ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது – விமர்சனம்

நடிப்பு: சத்யமூர்த்தி, விஜயகுமார் ராஜேந்திரன், கோபி அரவிந்த், சுதாகர் ஜெயராமன், முனிஷ்காந்த், ஜார்ஜ் மரியான், ரித்விகா, ஹரிஷா, யாஷிகா ஆனந்த், ஆர்.எஸ்.கார்த்திக், ஷாரா, அப்தூல், கிரேன் மனோகர், அகஸ்டியன், சந்தோஷ், ஜெயசீலன், நந்தா, அஜித், சாருகேஷ் மற்றும் பலர்

இயக்கம்: ரமேஷ் வெங்கட்

இசை: கௌசிக் கிரிஷ்

ஒளிப்பதிவு: ஜோசுவா ஜே பெரிஸ்

படத்தொகுப்பு: கணேஷ் சிவா

தயாரிப்பு: ‘அக்‌ஷயா பிக்சர்ஸ்’ ராஜன்

பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார்

பார்வையாளர்களை பேய்ப்படங்கள் கொஞ்சம் பயமுறுத்துவதோடு, நிறைய சிரிக்க வைப்பது தான் இப்போதைய ட்ரெண்டு. அந்த வகையில், சிரிக்க வைப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு, பிக்பாஸ் தமிழின் விளம்பர வாசகத்தைத் தலைப்பாகக் கொண்டு உருவாகி, வெளியாகியிருப்பது தான் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ திரைப்படம்.

0a1a

திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் நாயகன் சத்யாவும் (சத்யமூர்த்தி), அவரது நண்பர்களான கோபி (கோபி அரவிந்த்), சுதாகர் (சுதாகர் ஜெயராமன்), விஜய் (விஜயகுமார் ராஜேந்திரன்) ஆகியோரும் திரைப்படம் பார்ப்பதற்காக ‘ஆலயம்’ என்ற பழைய திரையரங்கத்துக்குப் போகிறார்கள். அதே திரையரங்கத்திற்கு இஷாவும் (யாஷிகா ஆனந்த்) அவரது தோழி ஹரிஜாவும் (ஹரிஜா) வருகிறார்கள். அவர்களைப் போல வேறு சிலரும் படம் பார்க்க அந்த திரையரங்கத்துக்குள் வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் பார்க்க விரும்பிய திரைப்படத்துக்கு மாறாக, அங்கே வேறொரு திரைப்படம் திரையில் திரையிடப்படுகிறது. அது பயங்கர பேய்ப்படம். அந்த படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே திரையரங்கத்துக்குள் அச்சுறுத்தும் சில அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனால், திரையரங்கத்தில் இருப்பவர்கள் அலறியடித்து எழுந்து ஓடி வெளியேற முயல்கிறார்கள். எத்தனை முறை எப்படியெல்லாம் முயன்றபோதிலும் அவர்கள் திரையரங்கத்துக்குள் தான் சிக்கிக் கிடக்கிறார்களே தவிர, வெளியேற வழியே இல்லை.

அவர்கள் ஏன் வெளியேற இயலாமல் திரையரங்கத்துக்குள் சிக்கிக் கிடக்கிறார்கள்? இறுதியில் அங்கிருந்து எப்படித் தான் தப்பித்தார்கள்?அந்த திரையரங்கத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களின் பின்னணி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது  ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ திரைப்படத்தின் மீதிக்கதை.

சத்யாவாக வரும் சத்யமூர்த்தி, இஷாவாக வரும் யாஷிகா ஆனந்த், கீதாவாக வரும் ரித்விகா, எம்.தர்மராஜாக வரும் முனிஷ்காந்த், உத்தமராஜாவாக வரும் கிரேன் மனோகர், கிரிஸ்டோபர் கன்னையனாக வரும் ஜார்ஜ் மரியான் போன்ற திரை பிரபலங்களும், கோபி, சுதாகர், விஜய், ஷாரா, அப்துல், சந்தோஷ், அகஸ்டின், ஜெயசீலன் போன்ற யூடியூப் பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களாக வந்து, தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

கோபி – சுதாகர் காமெடியைக் காட்டிலும், முனிஷ்காந்த், ஜாங்கிரி மதுமிதா, விஜே ஆஷிக், கிரேன் மனோகர், ஷாரா, அப்துல் ஆகியோரின் காமெடி பார்வையாளர்களை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைக்கிறது.

முழுக்க முழுக்க பழைய திரையரங்கம் ஒன்றுக்குள் நடக்கும் கதைக்கு கொஞ்சம் திகிலும் நிறைய நகைச்சுவையும் கலந்து திரைக்கதையாக்கி, விறுவிறுப்பு குறையாமல் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் ரமேஷ் வெங்கட். பேய்ப்படம் என்றாலே முதலில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கும்; பிறகு அதை விளக்குவதற்கான கதை ஒன்று ஃபிளாஷ்பேக்கில் வரும் என்ற வழக்கமான பாணியில் இருந்தாலும், இதை சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர்.

ஜோஸ்வா ஜே பெரிஸின் ஒளிப்பதிவும், கெளசிக் கிரிஷின் இசையும் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளன.

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ – காமெடி பிரியர்களுக்குப் பிடிக்கும்!