ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – விமர்சனம்
இப்படத்தின் முதல் டீஸரில், “ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?” என்ற கேள்வியை எழுப்பும் விஜய் சேதுபதி, “இந்த கதையில் ராமனும் நான் தான்; ராவணனும் நான் தான்” என்று சொல்வதாலும், “இது முழுநீள காமெடி படம்” என விளம்பரம் செய்யப்பட்டதாலும், இது ஏதோவொரு வகையில் ராமாயணத்தை காமெடிக்கண் கொண்டு பார்க்கும் படமாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணம் சரி தான் என்பது இப்படத்தை பார்த்தபோது உறுதியானது.
என்றைக்கோ இயற்றப்பட்டு, காலந்தோறும் இடைச் செருகல்கள் சேர்க்கப்பட்டு, ‘இதிகாசம்’ என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கும் ராமாயணக் கதையின் அடிச்சரடு தான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் அடிப்படை கதை (Basic Story). ராமாயணம் விரிக்கும் பக்தி வலைக்குள் சிக்காமல் விலகி நின்று, அதை சமகாலத்துக்கு கொண்டு வந்து, நக்கலும், நையாண்டியும், ஃபேண்டஸியும் கலந்து, பாமரரும் ரசிக்கத் தக்க முழுநீள நகைச்சுவைப் படமாக கொடுத்திருப்பதோடு, இந்துத்துவவாதிகளின் எதிர்ப்புக்கு ஆளாகாமல், ‘ஃபேண்டஸி’ எனும் போர்வைக்குள் ஒளிந்து, சாமர்த்தியமாக தப்பித்திருப்பதில் தெரிகிறது அறிமுக இயக்குனர் ஆறுமுககுமாரின் அபார படைப்புத் திறன்.
ராவணனை அரக்கனாக மட்டும் அல்ல, எமனாகவும் சித்தரிக்கிறார் கம்பர். சீதையை கடத்துவதற்காக முனிவர் வேடத்தில் சென்றிருந்த ராவணன், சீதையோடு ஏற்பட்ட வாக்குவாதத்தில் சினமுற்று, “தன் இயற்கை வடிவத்துடன் எமனைப் போல் எதிரில் நின்றான்” என்கிறார் கம்பர். இப்படியாக ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் ‘எமன்’ என்றாகியிருக்கிறான் ராவணன். அவனது ராஜ்ஜியமாக இலங்கைக்குப் பதிலாக, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ‘எமசிங்கபுரம்’ என்ற மலைகிராமம் காட்டப்படுகிறது.
மலை மேல் இருக்கும் எமசிங்கபுரத்தில், எமனை தெய்வமாக வழிபடும் பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வெளியூர்களுக்குச் சென்று, யாரையும் அடிக்காமல், கொலை செய்யாமல், “நேர்மையாக” திருடுவதை தொழிலாகக் கொண்டவர்கள்! பெண்ணாட்சி நடக்கும் அந்த பழங்குடி கிராமத்தின் தற்போதைய தலைவி (விஜி சந்திரசேகர்) மகன் எமன் (விஜய் சேதுபதி).
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றின் மாணவன் ஹரீஷ் (கௌதம் கார்த்திக்). ‘வீராதி வீரன்’ என வர்ணிக்கப்படும் ராமனுக்கு நேர்மாறாக, பயங்கர கோழை இந்த ஹரீஷ். அடி வாங்குவதையே வாடிக்கையாகக் கொண்டவன். ஆனால், எத்தனை அடி வாங்கினாலும் அத்தனையையும் தாங்கிக்கொண்டு, எதுவுமே நடக்காதது போல் அசால்டாக எழுந்து நின்று, வீரன் போல் கம்பீரமாக போஸ் கொடுப்பவன். ராமனுக்கு ஓர் அனுமன் போல ஹரீஷூக்கு ஒரு நண்பன் – சதீஷ் (டேனியல் ஆனி போப்). இவன் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் பயங்கர காமெடியாக இருக்கும்.
சீதையைப் போல் அழகிய தோற்றம் கொண்டவள் சௌமியா (நிஹாரிகா). ஹரீஷ் படிக்கும் அதே கல்லூரியில் ஜூனியர் மாணவியாக புதிதாய் சேர்ந்திருக்கிறாள். அவளுக்குள்ளும், ஹரீஷூக்குள்ளும் காதல் மெல்ல முளைவிடுகிறது. தன் காதலை சௌமியாவிடம் சொல்ல நினைக்கும் ஹரீஷ், சட்டென்று மனம் மாறி, “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்று மழுப்பிவிடுகிறான். (ராமாயணத்தில் ராமனும் சீதையும் கணவன் – மனைவி. இங்கே அவர்கள் காதலை வாய்விட்டு தெரிவித்துக்கொள்ளாத காதலர்கள்.)
திருடுவதற்காக தனது சகாக்களான ரமேஷ் திலக், ராஜ்குமார் சகிதம் சென்னைக்கு வருகிறான் எமன். கல்லூரி மாணவி சௌமியாவைப் பார்க்கிறான். சில பல முயற்சிகளுக்குப் பிறகு, ராவணன் சீதையை கடத்திக்கொண்டு போனதைப் போல, எமன் சௌமியாவை கடத்திக்கொண்டு போகிறான். ராவணன் அசோகவனத்தில் சீதையை அரக்கிகளின் பாதுகாப்பில் வைத்தது போல, எமன் எமசிங்கபுரத்தில் சௌமியாவை தனது முறைப்பெண் கோதாவரி (காயத்ரி) பாதுகாப்பில் வைக்கிறான்.
ராமனும், அனுமனும் சீதையைத் தேடி அலைந்ததைப் போல, ஹரீஷூம், அவனது நண்பன் சதீஷூம் சௌமியாவைத் தேடி அலைகிறார்கள். இறுதியில் சௌமியா எமசிங்கபுரத்தில் இருப்பது தெரிந்து, அவளை மீட்பதற்காக அங்கே போய் சேருகிறார்கள். அங்கே எமனுக்கும், சௌமியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
நவநாகரிக நங்கையான சௌமியாவுக்கும், பழங்குடியினரான எமசிங்கபுரத்து மனிதர்களுக்கும் என்ன தொடர்பு, சௌமியாவை எமன் கடத்தியது ஏன் என்பது ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது. அந்த ஃபிளாஷ்பேக் கதை ராமாயணத்தில் இல்லாத கதை. ராவணன் எனும் எமன் ராமனாக – ஏகபத்தினி விரதனாக – வாழ்ந்த கதை.
எமன் சௌமியாவை திருமணம் செய்தானா? அல்லது பயந்தாங்கொள்ளியான ஹரீஷ் அவளை மீட்டானா? என்பது மீதிக்கதை.
ராவணனாக / எமனாக வருகிறார் ‘நடிப்பு ராட்சசன்’ விஜய் சேதுபதி. அவருக்கு பத்து தலைகள் இல்லை தான். ஆனால், விதவிதமான பத்து கெட்டப்களில் தோன்றி அதை ஈடு செய்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தில் கற்பனையாக வேறொரு நடிகரை வைத்துப் பார்க்கக்கூட முடியாது. அத்தனை பாந்தமாக அந்த கதாபாத்திரத்துக்குள் பொருந்தியிருக்கிறார் விஜய் சேதுபதி. சின்னச் சின்ன முகபாவனைகள், சின்னச் சின்ன வசன உச்சரிப்புகள் மூலமே அசால்டாக காமெடி பண்ணியிருக்கிறார். “அவர் அட்டகாசமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று படத்துக்குப் படம் வியந்து பாராட்டிப் பாராட்டி நமக்கே அலுத்துவிட்டது. இனிமேல் எந்த படத்திலாவது அவர் சரியாக நடிக்கவில்லை என்றால் மட்டும் அவருக்கு விமர்சனத்தில் இடம் ஒதுக்கினால் போதும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
இதிகாச நாயகனாகவே இருந்தாலும், கடத்தப்பட்ட தன் மனைவியை கண்டுபிடித்து மீட்பதற்கு ஒரு குரங்கை துணைக்கு வைத்துக் கொண்டவன் – ஒரு படைப்பாளியின் பார்வையில் – ஒரு கோழையாக, கோமாளியாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை. அத்தகைய ஹரீஷ் கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் கலக்கியிருப்பது மிகப்பெரிய சர்ப்ரைஸ். கல்லூரி விழாவில் ஆங்கிலப் பாட்டு பாடி தக்காளி வீச்சுக்கு ஆளாவதில் தொடங்கி, பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் “எமனையே கல்யாணம் பண்ணிக்க” என்று சௌமியாவை தாஜா பண்ணுகிற வரை காமெடி நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் கௌதம் கார்த்திக். அவரது கேரியரில் நிச்சயம் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
ராமனுக்கு அனுமன் போல, கௌதம் கார்த்திக்குக்கு நண்பனாக வரும் டேனியல் ஆனி போப் படம் முழுக்க காமெடி துவம்சம் செய்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் சூப்பர்மேன் படம் போட்ட ஜட்டியுடன் அடி வாங்குவது, அடி பொறுக்க முடியாத கௌதம் கார்த்திக் கடவுள் பெயருக்கு பதிலாக “ராஷ்ட்ரபதி… ராஷ்ட்ரபதி” எனச் சொல்ல, “சார், என்னை எவ்வளவு வேணும்னாலும் அடிச்சுக்கங்க சார். அவனை ‘ராஷ்ட்ரபதி’ன்னு மட்டும் சொல்ல வேணாம்னு சொல்லுங்க சார்” என்று போலீஸ்காரரிடம் கதறுவது – இது டேனியலின் ஒரு பானை காமெடிக்கு ஒரு காமெடி பதம். தமிழ் திரையுலகின் முதன்மையான காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை டேனியல் விரைவில் பெறப்போவது உறுதி. வாழ்த்துக்கள் டேனியல்.
படம் முழுக்க விஜய் சேதுபதியுடன் பயணிக்கும் அவரது சகாக்களாக வரும் ரமேஷ் திலக்கும், ராஜ்குமாரும் டேனியலுக்கு இணையாக காமெடி பண்ணி நம்மை சிரிக்க வைக்கிறார்கள். அவ்வப்போது ஏட்டிக்குப் போட்டியாக ஏதாவது செய்து விஜய் சேதுபதியிடம் அவர்கள் மொக்கை வாங்குவது சுவாரஸ்யம்.
சுட்டித்தனங்களுடன் கூடிய அழகுப் பெண் சௌமியாவாக வரும் நிஹாரிகா இதில் அறிமுக நாயகி. அலட்டிக்கொள்ளாமல் நடிப்பை வெளிப்படுத்தி, இவரும் தன் பங்குக்கு காமெடி பண்ணி கவனம் ஈர்க்கிறார். அடுத்தடுத்த தமிழ் படங்களில் இவர் வலம் வருவது உறுதி.
விஜய் சேதுபதியின் முறைப்பெண் கோதாவரியாக வருகிறார் காயத்ரி. விஜய் சேதுபதியின் கௌரவத்துக்கு களங்கம் ஏற்பட்டுவிடாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வது, கண்களாலேயே ஒருதலைக் காதலை வெளிப்படுத்துவது என செம பெர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்கிறார். படம் முடியப் போகும் தருணத்தில் விஜய் சேதுபதி கேட்கும் ஒரு கேள்விக்கு ஒரு சொட்டு கண்ணிரை பதிலாகத் தருகிறாரே… அழகு!
இயக்குனர் ஆறுமுககுமாருக்கு இது முதல் படம். முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தில், வித்தியாசமான சிந்தனையுடன், ‘நான் ஸ்டாப்’ காமெடியாக வித்தியாசமாக கதை சொல்லி, வித்தியாசமான வெற்றிப்பட இயக்குனர் என்ற பெயரை தட்டிச் சென்றிருக்கிறார். படத்தின் தொடக்கத்தில் “மிகப் பெரிய பிரபஞ்சம், அதற்குள் கேலக்ஸி, அதற்குள் சூரிய மண்டலம், அதற்குள் பூமி, அதற்குள் ஆசியா கண்டம், அதற்குள் இந்தியா, அதற்குள் ஆந்திரம், அதற்குள் இருக்கிறது எமசிங்கபுரம்” என்று சின்னஞ்சிறு மலைகிராமத்தை அறிமுகம் செய்ய மிகப்பெரிய பீடிகை போடும்போதே தொடங்கிவிடுகிறது இயக்குனரின் குறும்பு. அதிலிருந்து “ஆம்லேட் திருடர்கள்” விவகாரம், “அடுத்து ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை செல்லாதுன்னு சொல்லிருவாங்கெ” என்ற பகடி என காட்சிக்குக் காட்சி இயக்குனரின் குறும்பும், குசும்பும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிரவி, நம்மை சிரிப்பு சுனாமிக்குள் தள்ளி தத்தளிக்கச் செய்துவிடுகின்றன. பாராட்டுக்கள் ஆறுமுககுமார்.
உயிரைக் கொடுத்து சிரத்தையுடன் பணியாற்றியிருக்கும் கலை இயக்குனர் ஏ.கே.முத்து, ஒளிப்பதிவாளர் ஸ்ரீசரவணன், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்துக்கு மிகப் பெரிய பலம்.
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ – குடும்பத்துடன் போய் பார்த்து விலா நோக சிரித்து மகிழலாம்!