“பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்வது தான் ‘ப.பாண்டி’ படம்!” – இயக்குனர் தனுஷ்

நடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்குனராக களமிறங்கும் படம் ‘பவர்பாண்டி’ தற்போது ‘ப. பாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ரேவதி, பிரசன்னா, சாயா சிங், செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இன்று இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் தனுஷ் பேசியதாவது:
நம் வாழ்க்கையில் அன்பு, நிம்மதி, பாசம், கோபம் என்ற பல விஷயங்கள் நம்மைச் சுற்றி உள்ளன. இதில் பாஸிட்டிவ் விஷயங்களை, அதாவது நன்மையான விஷயங்களை மட்டுமே எடுத்து கொள்வது தான் இந்த ‘ப.பாண்டி’ திரைப்படம்.
இயக்குனர் பாலுமகேந்திரா எப்போதும் கூறும் விஷயம், “ஒரு படம் தனக்கு தேவையான விஷயங்களை தானே எடுத்துக் கொள்ளும். அப்படி எடுத்துக் கொள்ளாத படம் தான் தோல்வியை சந்திக்கும்.”
அந்தவகையில் ‘ப .பாண்டி’ தனக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அதுவாகவே தேடிக்கொண்டது. இவ்வாறாகவே இப்படத்தின் பவர்பாண்டியும் (ராஜ்கிரண்) எங்களுக்கு கிடைத்தார்.
இப்படத்தின் ஆன்மா, இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசைதான். எனது எண்ணமும் அவரது எண்ணமும் ஒரே திசையில் பயணித்ததே இப்படத்தின் இசை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்.
இவ்வாறு தனுஷ் கூறினார்.
படத்தின் நாயகன் ராஜ்கிரண் பேசுகையில், “27வருடத்திற்கு முன் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இன்று மீண்டும் அவரது மகனும் எனது இயக்குனர் தனுஷ் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
இத்தனை வருட காலம் இருந்த ராஜ்கிரனை முற்றிலும் மாற்றி புதிய ராஜ்கிரனை காட்டியுள்ளார். இப்படியொரு கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு தனுஷிற்கும் என்னுடன் இணைந்து பணியாற்றிய என் குடும்பத்திற்கும் (குழுவிற்கும்) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் பிரசன்னா பேசுகையில், “ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையில் மட்டுமே இப்படத்தில் நடித்தேன். முதலில் இப்படத்தில் நடிக்க தயங்கிய நான், தனுஷிடம் கதை கேட்டது முதல் அவருடன் வேலை செய்த அனைத்துத் தருணங்களிலும் மிகப் பெரிய ஆச்சரியத்தை அடைந்தேன்.
மிகவும் திறமையான நடிகர் தனுஷ் தற்போது ஒரு இயக்குனராக உருவெடுத்து அதில் என்னை நடிக்க வைத்ததற்கு நன்றியை கூறிக் கொள்கிறேன். மேலும், என் இத்தனை வருட திரையுலக வாழ்க்கையில் முதல்முறையாக இப்படத்தை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார்.