“மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டாம்!” – அரவிந்த் கேஜ்ரிவால்
உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆளும் சமாஜ்வாதி, எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடந்த முறைகேடு காரணமாகவே பாஜக வெற்றி பெற்றது என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும், டெல்லியில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழைய முறைப்படி வாக்குச் சீட்டு பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதும்படி மாநில தலைமை செயலாளர் எம்.எம்.குட்டிக்கும் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜெய் மாக்கானும், உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் கேஜ்ரிவாலிடம் வலியுறுத்தி இருந்தார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலிடம் தோல்வி அடைந்த ஆம் ஆத்மி வேட்பாளர் ஜர்னெயில் சிங்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர், ”தோல்வியை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அதே சமயம் பஞ்சாப் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஆம் ஆத்மி தொண்டர்கள் அதிகம் நிறைந்த தொகுதிகளில், அந்த எண்ணிக்கையை விட குறைந்த வாக்குகளே எங்களுக்கு பதிவாகி இருக்கின்றன” என்றார்.