“இந்த ஆவணப்படம் பார்க்கும்போது உங்களுக்கு கோபம் வந்தால் அதுதான் வெற்றி!” – பா.ரஞ்சித்
இயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம்’ அமைப்பு மூலமாக ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’ (‘BEWARE OF CASTES- MIRCHPUR’), ‘டாக்டர் ஷூமேக்கர்’ என்ற இரண்டு ஆவணப்படங்களை தயாரித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள மிர்ச்புர் என்ற கிராமத்து தலித் மக்கள், ஆதிக்க சாதியினரால் கடந்த 6 ஆண்டுகளாக சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை பதிவு செய்திருக்கிறது ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’ (‘BEWARE OF CASTES- MIRCHPUR’) ஆவணப்படம்.
சென்னையில் கால்பந்து விளையாட்டுக்கான ஷூ தைத்துக் கொடுக்கும் இமானுவேல் என்ற ஷூமேக்கர் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தொகுத்து வழங்குகிறது ‘டாக்டர் ஷூமேக்கர்’ ஆவணப்படம்.
சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இந்த இரண்டு ஆவணப்படங்களும் வெளியிடப்பட்டு திரையிடப்பட்டன. நீலம் அமைப்பு சார்பில் இந்த ஆவணப்பட வெளியீடு நிகழ்வை ஒருங்கிணைத்தார் முத்தமிழ்.
வணிகப்படங்களின் தேவையையும் ஆவணப்படங்களின் தேவையையும் ஒப்பீடு செய்ய முடியாது என்றாலும், ஆவணப்படங்கள் வணிகப்படங்களுக்கு நிகராக தேவை என்பதையே திரையிடப்பட்ட ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’, ‘டாக்டர் ஷூமேக்கர்’ ஆகிய இரண்டு ஆவணப்படங்களும் முன்மொழிந்தன.
ஓவியர் சந்துரு, இயக்குநர்கள், ராம், சுசீந்திரன், பாண்டிராஜ், எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, எஸ்.வி.ஆர், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, கவிஞர் உமாதேவி, எடிட்டர் லெனின் உள்பட பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மிர்ச்புர் கிராமத்தை சேர்ந்த சத்யவான் மற்றும் அவரது மகள் எரினா ஆகியோரும் கலந்து கொண்டனர். ஷூமேக்கரான இம்மானுவேலும் இதில் கலந்து கொண்டு பேசினார். நிற்கக்கூட இடம் இல்லாமல் அரங்கம் நிரம்பி வழிந்தது நிகழ்வின் சிறப்பு.
நிகழ்வில் பேசிய எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, “காவல்துறையிலும் நீதித்துறையிலும் கூட ஜாதி மிகப் பெரிய அங்கமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார். “சாலியமங்கம் தலித் சகோதரி கலைச்செல்விக்கு என்ன நீதி கிடைத்துவிட்டது இங்கே? ‘ஊரில் ஆடு, மாடுகள் முதல் மனிதர்கள் வரை இறந்து போனால் நாங்கள் தான் தூக்கிப் போடுவோம். ஆனால் என் மகளின் இழவுக்கு துக்கம் விசாரிக்க்க்கூட ஒருவரும் வரவில்லை’ என்று கலைச்செல்வியின் அப்பா கண்ணீர் வடிய குறிப்பிட்டதை நினைவூட்டுகிறேன்” என்றார். “தமிழகத்தில் தலித்துகளுக்காக 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அது இன்று யார் கையில் இருக்கிறது என்பதை யார் கேட்பது? யார் சொல்வது? என்றும் குறிப்பிட்டார் ஆதவன் தீட்சண்யா.
இயக்குநர் ராம் பேசுகையில், “இதில் மிர்ச்புர் என்பதை எடுத்துவிட்டு, நத்தம் என்றோ, தர்மபுரி என்றோ அல்லது மாரி செல்வராஜின் புளியங்குளம் என்றோ நீங்கள் போட்டுக்கொள்ளலாம். ஹரியானாவில் நடந்ததை சென்னையில் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கு சற்றும் குறைவில்லாத சம்பவங்கள் தினசரி நடந்துகொண்டே தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டார். இனிமேல் உண்மையை உரக்கப் பேசுவோம்” என்றார்.
இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், “ரஞ்சித் எதைப் பற்றி பேசினாலும் அதற்குள் ஒரு அரசியல் இருக்கும். அதனால் எப்போதும் அவர் பேசும்போது நான் கவனமாகவே இருப்பேன். இந்த ஆவணப்பட முயற்சி மிகவும் சிறப்பான ஒன்று. ரஞ்சித்தும், நீலம் அமைப்பும் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ‘மெரினா’ படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் மீனவர்களைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்காக ‘மெரினா’ படப்பிடிப்பின்போதும், ‘கதகளி’ படப்பிடிப்பின்போதும் சில காட்சிகள் எடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் உங்களோடு நானும் வந்து இணைந்துகொள்கிறேன்” என்றார்.
நடிகர் ஜான் விஜய், “இனி சிவப்பு மட்டுமல்ல, நீலமும் புரட்சி தான்’ என்ற ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று சொல்லி, அதை மட்டுமே சொல்லி விடை பெற்றார்.
இறுதியாக பேசிய, இயக்குநர் பா.இரஞ்சித், “ரொம்ப சந்தோசம், மகிழ்ச்சி. நீங்க இவ்வளவு பேர் கலந்துப்பீங்கன்னு எதிர்பார்க்கல. வந்திருந்த அனைவருக்கும் நன்றி. இந்த (‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை’) படத்தைப் பார்க்கும்போது, ‘பாவம்’னு உங்களுக்கு தோணிச்சுன்னா, அது இந்த ஆவணப்படத்தோட தோல்வி. அதுக்குப் பதிலா உங்களுக்கு கோபம் வரணும். ஏன் இந்தியாவில் இந்த நிலை? அப்டின்னு உங்களுக்கு கோபம் வந்தா, அது தான் இந்த ஆவணப்படத்தின் வெற்றி” என்று குறிப்பிட்டார்.