நூடுல்ஸ் – விமர்சனம்
நடிப்பு: ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், மதன் தட்சிணாமூர்த்தி, ஆழியா, திருநாவுக்கரசு, ஹரிதா, மஹினா, வசந்த் மாரிமுத்து, ஷோபன் மில்லர் மற்றும் பலர்
இயக்கம்: மதன் தட்சிணாமூர்த்தி
ஒளிப்பதிவு: டி.வினோத்ராஜ்
படத்தொகுப்பு: சரத்குமார்
இசை: ராபர்ட் சற்குணம்
தயாரிப்பு: ‘ரோலிங் சவுண்டு பிக்சர்ஸ்’ பிரக்ணா அருண் பிரகாஷ்
வெளியீடு: ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ சுரேஷ் காமாட்சி
பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்
நூடுல்ஸ் மிகக் குறைந்த நேரத்தில் சமைக்கக் கூடிய உணவு; மட்டும் அல்ல, அதன் ஒரு நுனியை வைத்துக்கொண்டு மறு நுனியைத் தேடி கண்டுபிடிப்பது முடியாத காரியம். இழுக்க, இழுக்க வந்து கொண்டேதான் இருக்கும். அதுபோல் பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும் கதையமைப்பைப் பெற்றிருப்பதால், இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய இந்த படத்துக்கு ‘நூடுல்ஸ்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
நாயகன் சரவணன் (ஹரிஷ் உத்தமன்) தனது காதலி சக்தியை (ஷீலா ராஜ்குமாரை) அவரது பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டு, சென்னையில் பத்து வருடங்களாக நடுத்தர வர்க்கத்தினருக்கான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ்த்தளத்தில் (கிரவுண்டு ஃபுளோரில்) குடும்பம் நடத்தி வருகிறார். அவர்களுக்கு பிரியா (ஆழியா) என்ற எட்டு வயது மகள் இருக்கிறார்.
ஒரு சனிக்கிழமை இரவு. சரவணன் குடும்பத்தினரோடு, அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் வசிக்கும் சக குடியிருப்புவாசிகளும் ஒன்றாக சேர்ந்து, மொட்டை மாடியில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி போன்ற ஒன்றை மகிழ்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி மிகுதியில் இவர்கள் போடும் கூச்சல், பக்கத்து வீட்டுக்காரருக்கு எரிச்சலை ஏற்படுத்த, அவர் போலீஸுக்கு போன் பண்ணி புகார் செய்கிறார்.
ரோந்துப் பணியில் இருக்கும் அந்தப் பகுதி இன்ஸ்பெக்டர் இளங்கோ (மதன் தட்சிணாமூர்த்தி), ஹெட் கான்ஸ்டபிள் (ஷோபன் மில்லர்) சகிதம் ஜீப்பில் அங்கு வருகிறார். அவர் ஹெட் கான்ஸ்பிளிடம், அடுக்குமாடி குடியிருப்பின் மேலே போய் அவர்களை சத்தம் போடாமல் அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு வருமாறு கூறுகிறார். மேலே வரும் ஹெட் கான்ஸ்டபிள் கூறும் அறிவுரையை ஜாலி மூடில் இருக்கும் குடித்தனக்காரர்கள் செவி மடுப்பதாக இல்லை. இதனால் இன்ஸ்பெக்டர் இளங்கோவே மேலே வந்து பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறி தள்ளுமுள்ளு வரை செல்கிறது. “புகாரை எடுத்திட்டு வாங்க. நாங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்றோம்” என்று சரவணன் சொல்ல, மற்றவர்கள் சிரிக்க, அவமானத்துடன் இன்ஸ்பெக்டரும், ஹெட் கான்ஸ்டபிளும் கிளம்பிப் போகிறார்கள்..
அன்றிரவு. சரவணனின் மனைவி சக்தியின் பெற்றோர், கடந்த பத்து ஆண்டுகளில் முதல்முறையாக அவர்களைப் பார்க்க சென்னைக்கு மறுநாள் வர இருப்பதாக நண்பன் மூலம் தெரிந்து சரவணன் பரபரப்படைகிறார். சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று இதை மனைவிக்குத் தெரிவிக்காமல், மாமனார் – மாமியாரை வரவேற்று உபசரிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்கிறார் சரவணன்.
இதற்கிடையே, அதே இரவில் பக்கத்து வீட்டு வயதான தம்பதியுடன் தகராறு செய்யும் ஒரு ஆட்டோக்காரரை சரவணன் சமாதானப்படுத்தும்போது தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இது தொடர்பாக சரவணன் மீது போலீஸில் புகார் அளிக்கிறார் ஆட்டோக்காரர்.
மறுநாள் காலையில் சரவணன் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும்போது, தனது வீட்டின் தரையில் அடையாளம் தெரியாத ஒரு நபர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். மகள் பிரியாவிடமிருந்து செல்போனை திருடன் பறிக்க முயன்றதாகவும், அவனது சட்டையை தான் பிடித்திழுக்க, அவன் வீட்டுக்குள் விழுந்து இறந்து விட்டதாகவும் சக்தி அழுதுகொண்டே கூறுகிறார்.
தன் மனைவி பிடித்திழுத்ததால் தான் திருடன் விழுந்து இறந்துவிட்டான் என்று பதறும் சரவணன், திருடனின் உடலையும், அவன் உயிரிழந்த தகவலையும் மற்றவர்களுக்கு தெரியாமல் எப்படி மறைப்பது என்று யோசிக்கிறார்.
தன் வீட்டருகில் ஒரு வக்கீல் (வசந்த் மாரிமுத்து) வசிப்பதை அறிந்து, அவரை ரகசியமாக தன் வீட்டுக்கு அழைத்து வந்து விஷயத்தைச் சொல்லி யோசனை கேட்கிறார் சரவணன். இதை எதிர்பார்க்காத வக்கீல் அச்சத்தில் வெலவெலத்து நடுங்குகிறார்.
இந்த நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவும், ஹெட் கான்ஸ்டபிளும் சரவணன் மீது ஆட்டோக்காரர் கொடுத்த புகார் மனுவோடு அங்கு வர, சரவணனுக்கு திக்கென்றாகிறது.
வீட்டிற்குள்ளே பிணம், விரைவில் வர இருக்கும் மாமனார் – மாமியார், விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கும் போலீசார் என எல்லாமாக ஒன்று சேர்ந்து சரவணன் – சக்தி தம்பதியரை குலை நடுங்கச் செய்கிறது.
அடுத்து என்ன நடந்தது? போலீஸ் என்ன செய்தது? திருடன் உடல் என்ன ஆனது? சரவணன் – சக்தி தம்பதியர் சிக்கினார்களா? தப்பித்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை சொல்லுகிறது ‘நூடுல்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
பல படங்களில் வில்லனாக வந்த ஹரிஷ் உத்தமனுக்கு இதில் நாயகன் சரவணன் வேடம். மனைவியை பிரச்சினையில் இருந்து காப்பாற்ற துடிக்கும் அன்பான கணவன், பாசம் மிக்க அப்பா என பல பரிமாணங்களில் பண்பட்ட நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார்.
குடும்ப தலைவி சக்தி வேடத்துக்கு ஷீலா ராஜ்குமார் கச்சிதமாக இருக்கிறார். ஆரம்பத்தில் காவல் அதிகாரியிடம் சட்டம் பேசுவது, பிறகு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க ஓடி ஒளிவது என தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவாக வரும் மதன் தட்சிணாமூர்த்தி, கண்களை உருட்டி எதிரில் இருப்பவருக்கு உதறல் வரவழைத்து விடுகிறார்.
வக்கீலாக வரும் வசந்த் மாரிமுத்து இவ்வளவு நாள் எங்கிருந்தார் என்று கேட்கும் அளவுக்கு தன்னுடைய கேரக்டரை பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
சக குடியிருப்புவாசிகளாக வரும் திருநாவுக்கரசு, ஜெயந்தி, மஹினா, ஹெட் கான்ஸ்டபிளாக வரும் ஷோபன் மில்லர், குழந்தை நட்சத்திரம் ஆழியா, சிறுவர்கள் என அனைவரும் தங்களது பங்கை சிறப்பாக செய்து படத்தை ரசிக்க வைக்கிறார்கள்.
ராபர்ட் சற்குணம் அற்புதமான பின்னணி இசை கொடுத்திருக்கிறார்.
சிறிய வீடு, நான்கைந்து இருக்கைகள், ஒரு டைனிங் டேபிள் இவைகளைக் கொண்டு முழு கதையையும் நகர்த்தும் சவாலான பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விநோத்ராஜ்.
இரண்டு நிமிடங்களில் ஒரு மனிதனின் வாழ்க்கை மாறவும் முடியும்; பிரச்சனைக்கான தீர்வும் கிடைக்கும் என்ற எளிய கருத்தை மையமாகக் கொண்டு சிறந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி.
’நூடுல்ஸ்’ – கண்டிப்பாக அனைவரும் ருசித்து மகிழலாம்!