ஒத்த ஓட்டு முத்தையா – விமர்சனம்

நடிப்பு: கவுண்டமணி, ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சைதன்யா, யோகிபாபு, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, கூல் சுரேஷ், ஓ.ஏ.கே. சுந்தர், சிங்கமுத்து, வாசன் கார்த்திக், கஜேஷ் நாகேஷ், அன்பு மயில்சாமி மற்றும் பலர்
இயக்கம்: சாய் ராஜகோபால்
ஒளிப்பதிவு: எஸ்.ஏ.காத்தவராயன்
படத்தொகுப்பு: ராஜா சேதுபதி
இசை: சித்தார்த் விபின்
தயாரிப்பு: ‘சினி கிராஃப்ட்ஸ் புரொடக்ஷன் & குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ்’ ரவி ராஜா & லட்சுமி ராஜன்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
படத்தில் கவுண்டமணி பெயர் முத்தையா. அரசியல்வாதி. அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு மட்டும் வாங்கி படுதோல்வி அடைந்ததால், ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்பது அவரது காரணப் பெயராய் மாறிப்போனது.
ஒத்த ஓட்டு முத்தையாவுக்கு மூன்று தங்கைகள். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வீட்டில் பெண் கொடுத்தால் மூன்று தங்கைகளும் மூன்று மாமியார்களோடு போராட வேண்டும். அதற்கு பதிலாக, மூன்று தங்கைகளையும் ஒரே வீட்டில் உள்ள மூன்று சகோதரர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்தால், அவர்களுக்கு ஒரு மாமியார் தான் வருவார். அவரை மூன்று தங்கைகளும் சேர்ந்து சுலபமாக அடக்கிவிடுவார்கள். இப்படி கணக்குப் போடும் முத்தையா, கல்யாண புரோக்கர்கள் மூலம் ஒரே வீட்டில் உள்ள மூன்று சகோதரர்களை மாப்பிள்ளை ஆக்கத் தேடுகிறார்.
மறுபுறம், மூன்று தங்கைகளும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களைக் காதலிக்கிறார்கள். ஆனால், தங்கள் காதல், அண்ணன் முத்தையாவின் சம்மதத்துடன் கைகூட வேண்டும் என்றால், தங்கள் காதலர்கள் மூவரும் சகோதரர்களாக இருந்தால் தானே முடியும்? என்ன செய்வது என்று யோசிக்கும் தங்கைகள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அண்ணன் முன் தங்கள் காதலர்கள் மூவரையும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களாக நடிக்க வைக்கிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி விட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் முத்தையாவுக்கு சீட் கொடுக்காமல், அவரிடம் கார் டிரைவராகப் பணியாற்றிய யோகி பாபுக்கு கட்சி மேலிடம் சீட் கொடுத்துவிடுகிறது. அதனால் கோபமடைந்து கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாகப் போட்டியிடும் முத்தையா, தேர்தலில் வெற்றி பெற்றாரா?, அவரது தங்கைகள் அண்ணனை ஏமாற்றி காதலர்களை கரம் பிடித்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு தமிழக அரசியல் நையாண்டியாக விடை அளிக்கிறது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் ஒத்த ஓட்டு முத்தையாவாக நடித்திருக்கும் கவுண்டமணியின் கவுண்ட்டர்கள் வழக்கம் போல் ரசிகர்களை சிரிக்க வைப்பது போல் இருந்தாலும், அதில் பழைய கம்பீரம், வேகம், டைமிங் மற்றும் உடல்மொழி ஆகியவை இல்லாததால் சிரிப்பவர்கள் கூட யோசித்து காலதாமதமாக சிரிக்கிறார்கள். கவுண்டமணியுடன் கூட்டணி அமைத்துள்ள யோகி பாபுவின் காமெடி காட்சிகளும் எதிர்பார்த்த அளவு இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து விடுகிறார்கள்.
வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ், ரவி மரியா, ஓ.ஏ.கே.சுந்தர், மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், வையாபுரி, முத்துக்காளை, டி.ஆர்.சீனிவாசன், கூல் சுரேஷ், சதீஸ் மோகன், செண்ட்ராயன், இயக்குனர் சாய் ராஜகோபால், டெம்பிள் சிட்டி குமார் என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் சாய் ராஜகோபால், கவுண்டமணியை வைத்துக்கொண்டு அரசியல் நையாண்டி செய்ய முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி பல இடங்களில் வெற்றி பெற்றாலும், சில இடங்களில் தோல்வியடைந்திருக்கிறது.
கவுண்டமணி, யோகி பாபு போன்றவர்களுடன் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தாலும், மிகப்பெரிய பஞ்சத்துடனேயே திரைக்கதை பயணிக்கிறது. தமிழக அரசியல் சம்பவங்களை நையாண்டியாக சித்தரித்து காட்சிப்படுத்திய விதம் ரசிக்க வைத்தாலும், அதை நேர்த்தியாக கையாளத் தவறியிருக்கும் இயக்குநர், குறைகள் பல இருந்தாலும் படத்தை முடித்தால் போதும் என்ற நிலையில், காட்சிகளை எடுத்துத் தள்ளியிருக்கிறார்.
சித்தார்த் விபின் இசையில், சினேகன், மோகன்ராஜா, சாய் ராஜகோபால் ஆகியோரது வரிகளில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம்.
எஸ்.ஏ.காத்தவராயனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணியை திரையில் பார்க்கும் உற்சாகத்துடன் வரும் ரசிகர்களுக்கு அவரது தோற்றம் மற்றும் உடல்மொழி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுப்பதோடு, அவர் மீது பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது.
‘ஒத்த ஓட்டு முத்தையா’ – ஐயோ பாவம் முத்தையா!
ரேட்டிங்: 2/5