“நான் ஓ.பி.எஸ். வீட்டுமுன் தோசை கடை போடலாம் என்று பார்க்கிறேன்!”

நேற்று கவிஞர் பெருந்தேவி மேடம் ஓ பி எஸ் வீட்டில் நடந்து வரும் காட்சிகளை எழுதச் சொன்னார். சீனியர் ஒருத்தரின் வேண்டுகோள் என்பதால் போனஸாக அந்தப் பக்கத்து காட்சிகளையும் சேர்த்துச் சொல்லி விடுகிறேன்.

இரண்டு தரப்புகளும் புழங்கும் இடத்திற்கு நண்பர்கள் தயவுடன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு போனேன். தேட் கொண்டையை மறைத்த மொமண்ட்.

சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் இருக்கிறது. ஓர் இல் நெய்தல் கறங்கி என்று தொடங்கும் பாடல். முழுப் பாடலையும் தலை கீழாகக் கூடச் சொல்வேன். தமிழைப் பாடமாக எடுத்துப் படித்தவன். உடன் படித்த தோழி ஒருத்தியிடம் போட்டி போட்டு மனப்பாடம் செய்தேன். அந்தப் பாடல் இரண்டு காட்சிகளை விவரிக்கும். ஒரு இல்லத்தில் திருமணத்திற்கான மங்கல ஒலிகள் முழங்கும். மற்றொன்றில் துக்கத்திற்கான ஒலிகள் கேட்கும். இன்னாது அம்ம இவ்வுலகம், இனியது காண்பர் இயல்புணர்ந்தார் என முடியும். அப்படியே அந்தப் பாடல் விவரிக்கும் காட்சிகளோடு ஒப்பிடாதீர்கள். இரண்டு வெவ்வேறு மூட் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

பன்னீர் வீட்டிலும் சசி வீட்டிலும் என இரண்டு பக்கமுமே சொந்தக்காரப் பசங்கதான் அணி வகுக்கிறார்கள். பொதுவாகவே தஞ்சைக்காரர்களுக்கு ஒரு க்ளீன் இமேஜ் உண்டு. ஆனால் இங்கே முறுக்கிக் கொண்டு நிற்கிறார்கள். மாறாக கரடு முரடாக இருப்பார்கள் எனச் சொல்லப்படும் மதுரைக்கார இளைஞர்கள் பன்னீர் வீட்டில் அவரைப் போலவே பவ்யம் காட்டுகிறார்கள். ஆனால் அது நிஜ பவ்யம்.

பன்னீரின் வீடு சுற்றுலாத்தலமாகி விட்டது. டெல்லி அப்பளம் மட்டும்தான் விற்கவில்லை. மற்றபடி மாங்காய் சுண்டல், ஐஸ்க்ரீம் எல்லாம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாள் இழுத்தால், நானே அங்கே ஒரு தோசைக் கடை போடலாம் என்று பார்க்கிறேன்.

பன்னீர் வீட்டுக்குள் உள்ள சமையலறைக்குப் போய் “அக்கா ஒரு காபி கொடுங்க” என கேட்டுச் சாப்பிடலாம் என்கிற மாதிரி ஒரு சுதந்திரம். அதனால் அந்தப் பக்கம் வாக்கிங் போகும் தட்டிலிருந்து அந்தப் பக்கத்தில் இருக்கும் சத்யா நகர் தட்டு வரை வீட்டில் விசிட்டைப் போடுகிறார்கள். ஆச்சரியமாகப் பேசிக் கொள்ளவும் செய்கிறார்கள். குறிப்பாய் பெண்கள். ஆண்கள்தான் கொஞ்சம் மண்டைக்கனம் பிடித்து அலைகிறோம் போல. ட்ராக் ஷூட் அணிந்து ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்திருக்கும் அம்மா, அருகில் உள்ள குடியிருப்புவாசியிடம், “அடுத்து யார் வர்றாங்களாம்” என்று வாஞ்சையாய் கேள்வி கேட்கிறார்.

ஊரில் இருந்தும் குடும்பத்தோடு வருகிறார்கள். “அங்க பாரு அங்க்கிள” என தோளுக்கு மேலே குழந்தையைத் தூக்கிக் காண்பிக்கிறார்கள் பெண்கள். கூடுமானவரை பன்னீர் ஐ காண்டக்ட் வழியாக எல்லோரையும் பார்த்து சிரித்து விடுகிறார். கூட்டம் குஷியாகி விடுகிறது. சின்னம்மா என்று யாராவது வாய் தவறி சொன்னால் ஒரு கூட்டம் டென்ஷனாகிறது. அதெல்லாம் மரியாதையா பேசணும்பா என ஒரு கூட்டம் கண்டிக்கிறது.

அந்தப் பக்கம் பார்த்தேன். காதில் கேட்கவே முடியாதபடி போதையில் பேசுகிறார்கள். அமைச்சர் சிவி சண்முகமெல்லாம் எப்பேர்பட்ட ஆள். ஆனால் போதையில் சலம்பியதைப் பார்த்திருப்பீர்கள் தானே?

காவல்துறையினரே ரெண்டு முகமூடி போட்டிருக்கிறார்கள். சசிகலா போலீஸ் பிடித்துத் தள்ளுகிறார்கள். ஐ டி கார்டு கேட்கிறார்கள். பன்னீர் போலீஸ் சிரிக்கிறார்கள். “ரைட்ல போய் லெப்ட்ல திரும்புங்க” என பொறுப்பாய் வழி காட்டுகிறார்கள்.

அந்தப் பக்கம் பதற்றத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. எல்லோரையும் சந்தேகத்தின் ரேகை ஒரு துயரம் போல படர்ந்திருக்கிறது. யாரும் யாரையும் நம்பவில்லை. ஒருவருக்கொருவர் குத்திக்கொள்ள சந்தேகக் கத்தியுடன் அலைகிறார்கள். தன்னம்பிக்கை இல்லாத உடல் மொழியோடு வலம் வருகிறார்கள் பலமிருந்தும். அவர்களது சின்னம்மாவிடம் நல்ல பேர் வாங்க வேண்டுமென்கிற ஆர்வக் கோளாறில் விவரம் புரியாமல் கட்சிச் சீனியர்களின் சட்டையில் கை வைக்கிறார்கள். பன்னீரையே அப்படிப் பிடித்தார்கள் தானே? பணம் ஆறாய் ஓடுகிறது. ஆனாலும் சந்தோஷமில்லை.

மாறாக, பன்னீர் வீட்டில் உற்சாகம் கரை புரள்கிறது. ஏதோ பிடி கிடைத்தது போல தன்னம்பிக்கையுடன் அலைகிறார்கள். எம்மாம் பெரிய ஆள் வந்தாலும் ஒரே மரியாதைதான். பொன்னாடை, மைக் கட்டாயம். பின்னாடி நின்று பன்னீர் சிரிப்பதற்கு உத்தரவாதம். கொடுக்கிற பிரியாணியும் குவாலிட்டியாகத் தான் இருக்கிறது. பன்னீரின் மகர் (வேண்டுமென்றே தான்) பார்த்துப் பார்த்துச் செய்கிறார். நோட்டும் இறக்கப்படுகிறது. தப்பில்லை. வீட்டில் திருமணம் என்றால் செலவு வரத்தானே செய்யும்?

ஆமாம் ஒரு பக்கம் திருமணக் காட்சிகள். இன்னொரு பக்கம் என்ன காட்சி என்பதை அந்தப் பாடலைப் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இனியது காண்பர் இயல்புணர்ந்தாரே. ஆனாலும் இந்த இரண்டுமே இன்னாது அம்ம இவ்வுலகம் கேட்டகிரியில்தான் வரும்.

டெல்லி அப்பளம் அங்கே இல்லைதான். ஆனாலும் முழுக்கவே டெல்லி அப்பள வாடை அந்தப் பகுதி முழுக்கப் பரவியிருக்கிறது.

SARAVANAN CHANDRAN