‘ஜோக்கர்’ ஹீரோ நடிக்கும் ‘டார்க் காமெடி’ படம் – ‘ஓடு ராஜா ஓடு’!

சமீபத்தில் திரைக்கு வந்து ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட திரைத்துறையினர், தொல்.திருமாவளவன், ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகியோரின் பாராட்டுக்களையும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்ற வெற்றிப்படம் ‘ஜோக்கர்’. இப்படத்தில் ‘மக்கள் ஜனாதிபதி’ என்ற ஹீரோ பாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் குரு சோமசுந்தரம். அவரது நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘ஓடு ராஜா ஓடு’.

‘ஜோக்கர்’ படத்துக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட ‘ஓடு ராஜா ஓடு’ படத்தில் நான்கு முதன்மை கதாபாத்திரங்கள். அவற்றில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார். அவருடன் சாருஹாசன், நாசர், ஆனந்த்சாமி, லட்சுமி பிரியா, ஆஷிகா சல்வான், ரவிந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், மெல்வின் எம்.ரஞ்சன், வினு ஜான், சோனா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

o11

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, படத்தொகுப்பு செய்யும் நிஷாந்த் ரவீந்திரனும், ஒளீப்பதிவு செய்யும் ஜதின் ஷங்கர் ராஜூம் இணைந்து இப்படத்தை இயக்குகிறார்கள். இவர்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள்; எல்.வி.பிரசாத் அகாடமியின் பட்டதாரிகள்.

30 வருடங்களாக மிகவும் பிரபலமான நிறுவனமாக விளங்கும் மூலன் குருப் நிறுவனத்தின் தலைவர் விஜய் மூலன், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். கலையின் மீது கொண்ட காதலால் அவர் திரைப்படத்துறையில் தடம் பதித்துள்ளார்.

இப்படம் குறித்து இதன் இயக்குனர்கள் கூறுகையில், “செட்டாப் பாக்ஸில் ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. செட்டாப் பாக்ஸ் இருந்தால்தான் அப்படத்தை பார்க்க முடியும். எனவே ஒரு செட்டாப் பாக்ஸ் வாங்கிவரச் சொல்லுகிறாள் குரு சோமசுந்தரத்தின் மனைவி. குரு சோமசுந்தரம் புறப்பட்டு போகிறார். அதை தொடர்ந்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான் திரைக்கதை.

“இப்படம் நான்கு முதன்மை கதாபாத்திரங்களுக்குள் ஒரே நாளில் நடக்கும் கதை. நான்கு பேருக்கும் ஒவ்வொரு இலக்கு. அதை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதனால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இந்த நால்வரும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது என்ன நேர்கிறது என்பதை  வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் திரைக்கதையை அமைத்து, குடும்பத்துடன் ரசித்துப் பார்க்கும்படியாக ‘டார்க் காமெடி’ வகையில் இப்படத்தை எடுத்திருக்கிறோம். படத்தை நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார்கள் இயக்குனர்கள்.

‘வியாபாரி’ படத்தில் இடம் பெற்ற “ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்; அம்மாவை வாங்க முடியுமா” என்ற சூப்பர்ஹிட் பாடலை எழுதிய கவிஞர் பரிணாமன், இந்த படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார். இசை – டோஷ். ஊடகத்தொடர்பு – நிகில்.