‘கபாலி’யில் பெரியார் படம் இல்லாததற்கு மன்னிப்பு கேட்டார் பா.ரஞ்சித்!
மலேசிய தமிழர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி, கடந்த 22ஆம் தேதி வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. இப்படத்தில், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான காத்திரமான வசனங்களை ரஜினி மூலம் பேசியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். பல காட்சிகளில் அம்பேத்கர், சேகுவேரா, மால்கம் எக்ஸ் என பலரது படங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் தந்தை பெரியாரின் படம் ஒரு காட்சியில்கூட இடம் பெறவில்லை.
மலேசியா தமிழர்கள் சாதிய ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காக, ஆங்கிலேய அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி மலேசியாவுக்குச் சென்றவர் தந்தை பெரியார். மலேசியாவில் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் சாதியத்துக்கு எதிராக பிரசாரம் செய்தவர் அவர்.
இந்தியா விடுதலை அடைந்த பின்னரும் பெரியார் மலேசியாவுக்குச் சென்று, சாதியத்தின் கோரப்பிடியில் இருந்து தமிழர்கள் விடுதலை பெற வேண்டும் என பிரசாரம் செய்தார். ஆனால், மலேசிய தமிழர்களை மையமாக வைத்து, சாதியத்துக்கு எதிராக ரஞ்சித் இயக்கியுள்ள ‘கபாலி’ படத்தில் பெரியார் படம் இடம் பெறவில்லை என்ற ஆதங்கம் பெரியாரிஸ்டுகளுக்கு இருந்து வந்தது.
இந்நிலையில், விகடனின் மாணவர் பத்திரிகையாளர் திட்ட பயிற்சி முகாமில் கலந்துகொண்ட பா.ரஞ்சித்திடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது: “கபாலி’ படத்தில் அம்பேத்கர், சேகுவாரா, சார்லி சாப்ளின், மால்கம் எக்ஸ் என பலரது படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் பெரியார் எங்குமே இல்லையே. ஏன் பெரியாரை தவிர்த்துவிட்டீர்கள்?”
இக்கேள்விக்கு பதிலளித்த பா.ரஞ்சித், “ பெரியார் எனக்கு ரொம்பப் பிடித்த தலைவர். அவரை நான் தவிர்த்திருந்தால் இந்த இடத்துக்கு வந்திருக்கவே முடியாது. சாதியை மற… மனிதனை நினை… என்பது பெரியார் சொன்ன முக்கியமான ஸ்டேட்மென்ட். நான் பெரியாரை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. தெரியாமல் விடுபட்டிருக்கலாம். படத்தில் அவர் படம் இல்லை என்பதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஸாரி” என்றார்.
“ரஜினியின் மற்ற படங்களில் எல்லாமே ‘ஆண்டவன் பாத்துப்பான், கடவுள் பார்த்துப்பான்’ என்கிற ரெஃபரன்ஸ் இருக்கும். அப்படி எதுவும் இல்லாத உங்கள் கதையை எப்படி ரஜினி ஓ.கே பண்ணினார்?” என்ற இன்னொரு கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித், “அடிப்படையில் நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். ‘கபாலி’ கதையை நான் சொன்னபோது, அதில் இருக்கும் வீரியம் ரஜினி சாருக்குப் பிடித்திருந்தது. உடனே பண்ணலாம் என்று சொல்லி விட்டார்” என்று கூறினார் பா.ரஞ்சித்.