்ஸ்ட்ராங்கின் இந்த படுகொலையை மிக எளிதாக கையாண்டு விட்டு சென்று விடலாம் என மட்டும் நினைத்து விடாதீர்கள். அண்ணல் அம்பேத்கர் கற்றுக் கொடுத்த சட்ட வழிமுறைப்படி நடப்பவர்கள் நாங்கள். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தலித்துகளை ஒன்று திரட்டி அவர் வன்முறையை நோக்கி நகர்த்தவில்லை. பவுத்தம் என்ற அறவழியை நோக்கி நகர்த்தியவர் தான் எங்கள் அம்பேத்கர். அவர் வழியில் நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம். எங்களிடம் சரியான சட்ட வழிமுறை உள்ளது. நாங்கள் போராடுவோம். இதை எளிதாக விட்டுவிடமாட்டோம். ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு பின்னால் இருக்கும் அயோக்கியர்களை கண்டுபிடிக்காத வரை நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம்.

இவ்வாறு பா.ரஞ்சித் பேசினார்.