‘செண்பக கோட்டை’யில் பேய் ஓட்டுகிறார் ஓம்புரி!
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இன்று உயிருடன் இருந்து, நடிகர்களாகவும் இருந்திருந்தால், பேய்களாகவோ, பேயோட்டிகளாகவோ தான் நடித்துக்கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு இன்றைய தமிழ் சினிமாவில் பேய்களின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது. எனில், ஓம்புரி எம்மாத்திரம்…!
உலகப் புகழ் பெற்ற இந்திய இயக்குனர்களான சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், கோவிந்த் நிஹாலினி போன்றோரின் மாற்று திரைப்படங்களில் 1970-80களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ஓம்புரி. ‘வெர்சட்டைல் ஆக்டர்’ என பெயர் பெற்றவர். நசுருதீன் ஷா, ஷப்னா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல் போன்ற உன்னத நடிப்புக் கலைஞர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர். 1990களில் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்கள் காரணமாக மாற்று சினிமா நலிவடைந்ததை அடுத்து மசாலா சினிமா பக்கம் திரும்பியவர். இன்று ‘செண்பக கோட்டை’ என்ற தமிழ்ப் படத்தில் சாமியாடியாக, பேயோட்டியாக நடித்திருக்கிறார்.
ஹர்ஷினி மூவீஸ் தயாரிப்பில், கண்ணன் தாமரைக்குளம் இயக்கத்தில், தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கி, ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்ட படம், தமிழ் படப்பிடிப்பு தாமதமானதால், மலையாளத்தில் ‘ஆடு புலி ஆட்டம்’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இதன் தமிழ்ப்படம் தற்போது ‘செண்பக கோட்டை’ என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. இதில் ஓம்புரியுடன் ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், சம்பத், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
‘செண்பக கோட்டை’ படம் பற்றி அதன் இயக்குனர் கண்ணன் தாமரைக்குளம் கூறுகையில், “இந்த படத்தின் கதை, ராஜா-ராணி காலகட்டம், இன்றிலிருந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம், இன்றைய காலகட்டம் என 3 காலகட்டங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
சோழ வம்சத்தைச் சேர்ந்த பராந்தகன் என்ற அரசன், மலைவாழ் பழங்குடிப் பெண் ஒருத்தியை காதலித்து திருமணம் செய்துகொள்கிறான். அவள் மீது கொண்ட காதலால், அவளுக்காக ஒரு பிரமாண்டமான அரண்மனையை கட்டிக்கொடுக்கிறான். போர் மூண்டபோது, கணவனின் உயிரைக் காப்பாற்ற, தன் உயிரைக் கொடுத்து இறந்துவிடுகிறாள் அந்த மலைவாழ் பழங்குடிப் பெண். எனினும், அவளது ஆவி பல நூற்றாண்டுகளாக அந்த அரண்மனையிலேயே இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்து ‘செண்பக கோட்டை’ கதை பின்னப்பட்டிருக்கிறது.
ஜெயராம் இதுவரை நடிக்காத ஒரு கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரம்யாகிருஷ்ணன் அம்மன் பக்தையாக நடித்திருக்கிறார். இரண்டு சிறுமிகள்தான் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரங்கள். இதுவரை பார்த்திருக்காத அளவிற்கு பயங்கர பேய்ப்படமாக இது இருக்கும். இது விரைவில் திரைக்கு வர இருக்கிறது” என்கிறார் இயக்குனர் கண்ணன் தாமரைக்குளம்.