“புதுமைத் தலைவி” சசிகலாவின் “பொற்பாதம்” பணிந்து வணங்கிய முதல்வர் ஓ.பி.எஸ்.!

ஆண்டான் – அடிமை முறைக்கு ஜனநாயகத்தில் இடமில்லை. இங்கு கட்சித் தலைவரும் தொண்டர்களும் சமமானவர்கள் தான். “கட்சித்தலைவர் உயர்ந்தவர், தொண்டர்கள் தாழ்ந்தவர்கள்” என்ற ஏற்றத் தாழ்வு கூடாது என்பது ஜனநாயகத்தின் முக்கியப் பண்பு. அதனால் தான் கட்சித்தலைவரை “First among equels” என்பார்கள்.

தமிழகத்தில், இந்த ஜனநாயகப் பண்பு மீது அணுஉலையை ஏற்றி வெடிக்கச் செய்து நாசமாக்கியவர்களில் முக்கியமானவர் ஜெயலலிதா. தன்னைத் தவிர ஏனையோர் அனைவரையும் அடிமைச் சேவகர்களாக பாவிக்கும் மனப்பான்மை கொண்டவர் அவர். அதனால் தான் தனது அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தன் காலில் விழ வேண்டும் என்றும், கேள்விக்குறி போல் முதுகு வளைந்து கூழைக் கும்பிடு போட வேண்டும் என்றும் அவர் விரும்பினார். அச்செயல்களை அவர் ரசித்து மகிழ்ந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இந்த ஜனநாயக விரோதப் போக்கு முடிவுக்கு வரும்; அனைவரையும் சக தோழர்களாய் பாவிக்கும் பண்பு மீட்டெடுக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவதற்கு முன்பே சில இரண்டாம் கட்டத் தலைவர்கள் “சின்னம்மா” என்று அலறி, அவரது காலில் தொப் தொப்பென்று விழுந்து, ஜனநாயகவாதிகளின் முகச்சுழிப்புக்கு ஆளானார்கள். இன்று தமிழகத்தின் மிக உயர்ந்த முதலமைச்சர் பதவியிலிருக்கும் ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவின் “பொற்பாதம்” பணிந்து வணங்குவதாக கூறிவிட்டார்.

புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்க இன்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தரும் சசிகலாவை வரவேற்று, “மாண்புமிகு” முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் பொருளாளர் என்ற முறையில் இன்றைய தினத்தந்தி நாளிதழில் அரைப்பக்க விளம்பரம் கொடுத்திருக்கிறார். அது:

“மாண்புமிகு அம்மா அவர்களின் உடன்பிறவா சகோதரியாய் உடன்நின்று உழைத்து, உருகும் மெழுகாக இளைத்து, அம்மா அவர்களையும், கழகத்தையும் காத்த கடமைக் காவியமே!

கழகப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று, புரட்சித்தலைவி வழியில் புதுமைத்தலைவியாய் கழகத்தை வழிநடத்த வருகை தரும் மதிப்பிற்குரிய சின்னம்மா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி வரவேற்கிறேன்.

என்றும் தங்களின் வழிதொடரும்

ஓ.பன்னீர்செல்வம்

கழகப் பொருளாளர்.”

ஆக, இன்று அதிமுகவில் ஆண்டான்(ள்) மாறியிருக்கிறார்; அடிமைத்தனம் மாறவில்லை. அதிமுக என்ற கட்சி அழித்தொழிக்கப்படாத வரை அது மாறவும் மாறாது…!

அமரகீதன்