ஒற்றைப் பனைமரம் – விமர்சனம்

நடிப்பு: புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, நூர்ஜகன், மாணிக்கம் ஜெகன் மற்றும் பலர்
இயக்கம்: புதியவன் இராசையா
ஒளிப்பதிவு: சி.ஜே.ராஜ்குமார் (இந்தியா), மஹிந்தே அபிசின்டே (ஸ்ரீலங்கா)
படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்
இசை: அஷ்வமித்ரா
தயாரிப்பு: ’ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ்’ எஸ்.தணிகைவேல்
பத்திரிகை தொடர்பு: குமரேசன்
தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு நிகழ்ந்த இறுதி யுத்தத்துக்குப் பிறகு, விடுதலைப்புலிகள் இயக்கதைச் சேர்ந்த போராளிகள் சயனைடு உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான நாயகி கஸ்தூரியை (நவயுகா) காப்பாற்றி, அடைக்கலம் கொடுக்கும் நாயகன் சுந்தரம் (புதியவன் இராசையா), குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அனாதையாக இருந்த சிறுமிக்கும் அடைக்கலம் கொடுத்து தனது மகளாக வளர்க்கிறார். இந்த மூவரும் போருக்குப் பிந்தைய தங்களது எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறார்கள். அப்போது ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதை கண்டு வருந்தும் சுந்தரம், பெண்களை ஒன்றிணைத்து ஒரு சங்கம் தொடங்கி அதன் மூலம் அவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? என்பதை ஈழத் தமிழர்களை குறை சொல்லும் விதமாகவும், விடுதலைப் புலிகளின் யுத்தத்தினால் எந்த பயனும் இல்லை என்று புழுதிவாரி தூற்றும் நோக்கத்தோடும் சொல்வது தான் ’ஒற்றைப் பனை மரம்’.
இலங்கையில் படமாக்கப்பட்ட காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கும் மஹிந்தே அபிசிண்டே மற்றும் இந்திய பகுதிகளில் படமாக்கப்பட்ட காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கும் சி.ஜெ.ராஜ்குமார் இருவரும் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை இயல்பாக காட்டியிருக்கிறார்கள்.
அஷ்வமித்ராவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மனதை தொடவில்லை என்றாலும், கதையில் இருந்து விலகாமல்
பயணித்திருக்கிறது.
நாயகன் சுந்தரமாக நடித்திருப்பதோடு, படத்தை இயக்கவும் செய்திருக்கும் புதியவன் இராசையா, இறுதி யுத்தத்திற்குப் பிறகு புலிகள் அமைப்பில் இருந்த வீரர்களின் நிலை படுமோசமாக மாறிவிட்டது என்பதை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார். குறிப்பாக, போரில் பலியான வீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பல நாட்கள் பட்டினியால் வாடுவதாகவும், சில பெண்கள் தங்களது பசி கொடுமைகளில் இருந்து மீள்வதற்காக விலைமாதுவாக மாறியதோடு, அவர்களை தங்களது இச்சைக்கு தமிழர்களே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் இயக்குநர் புதியவன் இராசையா சொல்லியிருப்பது புலிகள் அமைப்பை அசிங்கப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நவயுகா, புதியவனால் காப்பற்றப்பட்டு அவருடன் பயணப்பட்டாலும், அவருடைய வசனங்கள் மற்றும் அவரை சுற்றி நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரானதாகவே இருக்கிறது.
பொதுவாக ஈழத் தமிழர்களை மையப்படுத்திய படங்கள் என்றாலே, அவர்கள் எதிர்கொண்ட கொடுமைகள், பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை, சொந்த மண்ணில் அனைத்தையும் இழந்து அகதிகளாக வாழும் நிலை உள்ளிட்ட சம்பவங்களை பதிவு செய்வதோடு, இறுதி யுத்தத்தின் பிறகும் அரசியல் ரீதியாக அம்மக்கள் வஞ்சிக்கப்படுவதை உலக மக்களுக்கு சொல்லும் விதமாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் பல குற்றங்கள் செய்த சிங்கள ராணுவத்தினரின் அடாவடித்தனத்தை ஆரம்பக் காட்சியில் மட்டும் சிறிய அளவில் காண்பிக்கும் இயக்குநர், அதன் பிறகு தமிழர்களே தமிழர்களுக்கு எதிரிகளாக இருப்பது போல் படத்தை நகர்த்திச் செல்கிறார். இலங்கை தமிழர்களிடம் சாதி பாகுபாடு அதிகம் இருப்பது, சூழ்நிலை அமைந்தால் போராளிகள் உடன் இருப்பவர்களையே கொலை செய்வார்கள் என்பது உள்ளிட்ட பல காட்சிகள் தமிழர்களுக்கு எதிராகவே அமைக்கப்பட்டிருக்கிறது.
இறுதி யுத்தத்திற்குப் பிறகு ஈழத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறேன் என்று தனது படைப்புக்கு நியாயம் சேர்க்கும் இயக்குநர் புதியவன் இராசையா, புலிகள் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படவில்லை என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
வடக்கில் இருக்கும் இஸ்லாமியர்களை புலிகள் அமைப்பு வெளியேற்றிய சம்பவம் அவர்கள் செய்த மிகப் பெரிய வரலாற்று தவறு என்று சொல்லும் இயக்குநர், அதை அவர்கள் ஏன் செய்தார்கள் என்பதை விவரிக்கவில்லை. அதேபோல், சங்கம் அமைத்து பெண்கள் பாதுகாப்புக்காக போராட நினைப்பவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் போராட்டத்தை ஏன் குறை சொல்கிறார் என்பதற்கான தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை.
மொத்தத்தில், ‘ஒற்றைப் பனை மரம்’ தோல்வியால் துவண்டு போயிருக்கும் ஈழத் தமிழர்களை மேலும் துன்புறுத்தும் மகா மகா மகா மட்டமான படைப்பு.