“பிர்சா முண்டா பற்றி பா.இரஞ்சித் படம் எடுப்பது மகிழ்ச்சி: நானும் எடுப்பேன்!” – கோபி நயினார்

‘அறம்’ வெற்றிப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கோபி நயினார், தற்போது `அறம் 2’ பட வேலைகளில் மும்முரமாக இருப்பதோடு, ஆங்கிலேயர் காலத்தில் அவர்களை எதிர்த்த பழங்குடி இனத்தின் முதல் போராளியான பிர்சா முண்டா பற்றிய படத்தை எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளிலும் முனைப்புடன் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் இதே பிர்சா முண்டா பற்றி இந்திப்படம் எடுப்பதற்காக ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, வடநாட்டு பழங்குடியினர் கிராமங்களுக்கு நேரில் சென்று இப்படத்துக்குத் தேவையான தகவல்களைத் திரட்டி வருவதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
இதனையடுத்து, பிர்சா முண்டா பற்றிய படக்கதை உரிமை தொடர்பாக பா.இரஞ்சித்துக்கும், கோபி நயினாருக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கொளுத்திப் போட்டார்கள். ஆனால், அப்படியொரு மோதல் ஏற்பட வாய்ப்பு இல்லை என கோபி நயினார் தெளிவாக விளக்கியுள்ளார்.
“நீங்கள் இயக்கவிருக்கும் போராளி பிர்சா முண்டாவை பற்றித் தான் இயக்குனர் பா.இரஞ்சித்தும் படம் எடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்?” என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள கோபி நயினார்,“இது விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரோட வாழ்க்கை. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலை மீது அக்கறை இருக்கிற யாரும் இதைப் படமாக எடுக்கலாம். எல்லோருக்கும் சம உரிமை இருக்கிறது. ஹிட்லர், யேசுநாதர் பற்றி அவ்வளவு படங்கள் வந்திருக்கின்றன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு சுவாரஸ்யத்தைத் தந்தன.
பிர்சா முண்டா பற்றி நாங்க இருவர் மட்டுமல்ல, இன்னும் பலரும் படம் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. 25 வருடங்கள் வாழ்ந்த ஒரு வாழ்க்கையை, அவ்வளவு பெரிய நிலப்பரப்பில் நடந்த மிகப்பெரிய ஒடுக்குமுறையை வெறும் இரண்டரை மணிநேர சினிமாவில் காட்டிவிட முடியாது.
மேலும், படத்தை நான் எங்கு தொடங்குகிறேன்னு இரஞ்சித்துக்குத் தெரியாது, அவர் எங்கிருந்து தொடங்குகிறார்னு எனக்குத் தெரியாது. இதனால் எனக்குத் துளியளவும் வருத்தம் கிடையாது. ஒரே நேரத்தில் பகத்சிங் பற்றி இரண்டு திரைப்படங்கள் இந்தியில் வருகிறது. நானே நிறைய பேர்கிட்ட சொல்லியிருக்கேன். பிர்சா முண்டாவோட வாழ்க்கையை நான் ஏழு பகுதியாகப் பிரிச்சேன். ஒவ்வொரு பகுதியையும் வெச்சு மூன்று, நான்கு படங்கள் பண்ணலாம். இரஞ்சித் இந்தப் படத்தை எடுக்கவிருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம்தான். மேலும், நான் பிர்சா முண்டாவோட வாழ்க்கையைப் படமாக எடுக்கப்போவதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று கூறியுள்ளார் கோபி நயினார்.