“விஷால் அவர்களே… டெல்லி போனீர்களா? பிரதமரை சந்தித்தீர்களா? என்ன பேசினீர்கள்?”
விசால் அவர்களே…
திருட்டு விசிடி, நடிகர் சங்க கட்டிடம், தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றல்னு ஏகப்பட்ட பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிச்சது போதாதுன்னு கடைசியா சல்லிக்கட்டில் ஒரு ஸ்டண்ட் அடிச்சீங்க பாருங்க..
அய்யய்யோ… யப்பா… மிதமிஞ்சிய அரசியல்வாதிகளையும் மிஞ்சிட்டீங்க சார் நீங்க.
விட்டீங்க பாருங்க ஒரு ஸ்டேட்மெண்ட் – “சல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி பிரதமரை சந்தித்து பேசப் போகிறேன்”னு…
விசால் அவர்களே.. எனக்கு பல உண்மைகள் தெரிஞ்சாகணும்..
விமான நிலையம் வரை சென்று பத்திரிகையாளர்களை சந்தித்த பிறகு விமானத்தில் ஏறினீர்களா? இல்லையா? அல்லது விமானம் டேக் ஆஃப் ஆகவே இல்லையா?
டெல்லி சென்றீர்களா? பிரதமரை சந்திச்சீங்களா? பிரதமர் என்ன சொன்னார்? சல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி தந்தாரா?
அந்த வாக்குறுதிகளை, நீங்கள் திரும்பியபின் பத்திரிகையாளர்களை சந்தித்து ஏன் சொல்லவில்லை? அல்லது டெல்லியிலிருந்தே இன்றுவரை திரும்பவில்லையா?
முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் பிரதமரை சந்திக்கும்போது, உங்களுக்கென்ன சார் அவசரம்? யாரை திருப்திப்படுத்த அந்த அவசர அறிக்கை?
மந்திரிகளே பிரதமரை சந்திக்க வழியில்லை. நீங்கள் எப்படி சந்தித்திருக்க முடியும்? ஒரு மாநிலத்தின் முதல்வரைவிட நீங்கள் அதிகாரம் படைத்தவரா?
ரஜினி, கமல் இவர்கள் பிரதமரை சந்தித்திருக்க மாட்டார்களா? ஏன் அமைதி காத்தார்கள்? ஒரு மாநில முதல்வரின் நடவடிக்கைகள் தான் தீர்வு தர முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
நீங்கள் புதியவர். எதையெடுத்தாலும் அவசரக் கோலத்தில் வாய்விடும் உங்களுக்கு இது எங்கே தெரியப் போகுது? அல்லது முதல்வரால் சாதிக்க முடியாததை நான் சாதித்துக் காட்டுவேன் என்ற அதீத நம்பிக்கையா? தெரியவில்லை!
நீங்கள் நடிகர் சங்கத்தின் செயலாளர் மட்டுமே; மக்கள் பிரதிநிதியல்ல. ஒரு மாநிலத்தின் கோரிக்கை நடிகர் சங்கத்தின் மூலம் போயிருந்தால் நிச்சயம் வலுவிழந்து போயிருக்கும்.
நீங்கள் செய்திருக்க வேண்டியது…
சல்லிக்கட்டு பிரச்சனைகள் வலுக்கத் தொடங்கும்போதே பீட்டாவை விட்டு நடிகர் – நடிகைகளை வெளியேறச் சொல்லியிருக்க வேண்டும்.
நீங்கள் பீட்டாவை எதிர்த்து நின்றிருக்க வேண்டும். உங்களோடிருப்பவர்களை பீட்டாவிற்கு எதிராக போராடச் செய்திருக்க வேண்டும்.
நடிகர் சங்க போராட்டத்தின் மூலம் பீட்டாவிற்கு ஒரு வலுவான எதிர்ப்பை உறுதிப்படுத்தியிருக்கலாமே?
ஆனால் இது எதையும் செய்யாமல், நாடக வார்த்தைகள், கண்துடைப்பு போராட்டத்தின் மூலம் நடிகர்கள் அனைவரையும் இன்றைய இளைஞர்கள் வெறுக்கும்படி ஆகிவிட்டதே!
உங்கள் செயல்பாட்டின் மூலம் எவ்வளவு பெரிய அவமானம் நேர்ந்து விட்டது? நடிகர் சங்கம் தமிழர்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்ற எண்ணத்தை பொய்க்கச் செய்து விட்டீர்களே விசால்?
சரி விடுங்கள். இனி என்ன செய்யப் போகிறீர்கள்?
நானும், அண்ணன் சேரனும் உண்ணாவிரதப் பந்தலில் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முனையுங்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கப் பலகையை பெயர்த்தெடுத்துவிட்டு ‘தமிழ் நடிகர் சங்கம்’ என்ற பொன்னெழுத்தைப் பொறியுங்கள்.
வரலாற்றில், விசால் காலத்தில் இது சாத்தியமாயிற்று என்று வருங்காலம் சொல்லட்டும்.
தெலுங்கு மொழி பேசுபவர் என்பதால் விசால் இதை செய்யத் தயங்குகிறார் என்ற பேச்சுக்களை உடையுங்கள்.
பீட்டாவிற்கான ஆதரவை அடியோடு நடிகர் சங்கத்திலிருந்து தூக்கியெறியுங்கள்.
எங்கள் மக்கள் பணத்தில் வாழும் நடிகர் – நடிகைகள், மக்களுக்கெதிரான பீட்டாவில் இருப்பதில்லை என உறுதி செய்யச் சொல்லுங்கள்..
இதையெல்லாம் செய்து நான் தமிழ் மக்கள் போடும் ஒவ்வொரு பருக்கையையும் மதிக்கிறேன் என நிரூபித்துவிட்டு,
நீங்கள் போட்டியிட்டால் உங்களுக்கு நானே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஓட்டுப் போடுகிறேன். நீங்கள் வெற்றி பெற வேலை செய்கிறேன்.
செய்வீர்களா…? நீங்கள் செய்வீர்களா…?
இதற்கும், பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறேன் பேர்வழி என டெல்லிக்கு ஃப்ளைட் பிடிக்காதீர்கள்.
– சுரேஷ் காமாட்சி
திரைப்பட தயாரிப்பாளர் & இயக்குனர்