“முதியோர் இல்லம் குறித்து ஆபத்தான ஒரு குறும்படம்!” – ரவிக்குமார்
தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் மகனைப் பற்றிய குறும்படம் ஒன்று சில காலமாய் முகநூலில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது. சில நாட்களுக்குமுன் தோழர் டி.எஸ்.எஸ்.மணி அதைப் பகிர்ந்திருந்தார்.
தனது தந்தைக்காக முதியோர் இல்லத்தில் டிவி, ஏஸி வசதிகளோடு அறை ஒன்றை புக் செய்துவிட்டு லக்கேஜை எடுக்கப் போகிறான் ஒரு மகன். அப்போது அவனது அப்பாவும் அந்த முதியோர் இல்லத்தை நடத்தும் பாதிரியாரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். தந்தை உள்ளே போக, அவன் பாதிரியாரிடம், “எனது தந்தையை முன்பே தெரியுமா?” என்று கேட்கிறான்.
“ஓ நல்லா தெரியுமே! முப்பது வருஷத்துக்கு முன்ன ஒரு ஆண் குழந்தைய இங்கிருந்துதான் தத்து எடுத்துட்டுப் போனார்” என்று அவர் பதிலளிக்கிறார்.
அந்த மகன் திகைத்து நிற்கிறான்.
“கவலப்படாதப்பா. நாங்க அவர நல்லா பாத்துப்போம்” என பாதிரியார் சொல்ல, படம் முடிகிறது.
பெற்றோரை தம்மோடு வைத்துப் பராமரிக்க முடியாத ஒவ்வொருவரையும் குற்ற உணர்வுகொள்ளச் செய்யும் இந்தக் குறும்படம் ஓரளவு நேர்த்தியாகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் படம் இரண்டு விதங்களில் ஆபத்தானது எனச் சொல்வேன்.
ஒன்று: முதியோர் இல்லங்கள் எல்லாமே கைவிடப்பட்ட பெற்றோர் இருக்கும் இடங்கள்தாம் என்று பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் ஒரு பிழையான கருத்தை இந்தப் படம் பிரச்சாரம் செய்கிறது. அயல்நாடுகளிலோ, அயல் ஊர்களிலோ வேலை செய்யும் பிள்ளைகள் தம் பெற்றோரின் பாதுகாப்பைக் கருதி அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது இன்றைய சூழலில் இயல்பான ஒன்றாக மாறிவருகிறது. பொது உணவுக் கூடம், மருத்துவ வசதிகளோடு முதியோர்களுக்கென பிரத்யேகக் குடியிருப்புகளும் நிறைய வந்துவிட்டன. இந்த யதார்த்தங்கள் எதையும் இந்தக் குறும்படம் கணக்கில் கொள்ளவில்லை. அதைக்கூட அலட்சியப்படுத்தி விடலாம். ஆனால், மருமகள்களைக் கொடுமைக்காரிகளாக சித்திரிக்கும் ‘ஸ்டீரியோ டைப்’ பார்வையை இது வழிமொழிவதை சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்த இரண்டாவது காரணம் முக்கியமானது.
அந்த மகன் காரில் லக்கேஜை எடுக்கும்போது அவனது மனைவியிடமிருந்து செல்போனில் அழைப்பு வருகிறது. “தீபாவளி மாதிரி விசேஷத்துக்கெல்லாம் ஒங்க அப்பா வீட்டுக்கு வருவாரா?” என்று கேட்கும் அந்தக் குரல், “அங்கேயே அவருக்கு ஃப்ரண்ட்ஸ் கெடைப்பாங்க. நாம ஸ்வீட் செய்வோம் அதெல்லாம் அவருக்கு ஒத்து வராது. அங்கேயே இருந்துக்கட்டும்” என்ற பொருளில் பேசுகிறது.
இந்தப் படம் வெளிப்படையாக முன்வைக்கும் ‘சென்ட்டிமென்ட்டில் பெண்களுக்கு எதிரான இந்த ஆபத்தான பார்வை தமக்குள் இறங்குவதைப் பார்வையாளர்கள் கவனிக்க மறந்து விடுகிறார்கள்.
எதுவொன்றையும் அலசி ஆராயும் தோழர் டி.எஸ்.எஸ்.மணியே இதை சிலாகித்திருப்பது எனக்குக் கவலையளித்தது. அதனால்தான் இந்தப் பதிவு.
-ரவிக்குமார்
# # #
Prasanna Ramaswamy: Absolutely. Also, as a country we are ill prepared to face a huge population of old age people just around the corner. It is to be addressed sans emotional baggages. As it is a tiny industry of private old age homes and making good of it which is affordable for the upper class and most of them are extra investments for them. We have no policy decisions no health care or old age homes at affordable prices for the majority.
Feroz Khan: சகோ. ரவிக்குமாரின் கருத்து ஆபத்தான ஒன்று. காசை கொடுத்தால் போதும் என குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழும் மக்களின் செயல்களை ஆதரிப்பதுபோல் உள்ளது. மேலும் இதையும் வியாபாரமாக்கும் கார்பரேட் கலாச்சாரத்தை ஆதரிப்பதாகவும் உள்ளது.
Kathiravan Sundararajan: அண்ணன் ரவிக்குமார் அவர்கள் மேலான கவனத்துக்கு…. இந்த குறும்படம் சொல்லியிருக்கும் கருத்து 100க்கு 100 சரியே… பெரும்பாலான தமிழக பெண்கள், தங்கள் தாய் தந்தையரை கவனிப்பதில் 100ல் ஒரு பங்குகூட தன் கணவனின் தாய் தந்தையரை கவனிப்பதில்லை. தன் பெற்றோரின் அத்தியாவசிய தேவைகளைக்கூட கணவனால் நிறைவேற்ற முடியாத அளவுக்கு மனைவிகள் தரும் மன உளைச்சல் சொல்லி மாளாது. மனைவியை மீறி பெற்றோர்களைக் கவனித்தால் குடும்பத்தில் பல நாள் போராட்டம் தான்….. இதற்காகவே பெற்றோருக்கு எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் உள்ள ஆண்கள் எண்ணிக்கை அளவிட முடியாதது….. ஏன் இதற்கு என் குடும்பமே மிகச் சிறந்த முன்னுதாரணம்…..என்னைப் போல எத்தனையோ பேர் சொல்ல இயலாத நிலையில் உள்ளனர்…. தோழர்.. பெண் உரிமைக்கும். இதற்கும் சம்பந்தம் இல்லை.. இந்த மண்ணின் சாபக்கேடு என்றே இதைக் கருதுகின்றேன்.
Tss Mani: இந்தக் காணொளி, ஒரு குறிப்பிட்ட செய்தியை சொல்ல வருகிறது. இயந்திர ரீதியில் மனித வாழ்க்கையைப் பார்ப்பவர்கள், தங்களது இன்பம் மட்டுமே காண்பவர்கள் என இருப்பவர்களை உலகுக்குக் காட்டுகிறது. இப்படி ஆளே இல்லையா? அப்படிப்படட ஆட்கள் இன்று அதிகமாகி வருகிறார்களா, இல்லையா? அதை ‘ சொரணை வரும். அளவில்’ சொல்ல வேணடுமா, இல்லையா? அதை இந்தக் காணொளி செய்திருக்கிறதா, இல்லையா? மற்றபடி மாறுபட்ட கருத்து உள்ளவர்கள, தங்கள் கருத்துக்களை இன்னொரு காணொளி மூலம் வெளிப்படுத்துங்களேன்.
Baskaran Ranganathan: டிஎசுஎசு மணி அவர்கள் கருத்தை முழுமையாய் வழிமொழிகிறேன். அப்படியாவது அவர்களுக்கு சொரணை ஏற்படுகிறதா எனப் பார்ப்போம் என்று கூறியது முற்றிலும் உண்மை. பல பெரும்பான்மைக் குடும்பங்களில் உண்டுதானே மனைவியின் ஆட்சி.