தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: மீட்பு பணிகள் மும்முரம்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 15) தொடங்கிய முதல் நாளிலேயே தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, தமிழகத்தின் 22 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகன மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
இந்திய பகுதிகளில் 15-ம் தேதி (இன்று) தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தீவிரமடைந்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (16-ம் தேதி) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகம், புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும், நாளை மறுநாளும் (அக்டோபர் 16, 17) வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 18 முதல் 21-ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (அக்டோபர் 16) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகன மழையும் பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு:
கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளிலும் மழை நீர் தேங்கியது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றதால் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிக்கரணை, கண்ணகி நகர், துரைப்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர், பெருங்குடி, பெரும்பாக்கம், முடிச்சூர் வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் தவிக்கின்றனர். ஒருநாள் மழைக்கே தாக்குப் பிடிக்க முடியாமல் தலைநகர் சென்னை மிதக்க தொடங்கி உள்ளது.
மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் தனித் தனியே பார்வையிட்டு ஆய்வு செய்து, மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். இதனால் மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.