‘புகையில்லா போகி பண்டிகை’ கொண்டாடுக: மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் உறுப்பினர் டி.சேகர் விடுத்துள்ள வேண்டுகோள்:

பொங்கலுக்குமுன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடி வருகின்றனர். வீடுகளில் சேகரிக்கப்பட்டுள்ள பழைய பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்துவதால் காற்றில் மாசு ஏற்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையை மாற்ற ரசாயனம் அல்லாத, காற்றில் மாசு படாத அளவுக்கு பண்டிகை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

போகி பண்டிகையன்று தீயிட்டு  எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை காரணமாக விமானங்கள் தங்களது பயணங்களை செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றன. சென்னையில் மட்டும் 16 விமானங்கள் காலதாமதம் ஏற்பட்டு சென்று கொண்டுள்ளது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், பழைய பிளாஸ்டிக் பொருள், டயர், டியூப் போன்றவைகளை  எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வாகன ஓட்டிகளும் புகையினால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.