“விஜயகாந்த் முதல்வரா? நான் கம்யூனிஸ்டாக இருப்பதில் வெட்கப்படுகிறேன்!”

விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் மக்கள் நலக் கூட்டணி கூட்டு சேர்ந்திருப்பதை ஒரு சாரார் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்களில் சிலரது கருத்துக்கள் இங்கே:-

# # #

மனநல மருத்துவர் ருத்ரன்: மக்கள் நலம் என்பது விஜயகாந்த் முதல்வராவதெனில் நான் கம்யூனிஸ்டாக இருப்பதில் வெட்கப்படுகிறேன். அட்டை வாங்காது வாழ்முறை கம்யூனிஸ்டாக வாழும் எனக்கு இருக்கும் அருவெறுப்பு தோழர்களுக்கு இல்லையெனில், அவர்களின் அட்டைகள் சற்றே தடிமனான வெற்று காகிதம் மட்டுமே. மார்க்ஸ் படத்துடன் விஜயகாந்த் படத்தையும் சிவப்புப் பின்னணியில் பார்க்கப்போகும் இழிநிலை என் வாழ்வின் துயர்நிலை.

# # #

தமிழருவி மணியன்: திமுக எப்படியாவது விஜயகாந்த்தை தன் பக்கம் வரவழைத்து அவர் வைத்திருக்க கூடிய 5 விழுக்காடு வாக்குகளை தன்னோடு சேர்த்து ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றி விடலாம் என்று கனவில் இருந்தார்கள். அந்த கனவு கலைந்திருக்கிறது. அந்த கனவு கலைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. அதேநேரத்தில் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார் என்றால், இனி மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியலை வளர்ந்தெடுக்கும் கூட்டணி என்று வாய் திறந்து பேசல் ஆகாது. திமுக, அதிமுக இருவரிடம் இருந்தும் ஒரு மாற்று அரசியலை தேமுதிகவிடம் இருந்து நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. அதிமுகவில் துதி பாடும் அரசியல் மற்றும் திமுகவில் குடும்ப அரசியல் இரண்டுமே தேமுதிகவில் உண்டு. தமிழகத்தில் அமாவாசை இருள் சூழப் போகிறது என்பதற்கான அறிகுறி தான் இன்றைக்கு உருவாகி இருக்கக் கூடிய இந்தக் கூட்டணி. இன்றைக்கு விஜயகாந்த்தை ஏற்று அவருடைய முதுகிற்கு பின்னால் வைகோ இருக்கின்றார் என்றால் அவருடைய அரசியலில் வீழ்ச்சியையும், சரிவையும் சந்திப்பதற்கு அவராகவே தகுதிப்படுத்திக் கொண்டார். வைகோவின் வீழ்ச்சி என் கண் முன்னால் தெரிகிறது.

# # #

ஜெயச்சந்திர ஹஷ்மி: அதிகாரம்தான் ஒரே இலக்கு என்ற முழக்கத்திற்கு வரவேற்பு இல்லாத சூழல் உருவாகி வரும் நேரத்தில், அதனை உடைத்தெறிந்து ‘நீயே பெரியவன், நீயே முதல்வர் வேட்பாளர், நான்கு கட்சிகளுக்கு தொகுதி பிரிப்பதற்கு முன்பு உனக்கே 124 தொகுதிகள்’ என்று விஜயகாந்த்தை இதுவரை தமிழகத்தை பீடித்திருந்த அதிகார அரசியலை நோக்கி தள்ளியிருப்பது மக்கள்நலக் கூட்டணி தமிழக மக்களுக்கு செய்திருக்கும் மிகப்பெரிய துரோகம்.

விஜயகாந்த் வருகை தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதை தடுத்திருந்தது என்றால் இத்தனை நாட்கள் ஏன் ‘முதல்வர்களுக்கு வாக்களித்தது போதும், கொள்கைகளுக்கு வாக்களியுங்கள்’ என்று நீட்டி முழக்கி பிரச்சாரம் செய்துவந்தீர்கள்? இப்போது எந்த குறைந்தபட்ச கொள்கை அடிப்படையில் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறீர்கள்? உங்கள் பழைய பிரச்சாரத்தின்படி இப்போது மக்கள் உங்களுக்கு வாக்களிக்கூடாதில்லையா?

இத்தனை வருடங்களைப் போலவே, மீண்டுமொருமுறை மாற்றுசக்தியாய் மாறும் வாயப்பை இழந்திருக்கின்றன கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள். வலுவான மாற்று என்பது இதுவரையில் இங்கே நடந்துவந்திருக்கும் அத்தனை மக்கள் விரோத செயல்களுக்கும் மாற்றாக இருப்பது. மாறாக வழக்கமாக நடக்கும் தேர்தல் ஸ்டண்ட்டையே பின்பற்றுவது அல்ல. அது தேர்தல் அரசியலுக்கு, ஓட்டரசியலுக்கு வேண்டுமானால் மாற்றாக இருக்கலாம். ஆனால் கொள்கை அரசியலுக்கு ‘ஏமாற்று’ !!!

# # #

ஸ்ரீதர் சுப்பிரமணியம்: சொல்ல வந்ததை தெள்ளந் தெளிவாக, சுவாரஸ்யமாக சொல்ல வேண்டியது ஒரு அரசியல்வாதிக்கு மிக முக்கியம். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கே முன்னோடிகளில் ஒருவர் கலைஞர். பேசுவதே குறைவாக இருந்தாலும் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நறுக்குத் தெறித்தார்ப் போல பேசுபவர் ஜெயலலிதா. விஜயகாந்த் ஒரு வாக்கியத்தைக் கூட முழுதாக, கோர்வையாக முடிக்க வல்லவரா என்பது இன்னமும் சந்தேகமாகவே இருக்கிறது.

திமுகவின் கொள்கை, பல்வேறு தேசப் பிரச்சனைகளில் அவர்களின் நிலைப்பாடு நாம் எல்லாரும் அறிந்ததே. அதில் அவர்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்பது தனி விவாதம். ஏதாவது ஒரு விஷயத்திலாவது தேமுதிகவின் கொள்கை நிலைப்பாடு என்ன என்று சுதீஷுக்காவது தெரியுமா என்பது சந்தேகம்தான்.

மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவின் காலில் விழுகிறார்கள் என்பது பிரச்சனையாக பேசப்படுகிறது. விஜயகாந்த் தன் கட்சி எம்.எல்.ஏக்களை பொதுவெளியில் அடிக்கவே செய்திருக்கிறார். அதனை அவர் கட்சியினர் பெருமையாக வேறு ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

தேவைப்படும் போதெல்லாம் கலைஞர் மீடியாவை சந்திக்கிறார். மிகக் குறைவாகவே கோபத்தைக் காட்டி இருக்கிறார். ஜெயலலிதாவோ கரன் தாபருடனான தன் கடைசி நேர்காணலில்கூட சர்ச்சைக்குரிய கேள்விகள் பல தன் முன் வந்தாலும் இறுகிய முகத்துடன் கேள்விகளை எதிர்கொண்டாரே தவிர பிரச்சனை எதுவும் பண்ணவில்லை. விஜயகாந்த் நிருபர்களை அடிக்க எழுந்து ஓடி இருக்கிறார். ‘தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க’ என்று மிரட்டி இருக்கிறார். காறிப் துப்பி இருக்கிறார்.

திமுக, அதிமுக இரண்டும் தமிழ் நாட்டை அழித்து விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு சரியான மாற்று அரசியல் கிடைத்து விட்டது என்பதில் பெருமிதம் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

0a1v