கருத்துக் கணிப்பு முடிவு: தமிழகம், புதுவையில் திமுக கூட்டணிக்கு 35; அதிமுக கூட்டணிக்கு 5
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியும் விஎம்ஆர் சர்வே நிறுவனமும் இணைந்து நாடு முழுவதும் பரவலாக 16,931 பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தின. இதன் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக கூட்டணி குறைந்த இடங்களிலேயே வெற்றி பெறும்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 34 இடங்களில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். 5 இடங்களில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும். புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும்.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 16 இடங்களையும், பாஜக கூட்டணி ஒரு இடத்தையும் பிடிக்கும்.
ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளில் 22 தொகுதிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸும், 3 இடங்களை தெலுங்கு தேசமும் கைப்பற்றும். காங்கிரஸ், பாஜகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது.
தெலங்கானாவில் மொத்தம் உள்ள 17 இடங்களில் காங்கிரஸ் ஒரு இடம், பாஜக 2 இடங்கள், டிஆர்எஸ் கட்சி 13 இடங்களைப் பிடிக்கும்.
கர்நாடகாவின் 28 தொகுதிகளில் 13 இடங்களில் காங்கிரஸ், 15 இடங்களில் பாஜக வெற்றி பெறும்.
நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 283 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 135 இடங்களையும், மற்ற கட்சிகள் 125 இடங்களையும் பிடிக்கும்.
உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகளில் பாஜக 42 இடங்களையும், சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி 36 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றும்.
குஜராத்தின் 26 தொகுதிகளில் பாஜக 24 இடங்கள், காங்கிரஸ் 2 இடங்களைப் பிடிக்கும்.
ராஜஸ்தானின் 25 தொகுதிகளில் பாஜக 20 இடங்கள், காங்கிரஸ் 5 இடங்களைப் பிடிக்கும்.
டெல்லியில் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்.
ஜம்மு காஷ்மீரின் 6 தொகுதிகளில் 4 இடங்களை ஜம்மு காஷ்மீர் தேசியக் கட்சியும், 2 இடங்களை பாஜகவும் பிடிக்கும்.
இவ்வாறு கருத்துக் கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.