அதிமுக பொதுக்குழுவில் வரலாறு காணாத அராஜகம்: பன்னீர்செல்வம் வெளிநடப்பு
பல்வேறு திருப்பங்கள் நிறைந்த சட்டப்போராட்டத்துக்குப்பின், அதிமுக.வின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் இன்று நடந்தது.
இக்கூட்டத்துக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வதுக்கு எதிராக அங்கு திரண்டிருந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் யாரும் வரவேற்கவில்லை. மாறாக, அவரை “துரோகி” என்றும், “ வெளியேறு” என்றும் கூறி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அவர் தனது ஆதரவாளர்களுடன் அமைதியாக இருந்தார்.
பொதுக்குழுவுக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் மேடை ஏறினர். மேடையில் இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு இருவரும் மரியாதை செய்து அமர்ந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையே தற்காலிக அவைத் தலைவரான தமிழ் மகன் உசேனுக்கு நாற்காலி போடப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தொடர வேண்டிய தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிந்தார். ஜெயக்குமார் வழிமொழிந்தார்.
இதையடுத்து தமிழ் மகன் உசேன் அதிமுகவின் அவை தலைவராக தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேடையில் இடைமறித்துப் பேசிய சி.வி.சண்முகம் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்க கோரிக்கை வைத்தார். ”அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிக்கிறோம். ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என மேடையில் கே.பி.முனுசாமி ஆவேசமானார்.
அடுத்து பேசிய சி.வி.சண்முகம், ”இரட்டை தலைமையால் அதிமுக தீவிரமாக செயல்பட முடியவில்லை. வலிமையான, வீரியமான ஒற்றைத் தலைமை வேண்டும். அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை நடப்பு பொதுக்குழுவிலே தெரிவிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதற்கு பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
”சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு இது. கோர்ட் தீர்ப்பிற்கு எதிரான செயல்பாடு இது” என்று வைத்தியலிங்கம் கூறிய நிலையில் பன்னீர்செல்வமும், அவரது அணியினரும் பொதுக்குழுவிலிருந்து ஓபிஎஸ்,வைத்தியலிங்கம் வெளிநடப்புசெய்தனர். அப்போது பழனிசாமி ஆதரவாளர்கள் அநாகரிகமாக முழக்கங்கள் எழுப்பியதோடு பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில்களை அராஜகமாக வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பன்னீர்செல்வம் பதில் எதுவும் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றார்.