உண்மையில் நடந்தது என்ன?: பின்லேடன் போட்டோ சர்ச்சையில் சிக்கிய சலாவூதீன் விளக்கம்!
சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய சல்லிக்கட்டு அறப்போராட்டத்தில், ஒசாமா பின்லேடனின் ஆதரவாளர்களும் பங்கேற்றதாக தமிழக உளவுத்துறை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் கொடுத்தது. இதற்கு ஆதாரமாக, பின்லேடனின் போட்டோ பொறிக்கப்பட்ட இரு சக்கர வாகனத்தில் இருவர் செல்வதாகவும், அவர்களில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர் தனது முகத்தில் நரேந்திர மோடியின் மாஸ்க்கும், கழுத்தில் செருப்பு மாலையும் அணிந்திருப்பதாகவும் உள்ள போட்டோவை அது சமர்ப்பித்தது.
உளவுத்துறை கொடுத்த இந்த தகவலின் அடிப்படையில், முதல்வர் ஓ.பி.எஸ்., சட்டப்பேரவையில், பின்லேடன் இயக்கத்தினரையும் சல்லிக்கட்டு போராட்டக்காரர்களையும் தொடர்புபடுத்தி, அமெரிக்க ஜனாதிபதி ரேஞ்சுக்கு உரை நிகழ்த்தினார்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். ஆனால், எட்டு நாள்கூட ஆகவில்லை, இவர்களின் புளுகு பல்ப் வாங்கிவிட்டது. பின்லேடன் போட்டோ பொறித்த இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிக்கன் கடை சலாவூதீன் மற்றும் அவரது நண்பர் மாபாஷா. இவர்கள் இருவரும் தடா ரஹீம் தலைமையிலான இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களது கட்சி, சல்லிக்கட்டு போராட்டம் நடப்பதற்கெல்லாம் முன்பாக, கடந்த டிசம்பர் மாதம் பாஜகவின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியது. அந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக இவர்கள் இருவரும் பின்லேடன் போட்டோ பொறித்த இரு சக்கர வாகனத்தில் சென்றார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான், ஒரு மாதத்துக்குப் பிறகு (ஜனவரியில்) நடந்த சல்லிக்கட்டு போராட்டத்துடன் முடிச்சு போட்டு கயிறு திரித்துவிட்டார்கள். பின்லேடன் போட்டோ பொறித்த வாகனத்தில் சென்ற இவர்களுக்கும், சல்லிக்கட்டு போராட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
பின்லேடன் போட்டோ ஒட்டிய வாகனத்தில் சென்ற இருவரில் ஒருவரான சிக்கன்கடை சலாவூதீன் கூறியிருப்பதாவது:
நான் ஓட்டேரியில் குடியிருந்து வருகிறேன். இந்திய தேசிய லீக் கட்சியில் வட்டச் செயலாளராக உள்ளேன். எங்கள் கட்சி சார்பில் கடந்த டிசம்பர் மாதம் பா.ஜ.கவின். மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தில் கலந்துகொள்ள நானும், என்னுடைய நண்பர் மாபாஷாவும் இரு சக்கர வாகனத்தில் சென்றோம். வாகனத்தை மாபாஷா ஓட்டினார். நான் பின்னால் அமர்ந்திருந்தேன்.
அன்றைய தினம் மெரினா காமராஜர் சாலை வழியாக வாகனத்தில் சென்றபோது நான் பிரதமர் மோடியின் மாஸ்க்கை அணிந்திருந்தேன். எங்கள் கட்சியை சேர்ந்த சிலர் என்னையும், மாபாஷாவையும் செல்போனில் போட்டோ எடுத்தனர். போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக, வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நான் எழுந்து நின்றேன்.
இந்த போட்டோவை முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் டிசம்பர் மாதமே பதிவு செய்தனர். என்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஒரு கெத்துக்காக பின்லேடன் மற்றும் எங்கள் கட்சியின் தலைவரின் போட்டோவை பொறித்து இருந்தேன். இந்த போட்டோவைப் பார்த்த எங்கள் கட்சித் தலைவர் தடா ரஹீம், அந்த போட்டோவை உடனடியாக கிழித்துவிட்டார்.
மெரினாவில் நடந்த சல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீசாரின் வன்முறை சம்பவங்கள் ஜனவரி 23-ம் தேதி நிகழ்ந்தன. அந்த சமயத்தில் பின்லேடன் போட்டோ பொறித்த எங்களின் பழைய போட்டோவை பா.ஜ.க.வை சேர்ந்த ஹெச்.ராஜா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அந்த போட்டோ அதிகமாக பரவியது.
இதனால் என்னையும், மாபாஷாவையும் போலீஸார் 2 மணி நேரத்துக்கு மேல் விசாரித்தனர். “சல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டீர்களா” என்றும் கேள்வி கேட்டனர். அதற்கு நாங்கள் “இல்லை” என்று தெரிவித்தோம். சல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை சம்பவம் நடந்த அன்று நான் வேலை பார்க்கும் சிக்கன் கடையில்தான் இருந்தேன். அதற்கு ஆதாரமாக எங்கள் கடையின் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் நான் பதிவான காட்சிகள் இருக்கின்றன.
மேலும், நான் இருசக்கர வாகனத்தை 58,000 ரூபாய்க்கு ராஜி என்பவரிடமிருந்து வாங்கினேன். இன்னும் வண்டியை என்னுடைய பெயருக்கு கூட மாற்றம் செய்யவில்லை. ராஜி என்பவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருப்பதாகவும் தவறான தகவல்களை சிலர் பரப்பினர். சில மாதங்கள் பைக்குக்கு கடன் தொகை கூட நான் செலுத்தவில்லை.
என்னுடைய முகநூல் பக்கத்தில் வீரவாளுடன் நான் இருக்கும் போட்டோ இருந்தது. அதை வைத்துக்கொண்டு என்னை பின்லேடனின் அனுதாபி என்று போலீஸ் தரப்பில் தகவல்கள் பரப்பப்பட்டன. வீரவாளுடன் இருக்கும் என்னுடைய புகைப்படத்தையும் ஒரு கெத்துக்காகத் தான் பதிவு செய்து இருந்தேன். கெத்துக்காக போடப்பட்ட ஒரு புகைப்படம் எனக்கு இந்தளவுக்கு மனவேதனையை கொடுத்து விட்டது.
இவ்வாறு சலாவூதீன் கூறியுள்ளார்.
எனினும், சுவாதி கொலை வழக்கில் அப்பாவி ராம்குமார் மீது வீண் பழி சுமத்திய போலீசார் தங்கள் தரப்பை உண்மை என காட்ட தில்லாலங்கடி வேலைகள் செய்ததைப் போல, தற்போது சல்லிக்கட்டு போராட்டத்துக்கும் பின்லேடன் படத்துக்கும் பொய்யாய் முடிச்சு போட்டுவிட்ட உளவுத்துறை, தங்கள் தவறை மறைக்க, தங்கள் தரப்பை நிரூபிக்க அதிதீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.