O2 – விமர்சனம்
நடிப்பு: நயன்தாரா, ரித்விக், பரத் நீலகண்டன், முருகதாஸ், ஆர்.என்.ஆர்.மனோகர் மற்றும் பலர்
இயக்கம்: ஜி.எஸ்.விக்னேஷ்
தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
இசை: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு: தமிழ் ஏ.அழகன்
ஓ.டி.டி.: டிஸ்னி ஹாட்ஸ்டார்
மக்கள் தொடர்பு: சதீஷ்
கணவனை இழந்த இளம் விதவை நயன்தாரா. அவருடைய ஒரே மகன் யூடியூப் புகழ் ரித்விக். அவருக்கு கடுமையான நுரையீரல் சிக்கல் இருப்பதால் அவரால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை. எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் தான் சுவாசிக்க முடியும்.
மகனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அவரை அழைத்துக்கொண்டு கோயம்புத்தூரில் இருந்து கொச்சிக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்கிறார் நயன்தாரா. வழியில் பேய்மழை காரணமாக மலைப்பாதையில் பயங்கர நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கும் பேருந்து முழுமையாக மண்ணுக்குள் புதைந்து சேற்றுக்குள் மூழ்கிவிடுகிறது.
புதைந்துபோன பேருந்துக்குள் இருப்பவர்கள் சுவாசிக்க போதுமான ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கிறார்கள். பதறுகிறார்கள். நயன்தாராவின் மகன் ரித்விக் சுவாசிக்க பயன்படுத்தும் ஆக்சிஜன் சிலிண்டரை கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.
தன் மகனின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சக பயணிகளின் இந்த முயற்சியை நயன்தாரா தடுத்து நிறுத்தினாரா? புதைந்துபோன பேருந்துப் பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனரா? நயன்தாராவின் மகனுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது படத்தின் மீதிக்கதை.
பாசமான தாயாக, மகனின் உடல்கோளாறு அறிந்து பரிதவிப்பவராக, அவருக்கு சிகிச்சை அளிப்பதில் தீவிரம் காட்டுபவராக, புதைந்துபோன பேருந்துக்குள் மகனின் ஆக்சிஜன் சிலிண்டரை பாதுகாக்கப் போராடுபவராக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் நயன்தாரா. ’அறம்’ படத்துக்கு இணையாக அவருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் படமாக இது அமைந்துள்ளது.
நயன்தாராவின் சுவாசக்கோளாறு உள்ள மகனாக யூடியூப் புகழ் ரித்விக் நடித்திருக்கிறார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.
பேருந்து ஓட்டுநராக வரும் முருகதாஸ், பயணிகளாக வரும் அரசியல்வாதி ஆர்.என்.ஆர்.மனோகரன், காவல்துறை அதிகாரி பரத் நீலகண்டன், காதலியுடன் ஓடிப்போக திட்டமிட்டு பயணிக்கும் ஒரு காதலன். அவரது காதலி, காதலியின் அப்பா, சிறையில் இருந்து விடுதலையாகி அம்மாவைப் பார்க்கப் போகும் ஒருவர் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை கச்சிதமாக வழங்கியிருக்கிறார்கள்.
மண்ணுக்குள் புதைந்த பயணிகள் ஆக்சிஜனுக்காக போராடுவது. அவர்களிடமிருந்து தன் மகனின் ஆக்சிஜன் சிலிண்டரை காப்பாற்ற ஒரு பாசக்கார தாய் போராடுவது என்பதை அடிப்படையாக வைத்து புதுமுக இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ் பரபரப்பான திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார். பாராட்டுகள். புவி வெப்பமயமாவதால் விரைவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும்போது உலக மாந்தர்கள் இப்படித்தான் பரிதவிப்பார்களோ என்ற எண்ணம் இப்படம் பார்க்கும்போது எழுவதை தவிர்க்க முடியவில்லை.
புதைந்துபோன பேருந்துக்குள் நடக்கும் காட்சிகள் அதிகமாக காட்டப்படுவதால் சுவாரஸ்யம் சற்று குறைகிறது. மாறாக, புதையுண்டவர்களை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் போராடுவதை இன்னும் கொஞ்சம் உயிரோட்டத்துடன் காட்டியிருந்தால் சுவாரஸ்யம் அதிகமாக இருந்திருக்கும்.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், தமிழ் ஏ.அழகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
O2- பார்க்கலாம்! ரசிக்கலாம்!!