ப.பாண்டி – விமர்சனம்

தேசிய விருது பெற்ற நடிகராகவும், பல விருதுகள் பெற்ற படங்களின் தயாரிப்பாளராகவும் திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள தனுஷ், முதன்முதலாக இயக்கியுள்ள படம் என்பதாலும், நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற வைராக்கியத்துடன் இருக்கும் ராஜ்கிரண், நீண்ட இடைவெளிக்குப்பின் நாயகனாக நடித்திருக்கும் படம் என்பதாலும், மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது ‘ப.பாண்டி’. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் இருக்கிறதா? பார்க்கலாம்…

சென்னை மாநகர வீதியில் ‘ஜாக்கிங்’ செல்லும் 60 வயது முதியவராக அறிமுகம் ஆகிறார் பவர் பாண்டி (ராஜ்கிரண்). முன்னொரு காலத்தில் தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திரங்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி, வெற்றி விழா கேடயங்களை எக்கச்சக்கமாக வாங்கி குவித்தவர் அவர்.

சில ஆண்டுகளுக்குமுன் பவர் பாண்டியின் மனைவி மரணம் அடைந்துவிட, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் மானேஜராக பணிபுரியும் தனது ஒரே மகன் ராகவன் (பிரசன்னா), ஹோம் மேக்கராக இருக்கும் மருமகள் பிரேமா (சாயாசிங்), பள்ளியில் படிக்கும் பேரன் துருவ் (மாஸ்டர் ராகவன்), பேத்தி சாஷா (பேபி சவி ஷர்மா) ஆகியோருடன் பவர் பாண்டி வாழ்ந்து வருகிறார்.

குடும்பத்தில் வசதிக்கும், பாசத்துக்கும் குறைவில்லை தான். எனினும், அன்றாட வாழ்க்கை முறையில் பவர் பாண்டிக்கும், அவரது மகன் ராகவனுக்கும் இடையே மெல்லிய விரிசல் இருந்துகொண்டே இருக்கிறது.

மேலும், சமூகத்தில் கண்ணெதிரே எந்த தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்கும் சுபாவம் கொண்டவர் பவர் பாண்டி. விளைவாக, சமூக விரோதிகளுடன் மோதல், போலீசில் புகார் என வம்பு தும்புகளில் மாட்டிக்கொள்பவர். இதனால் நிம்மதி இழக்கும் மகன் ராகவன், “எங்கே எது நடந்தால் இவருக்கென்ன? நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று இருக்க வேண்டியது தானே?” என ஒரு கார்ப்பரேட் மனிதனாய் குமுறுகிறார். அவருக்கு அவருடைய மனைவி பிரேமா ஆதரவு. ஆனால், பேரனும் பேத்தியும் தாத்தாவுக்கு ஆதரவு.

அப்பாவுக்கும், மகனுக்கும் இடையிலான இந்த கருத்து வேறுபாடுகள் ஒரு கட்டத்தில் தீவிரமடைய, கடிதம் எழுதி வைத்துவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறார் பவர் பாண்டி. வங்கியில் சேமித்து வைத்திருந்த ரூ.25 லட்சத்தை எடுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் இலக்கு இல்லாமல் போகிறார்… போகிறார்… போய்க்கொண்டே இருக்கிறார்…

வழியில் ஓர் உணவகத்தில், தன்னைப் போல் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் கூட்டாக திரியும் சில முதியவர்களை சந்திக்கிறார் பவர் பாண்டி. அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘முதல் காதல்’ பக்கம் பேச்சு திரும்புகிறது. தனக்கும் ஒரு முதல் காதல் இருந்தது என்று சொல்லும் பவர் பாண்டி, “அது ஒரு சாதாரண காதல் கதை தான்” என்ற முன்னுரையுடன் தனது முதல் காதலை விவரிக்க ஆரம்பிக்கிறார்…

பிளாஷ் பேக். ஒரு கிராமத்தில், புரூஸ்லீயின் தீவிர ரசிகராக இருக்கிறார் இளம் பருவத்து பாண்டி (தனுஷ்). மதுரை நகரில் வசிக்கும் பூந்தென்றல் (மடோனா செபாஸ்டியன்) குடும்பம், விடுமுறை காலத்தை கழிக்க அக்கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு வருகிறது. அக்கிராமத்தில் அசகாய சூரனாக கபடி விளையாடும் பாண்டி – அதை பார்த்து ரசிக்கும் பூந்தென்றல் சந்திப்பு, கோயில் திருவிழா பின்னணியில் அவர்களுக்குள் காதல் மலருவது, மழையில் பாண்டி நனைவது கண்டு, குடையை பிடித்துக்கொண்டு ஓடி வரும் பூந்தென்றல், “மழையில் ஏன் நனையிறே? குடைக்குள் வா” என்று அழைக்க, “நீ ஏன் குடைக்குள் இருக்கே? வெளியே வா” என்று பாண்டி அழைக்க, இருவரும் கொட்டும் மழையில் நனைந்து குதூகலிப்பது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காதல் வளருகிறது.

0a

இவர்களின் காதல், பூந்தென்றலின் அப்பாவுக்கு (ஆடுகளம் நரேனுக்கு) தெரிய வர, அவர் காச்மூச் என்று கத்தி களேபரம் செய்யாமல், எதையும் காட்டிக்கொள்ளாமல், திடுதிடுப்பென மகளுடன் மதுரைக்கு புறப்பட்டு விடுகிறார். பூந்தென்றல் உருக்கமாக ஒரு கடிதம் எழுதி, அதை பாண்டியிடம் சேர்க்க ஏற்பாடு செய்துவிட்டு, அப்பாவோடு கிளம்பிப் போய்விடுகிறார். காதலியை பிரிந்து தவிக்கும் பாண்டி, மதுரைக்குப் போய் பூந்தென்றலை சந்திக்க முயன்று, முடியாமல் தோற்று, விரக்தியுடன் சென்னை சென்று, சினிமாவில் சேர்ந்து, பவர் பாண்டி ஆகிறார். பிளாஷ் பேக் முடிகிறது.

வீட்டைவிட்டு வெளியேறி இலக்கு இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கும் முதியவர் பவர் பாண்டிக்கு இப்போது ஒரு இலக்கு அமைகிறது. பூந்தென்றலை பார்க்க வேண்டும் என்பது தான் அது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பூந்தென்றல் எங்கே இருப்பார்? எப்படி இருப்பார்? எதுவும் தெரியாது. ஆனால் அவரை பார்க்க வேண்டும் என்று அவர் மனம் துடிக்கிறது.

பவர் பாண்டி தனது முதல் காதலியான பூந்தென்றலை  சந்தித்தாரா? எங்கே, எப்படி சந்தித்தார்? முதுமைப் பருவ பூந்தென்றல் (ரேவதி) தற்போது எத்தகைய குடும்பச் சூழலில் இருக்கிறார்? பாண்டி மீதான காதலுணர்வு இப்போதும் அவருக்கு இருக்கிறதா? பவர் பாண்டியை காணோம் என்று தேடி அலையும் மகன் ராகவன் அப்பாவை கண்டுபிடித்தாரா? என்பதெல்லாம் நெகிழ வைக்கும் மீதிக்கதை.

ராஜ்கிரண், பவர் பாண்டியாக படம் முழுக்க பவருடன் வலம் வருகிறார். குழந்தைகளுக்கு நல்ல தாத்தாவாகவும், மகனுக்கு நல்ல அப்பாவாகவும் அழகாக பொருந்தியிருக்கிறார். முதல் பாதியில் குடும்பத்துக்காக வாழும் வாழ்க்கையில் சாந்தமாகவும், பிற்பாதியில் தனக்காக வாழும் வாழ்க்கையில் இளமை துள்ளலுடனும் வந்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

படம் முழுக்க இவர் பேசும் பாசமிகு வசனங்கள் அனைவரையும் கவரும். முதுமையில் தன்னுடைய முதல் காதலியிடம் காதலை மீண்டும் சொல்லும்போது இவர் வெட்கப்படும் காட்சியும், காதலுடன் உருகும் காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கின்றன. பவர் பாண்டி கதாபாத்திரத்தை இவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு அழகாக பிரதிபலித்திருக்க முடியாது என்று வியப்புடன் நம்மை சொல்ல வைக்கிறாரே… அது தான் ராஜ்கிரணின் வெற்றி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் ரேவதி, தன்னுடைய அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். இவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும், நிறைவாக மனதில் நிற்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு தன்னை வந்து சந்திக்கும் பழைய காதலனிடம் ஓர் எல்லைக்குள் நின்று அன்பும் பரிவும் காட்டும் நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார்.

ராஜ்கிரணின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ், கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல் என்று தனது மாஸ் ஹீரோயிசத்தை கொஞ்சமாக காட்டி, தன்னைவிட இயக்குனர் தனுஷுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். காதலியை பிரியும் காட்சியில் தனுஷின் கண்கள் கலங்குகின்றன; நமது கண்களும் தான்.

மாடர்ன் பெண்ணாக பார்த்த மடோனா செபஸ்டியன், இதில் பாரம்பரிய உடையில் அழகான மதுரை பெண்ணாக வருகிறார். வார்த்தைகளை காட்டிலும் கண்கள் மூலம் காதலை அதிகம் கடத்துகிறார்.

பிரசன்னா, பொறுப்பான மகனாக, கார்ப்பரேட் மனிதனாக வருகிறார். ராஜ்கிரண் செய்யும் சில செய்கைகளால் அவர் மீது கோபப்படும் பிரசன்னா, அவர் பிரிந்து சென்ற பிறகு, அவரை நினைத்து வருந்துவதும், அவருடைய பெருமைகளை மனைவியிடம் பகிர்ந்துகொள்வதும் பார்ப்பவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும். இறுதிக் காட்சியில் தந்தையின் காலைப் பிடித்து கதறியழுகிறாரே… அதை பார்க்கும் கல்மனமும் கரைந்து போகும்.

சாயாசிங் பொறுப்பான மனைவியாகவும், மாமனாரை அன்புடன் கவனித்துக்கொள்ளும் மருமகளாகவும் எதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். குழந்தைகளாக வரும் மாஸ்டர் ராகவன், பேபி சவி ஷர்மா கேமரா முன் நிற்பது முதன்முறை என்றாலும், அது தெரியாத அளவுக்கு அழகாகவும், தைரியமாகவும் நடித்திருக்கிறார்கள்.

ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் பெற்றோர்களை பிள்ளைகள் எப்படி பார்த்துக் கொள்கிறார்கள்? அந்த பெற்றோர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? பெற்றோர்களுக்கான சுதந்திரத்தை பிள்ளைகள் கொடுக்கிறார்களா? என்பதையெல்லாம் இப்படத்தில் கேள்வியாக எழுப்பி, அதற்கான பதிலையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ்.

உயிருடன் இருக்கும்போதே பெற்றோரை சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் பிள்ளைகள் வாழ வைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதையும் இப்படத்தின் மூலம் பிள்ளைகளுக்கு புரிய வைத்திருக்கிறார் இயக்குனர்.

தங்களது ஆசை, சந்தோஷம் அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பிள்ளைகளுக்காகவே வாழும் பெற்றோர், பிள்ளைகள் வளர்ந்த பிறகும், அதே பிள்ளைகளிடம் அடிமையைப் போல, எடுபிடிகள் போல வாழாமல், தங்களுக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று முதியோருக்கும் அறிவுறுத்தி இருக்கிறார் இயக்குனர். எனவே இன்றைய இளைய தலைமுறையினருக்கு மட்டுமல்ல, மூத்த தலைமுறையினருக்கும் இந்த படம் ஒரு பாடமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

தனது முதல் படத்திலேயே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவரும்படியான ஒரு படத்தை, அனைத்து தரப்பினரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படத்தை கொடுத்ததற்காக தனுஷை நிச்சயம் பாராட்டலாம்.

ராஜ்கிரண் – ரேவதி இடையிலான உறவை சொல்லும் காட்சிகள் அனைத்தும் கத்தி மேல் நடப்பது போன்றவை; என்றாலும், அதை இயக்குநராக தனுஷ் சாமர்த்தியமாகவே சமாளித்திருக்கிறார். “வயது 20 ஆக இருந்தால் என்ன, 60 ஆக இருந்தால் என்ன, துணை துணை தான்” என்ற வசனத்தை கையாண்ட தனுஷ், ரேவதியையும், ராஜ்கிரணையும் சிங்கிளாக காட்டி, சர்ச்சையில் சிக்காமல் கவனமாக தப்பி விடுகிறார்.

கதையின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு மட்டும் அல்ல, முக்கியத்துவம் குறைந்த கதாபாத்திரங்களுக்கும் அற்புதமான வசனங்கள் எழுதி, தானொரு சிறந்த வசனகர்த்தா என்பதை நிரூபித்திருக்கிறார் தனுஷ். உதாரணமாக, ஒரேயொரு காட்சியில் வரும் முதியவர் ஒருவர், “காதலிச்ச பெண்ணோ, கடவுள் கொடுத்த பெண்ணோ ரிசல்ட் என்னவோ ஒண்ணு தான்” என்று பேசும் வசனம் அப்ளாஸை அள்ளுகிறது.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. மெலோடியாக வரும் ‘வெண்பனி மலரே’ பாடல் தென்றலாக வருடிச் செல்கிறது. அதேபோல், இளம்வயது பவர் பாண்டியின் காதல் பாடலாக வரும் ‘பார்த்தேன்’ பாடலும் காதலை அழகாக சொல்லியிருக்கிறது. பின்னணி இசையிலும் ஷான் ரோல்டன் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு கதைக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. ஒருசில காட்சிகளில் இவரது கேமரா கோணங்கள் வசனங்கள் இல்லாமலேயே கதையை பேச வைக்கிறது.

படம் வெளிவருவதற்குமுன் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ப.பாண்டி’, அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்து, வெற்றிப்படமாக உயர்ந்திருக்கிறது. அதனாலேயே தனுஷ் இயக்கப்போகும் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதையும் இயக்குனர் தனுஷ் பூர்த்தி செய்து வெற்றி பெறுவார் என நிச்சயம் நம்பலாம்.

‘ப.பாண்டி’ – பட்டையை கிளப்பும் பாண்டி!