நாட் ரீச்சபிள் – விமர்சனம்
நடிப்பு: விஷ்வா, சுபா, சாய் தன்யா, ஹரிதாஸ்ரீ, காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லா போஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்தி, இலக்கியா, சாய் ரோகிணி மற்றும் பலர்
இயக்கம்: சந்துரு முருகானந்தம்
ஒளிப்பதிவு: சுகுமாரன் சுந்தர்
இசை: சரண்குமார்
மக்கள் தொடர்பு: பரணி & திரு
க்ரைம் த்ரில்லர் சஸ்பென்ஸ் ஜானரில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘நாட் ரீச்சபிள்’.
இரண்டு இளம்பெண்கள் ஒரே பாணியில் அடுத்தடுத்து படுகொலை செய்யப்படுகிறார்கள். மூன்றாவதாக ஒரு பெண் காணாமல் போகிறார். இந்த கொலைகளைச் செய்தது யார்? காணாமல் போன பெண் என்ன ஆனார்? என்பதை காவல் துறை அதிகாரிகள் புலனாய்வு செய்து கண்டுபிடிப்பதே ‘ நாட் ரீச்சபிள்’ படத்தின் கதைச்சுருக்கம்.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளாக வரும் விஷ்வாவும், சுபாவும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க பரபரவென இயங்குவதன் மூலம் படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்கள். இவர்கள் அடிக்கடி தங்களுக்குள் மோதிக்கொள்வது சுவாரஸ்யம்.
மனநலம் பாதிக்கப்பட்டு, அடிக்கடி தற்கொலைக்கு முயலும் கதாபாத்திரத்தில் வரும் சாய் தன்யா கவனம் ஈர்க்கிறார். அவர் தொடர்பான சஸ்பென்ஸை இறுதி வரை காப்பாற்றியிருப்பது சிறப்பு. திருப்பங்களை ஏற்படுத்தும் வேடத்தில் நேர்த்தியாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹரிதாஸ்ரீ, இலக்கியா, சாய்ரோகிணி, காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லாபோஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்தி உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை பொருத்தமாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு படத்தொகுப்பும் செய்திருக்கிறார் சந்துரு முருகானந்தம். கொலை வழக்குகளை காவல்துறை அணுகும் விதம், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ஆகியனவற்றை நிறைவாகச் செய்திருக்கிறார். முதல் படம் என்கிற எண்ணம் வராத அளவுக்கு சிறப்பாக இயக்கியிருக்கிறார்.
சுகுமாரன் சுந்தரின் ஒளிப்பதிவும், சரண்குமாரின் பின்னணி இசையும் சம்பவங்களை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல உறுதுணையாக இருக்கின்றன.
’நாட் ரீச்சபிள்’ – சஸ்பென்ஸ் பிரியர்களுக்குப் பிடிக்கும்.