நித்தம் ஒரு வானம் – விமர்சனம்

நடிப்பு: அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா, ஜீவா, காளிவெங்கட், அபிராமி மற்றும் பலர்

இயக்கம்: ரா.கார்த்திக்

பாடலிசை: கோபி சுந்தர்

பின்னணி இசை: தரண் குமார்

ஒளிப்பதிவு: விது அய்யன்னா

படத்தொகுப்பு: ஆண்டனி

தயாரிப்பு: ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மெண்ட் & வயாகாம் 18 ஸ்டூடியோஸ்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

0a1o

எப்போதும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் நாயக கதாபாத்திரங்களுக்குள் கச்சிதமாகப் பொருந்தி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர் என பெயர் பெற்ற அசோக் செல்வன் நடிப்பில், அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக்கின் எழுத்து மற்றும் இயக்கத்தில் கவித்துவ நயத்துடனும், இலக்கியத் தரத்துடனும் உருவாகி வெளிவந்திருக்கிறது ‘நித்தம் ஒரு வானம்’.

நாயகன் அர்ஜுன் (அசோக் செல்வன்) கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். எல்லா விஷயங்களிலும் பெர்ஃபெக்‌ஷன் பார்ப்பது அவரது இயல்பு. அவரது இன்னொரு இயல்பு என்னவென்றால், ஒரு கதை படித்தால், அந்த கதையின் ஹீரோ கதாபாத்திரத்தில் தன்னைப் பொருத்தி கற்பனை செய்துகொள்வார்.

இப்படிப்பட்ட அர்ஜுனுக்கு பெற்றோர் ஒரு பெண் பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் அவர் நன்றாக பேசிப் பழகுகிறார். திருமணத்துக்கு முந்தைய நாள் அந்த பெண் தனது முதல் காதல் பற்றி அர்ஜுனிடம் சொல்லுகிறார். அவருக்கு அர்ஜுன் சில அறிவுரைகள் சொல்லுகிறார். இதை கேட்ட அந்த பெண் தன் காதலனுடன் சென்றுவிடுகிறார். திருமணம் நின்றுபோகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் அர்ஜுன், மனநல மருத்துவர் கிருஷ்ணவேணியை (அபிராமி) ஆலோசனையை நாடுகிறார். அர்ஜுனின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அதை மாற்ற நினைக்கும் மருத்துவர், தான் எழுதிய இரண்டு கதைகளைக் கொடுத்து படிக்கச் சொல்லுகிறார். ஒரு கதை வீரா – மீனாட்சி பற்றியது. இன்னொன்று பிரபா – மதி பற்றியது.

அந்த கதைகளைப் படிக்கும் அர்ஜுன், தன்னையே ஹீரோவாக நினைத்துக் கொள்கிறார். இரண்டு கதைகளும் விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் கிளைமாக்ஸ் நெருங்கும்போது, அக்கதைகளின் கடைசிப் பக்கங்கள் இல்லாமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறார். பின்னர்தான் அவை கற்பனைக் கதைகள் அல்ல, உண்மைக் கதைகள் என்பது அர்ஜுனுக்குத் தெரிய வருகிறது.

இந்த உண்மைக் கதைகளின் முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஆவல் கொள்கிறார் அர்ஜுன். அவற்றை தெரிந்துகொள்ள வேண்டுமானால், அந்த உண்மைக் கதாபாத்திரங்கள் இப்போது வசிக்கும் கொல்கத்தாவுக்கும், சண்டிகரை அடுத்துள்ள பனிப்பிரதேசத்துக்கும் போய் நீயே தெரிந்துகொள் என்கிறார் மருத்துவர் கிருஷ்ணவேணி.

அந்த உண்மைக் கதாபாத்திரங்களைத் தேடிச் செல்கிறார் அர்ஜுன். இந்த பயணத்தில் அவருடன் சுபத்ராவும் (ரிது வர்மா) இணைகிறார். கதையில் படித்த கதாபாத்திரங்களை அர்ஜுன் நிஜத்தில் சந்தித்தாரா? அவர்களுடைய கதைகளின் கிளைமாக்ஸ் என்ன? அவை இவரை எப்படி மாற்றியது? என்பது ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் மீதிக்கதை.

கார்ப்பரேட் நிறுவன அதிகாரி, ஐ.பி.எஸ் போலீஸ் அதிகாரி, ரவுடித்தனம் செய்யும் கல்லூரி மாணவன் என மூன்று விதமான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் வரும் அசோக் செல்வன், வெவ்வேறு விதமான நடிப்பு மூலம் அசத்தியுள்ளார். படத்துக்குப் படம் அவரது நடிப்பு மெருகேறிவருகிறது என்பதற்கான சான்றாக இப்படம் அவருக்கு பெருமை சேர்க்கிறது.

நாயகனின் பயணத்தோழி சுபத்ராவாக வரும் ரிது வர்மாவின் அழகு, முகபாவம், உடல்மொழி நம்மை மெய்மறந்து ரசிக்கச் செய்கிறது. அதுபோல் மீனாட்சியாக வரும் ஷிவாத்மிகா, மதியாக வரும் அபர்ணா பாலமுரளி, சென்னியப்பனாக வரும் அழகம்பெருமாள், சூசையாக வரும் காளிவெங்கட் என அனைவருமே நம் மனதை நிறைக்கிறார்கள்.

குத்துப்பாட்டு, வெட்டுக்குத்து, இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் என எந்த கேடுகெட்ட வியாபார சமரசங்களும் இல்லாமல்,  எடுத்துக்கொண்ட வித்தியாசமான கதைக்கும் கதைக்களத்துக்கும் ஏற்ற காட்சிகளை அமைத்து படத்தை நேர்த்தியாக, சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக். ஒரு ஜோடிக்கு பிரபா(கரன்) – மதி(வதனி) என பெயர் சூட்டி, தனது அரசியல் சார்பை துணிச்சலாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அவருக்கு நம் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

கோபி சுந்தரின் பாடலிசை காதலுணர்வைத் தூண்டி மெய் மறக்கச் செய்கிறது. தருண்குமாரின் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. விது அய்யனாரின் கேமரா எழில்கொஞ்சும் இயற்கையை மேலும் அழகாகக் காட்டியுள்ளது.

 நித்தம் ஒரு வானம்’ – குடும்பத்துடன் கண்டு களிக்கத் தக்க அழகான, அருமையான காதல் கவிதை.