முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ‘ஆஸ்கர் விருது’ புகழ் முதுமலை தம்பதியர் சந்திப்பு!
நீலகிரி மாவட்டம் முதுமலைப் பகுதியைச் சேர்ந்தவர் பொம்மன் (52). பழங்குடியினத்தைச் சேர்ந்தவரான இவர் வனத்துறையில் 1984-ம் ஆண்டு முதல் யானைப் பாகனாக பணியாற்றி வருகிறார். வனத்துறை வழிகாட்டுதல்படி முதுமலை யானைகள் பராமரிப்பு மையத்தில் யானைகள் பராமரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
முதுமலை முகாமிற்கு வரும் யானை குட்டிகள், உடல் நலம் பாதித்த யானைகள் என பலதரப்பட்ட யானைகளை பராமரித்த நீண்ட அனுபவம் மிக்கவர் பொம்மன். இவரது தந்தை, தாத்தா ஆகியோரும் யானைப் பாகன்கள்தான்.
யானை பராமரிப்பில் சுமார் 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் பொம்மன் சிலமுறை யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைக்குப் பின்னர் மீண்டு வந்தவர். இவரது மனைவி பெள்ளியும் யானைகள் பராமரிப்பில் பொம்மனுடன் தொடர்ந்து பயணிப்பவர்.
தமிழகத்தின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதிகளான பொம்மன் – பெள்ளி குறித்த ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது. இப்படத்தை உதகையை சேர்ந்த கார்த்திகி கான்சால்வ்ஸ் இயக்கியுள்ளார். குனீத் மோங்கா தயாரித்துள்ளார். இந்நிலையில், முதுமலையைச் சேர்ந்த பொம்மன் – பெள்ளி தம்பதி இன்று (மார்ச் 15) முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.1லட்சம் பரிசு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொம்மன் – பெள்ளி தம்பதியர், “இரண்டு யானை குட்டிகளை வளர்த்து கொடுத்துள்ளோம். முதுமலை வனத்துறைக்கே இது மிகப்பெரிய பெருமை. ஆவண படத்தில் நடித்தது முதல்வர் வரை வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. யானை வளர்ப்பு சாதாரண விஷயம் இல்லை. யானை வழித்தட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஊர் மக்கள் தவிர்க்க வேண்டும். அதிகாரிகள் சொல்வதைக் கேட்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்” என்றனர்.