”2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி இல்லை; நாதக தனித்தே போட்டி”: சீமான் அறிவிப்பு

2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்காது. வழக்கம்போல் தனித்தே போட்டியிடும். இதை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுவரை ஒவ்வொரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு வந்த நாம் தமிழர் கட்சி, 2026-ல் நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட இருப்பதாக, கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வந்தது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதெல்லாம் “தம்பி (விஜய்) தான் இது பற்றி முடிவு செய்ய வேண்டும்” என்று மழுப்பலாக பதில் சொல்லி வந்தார்.

உண்மையில், விஜய் கட்சியுடன் கூட்டு சேருவது குறித்து சீமான் தான் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாரே தவிர, விஜய் தரப்பு இதில் அக்கறை காட்டவில்லை. இந்த அக்கறையின்மைக்கு, சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகளின் கேவலமான பொதுவெளிப் பேச்சு, சீமான் மட்டரகமாக உரையாடும் வீடியோக்கள் கசிவு, இதனால் அவரது கட்சிக்கு சரிந்து வரும் ஆதரவு போன்றவை காரணமாக இருக்கலாம்.

நாதகவுடன் “தம்பி” கூட்டு சேராது என்பதை சீமான் இப்போது புரிந்துகொண்டு விட்டார். அதனால் தான் நேற்று (செப்டம்பர் 1) தூத்துக்குடி வந்திருந்த சீமானிடம்,”2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா?” என்ற செய்தியாளர்கள் கேட்டதற்கு, “2026-ல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். தற்போது 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளேன். மற்ற தொகுதி வேட்பாளர்களையும் தேர்வு செய்து வருகிறேன்” என்று பதிலளித்தார் சீமான்.