“சசிகலாவை ஆட்சி அமைக்க இப்போதைக்கு அழைக்க இயலாது!” – ஆளுநர்
தமிழகத்தை யார் ஆட்சி செய்வது என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவுக்கும் இடையில் நடக்கும் இந்த அதிகார போட்டி தொடர்பாக, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது..
3 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், தமிழகத்தில் தற்போது நிலவும் விசித்திர அரசியல் சூழல் குறித்து ஆளுநர் விரிவாக விவரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலா சம்பந்தப்பட்டுள்ள வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ள ஆளுநர், இதனால் சசிகலாவை ஆட்சி அமைக்க இப்போதைக்கு அழைக்க இயலாது என்று கூறியிருப்பதாக தெரிகிறது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சசிகலாவால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கொடுத்த தகவலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆளுநர், இது குறித்து விசாரணை நடத்த டி.ஜி.பி.க்கு தாம் உத்தரவிட்டிருப்பதாகவும் அறிக்கையில் கூறியிருப்பதாக தெரிகிறது.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது..