நிசப்தம் – விமர்சனம்
பிரஸ் ஷோவில் மசாலா படங்களைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப்போய், மனசுக்குள் அல்லது முணுமுணுப்பாய் உதடுகளில் கமெண்ட்டியபடி படம் பார்க்கும் பழக்கம் கொண்ட என்னைப் போன்ற செய்தியாளர்கள், ‘நிசப்தம்’ படம் ஆரம்பித்த சற்றுநேரத்தில் அதிர்ச்சியில் சப்தம் ஒடுங்கி உறைந்து போனோம். படத்தில் ‘பூமி’ என்ற 8 வயது சிறுமியாக நடித்துவிட்டு, எங்களோடு சேர்ந்து படம் பார்க்க வந்திருந்த பேபி சாதன்யாவை, இண்டர்வெலில் பார்த்தபோது, ஓடிப்போய் அவளை கட்டிப்பிடித்து கதறி அழ வேண்டும் போல தவித்தோம். பிரஸ் ஷோவில் எப்போதாவது அபூர்வமாக நல்ல படம் பார்க்க நேர்ந்தால் எங்களை அறியாமல் கரவொலி எழுப்பும் வழக்கப்படி, இந்த படம் முடிந்தபோதும் ஏகமாய் கரவொலி எழுப்பினோம். உடனே மேடை ஏற்றப்பட்ட இப்படத்தின் நாயகன் (சிறுமி பூமியின் அப்பாவாக நடித்த) அஜய், அவர் நடித்த கதாபாத்திரத்திலிருந்து, அக்கதாபாத்திரத்தின் வலியிலிருந்து இன்னும் வெளியேறாதவராய், குலுங்கிக் குலுங்கி அழுதபடி பேச்சற்று நின்றார். ‘நிசப்தம்’ படம் பார்த்தபோது நான் அனுபவித்த, அவதானித்த மன்மிளகல்கள் இவை.
சினிமா என்ற உயர்ந்த அறிவியல் சாதனம், பொழுதுபோக்கு என்ற பெயரில் வெறும் கூத்தடிப்பு சாதனமாய், காதல், கவர்ச்சி என்ற பெயரில் ரசிகர்களின் தொடை சொறிந்து பணம் அள்ளும் விபசார ஊடகமாய் மாற்றப்பட்டுவிட்ட இன்றைய சூழலில், சமூக பொறுப்புணர்வுடன், சமூக சிந்தனையை ஒரு அங்குலமாவது மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறையுடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் அத்தி பூத்தாற்போல் எப்போதாவது வருவது உண்டு. அப்படிப்பட்ட ஓர் அத்திப்பூ இந்த ‘நிசப்தம்’.
தனக்கு என்ன நேர்கிறது என்பதை கூட புரிந்துகொள்ள இயலாத சின்னஞ்சிறு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படும் கொடுமை பற்றிய செய்திகளை நாம் அவ்வப்போது தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் பார்த்துவிட்டு கடந்து சென்றிருப்போம். அப்படி கடந்து செல்ல விடாமல், நம்மை பிடித்து நிறுத்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் வ்லியையும், மனவலியையும் துல்லியமாக நமக்குள் கடத்துகிறது ‘நிசப்தம்’.
அஜய் – அபிநயா தம்பதியரின் 8 வயது மகள் பேபி சாதன்யா (பூமி). மூன்றாம் வகுப்பு படிக்கும் அவள் பள்ளிக்குச் செல்லும்போது, குடிகாரன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக சிதைக்கப்படுகிறாள். இக்கொடூர சம்பவத்தால் உடலும், மனமும் கடுமையாக பாதிக்கப்படும் சிறுமியை, தேற்றி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர அவளது பெற்றோரும், மனநல மருத்துவரும் அரும்பாடு படுகிறார்கள். இந்நிலையில் நீதிமன்றமும் அச்சிறுமியை படுத்தி எடுக்கிறது. இவற்றிலிருந்து சிறுமியும் அவளது பெற்றோர்களும் மீண்டார்களா? குற்றவாளிக்கு தண்டனை கிடைத்ததா? என்பது மீதிக்கதை.
பாலியல் பலாத்கார கொடுமைக்கு மது ஒரு முக்கிய காரணம் என்பதை படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனர் மைக்கேல் அருண், திருமணம் ஆகாத அபிநயா ஒரு பஸ் ஸ்டாப்பில் தனியாக நிற்க, அங்கே வரும் குடிகாரர்களால் தனக்கு பிரச்சனை வந்துவிடுமோ என அஞ்சி, அவர் முன்பின் அறிமுகம் இல்லாத நாயகன் அஜய்யிடம் தன்னை வலிய அறிமுகப்படுத்திக்கொண்டு அங்கிருந்து நழுவுவதாக படத்தை ஆரம்பிக்கிறார். பிறகு அந்த அறிமுகம் காதலாக மாறுவது, திருமணம், குழந்தை பிறப்பு என்று மணிக்கணக்கில் சொல்லி புரிய வைக்க வேண்டிய சம்பவங்களை, மிகச் சில நிமிடங்களில் சொல்லியிருப்பது இயக்குனரின் திரைக்கதை லாவகத்தைக் காட்டுகிறது.
காதல், கணவன் – மனைவி இடையிலான ஊடல் என்று படம் சாதாரணமாக நகர, பேபி சாதன்யாவுக்கு நேரும் அந்த கொடூர சம்பவத்தை அடுத்து, இது சாதாரண படம் அல்ல என்பதை உணர்த்தும் இயக்குனர், அடுத்தடுத்த காட்சிகளின் மூலம் ஒட்டுமொத்த திரையரங்கத்தையே நிசப்தமாக்கி விடுகிறார். அந்த சிறுமியின் வலியும், அவளது பெற்றோரின் வலியும் எப்படி இருக்கும் என்பதை காட்சிகளின் மூலமாக இயக்குனர் விவரிக்கையில், அவர் இந்த ஸ்கிரிப்ட்டுக்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.
பேபி சாதன்யா, இத்தனை சிறு வயதில் எப்படி இத்தனை கனமான கதாபாத்திரம் ஏற்று, இத்தனை சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாள் என்று மலைக்க வைக்கிறாள். பாராட்ட வார்த்தைகள் இல்லை.
சிறுமியின் அப்பாவாக அஜய், அம்மாவாக அபிநயா, போலீஸ் அதிகாரியாக கிஷோர், மனநல பெண் மருத்துவராக ருத்து என அனைவரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்பங்களின் நேர்த்திக்கு இது போன்ற படங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது; என்றபோதிலும், இயக்குனர் தான் சொல்ல வந்ததை மக்களிடம் கொண்டு சேர்க்க இப்படத்தின் தொழில்நுட்பங்கள் மிக நுட்பமாகவே செயல்பட்டிருக்கிறது.
இன்றைய சமூகத்தில் நிகழும் மிக முக்கிய கொடுமை ஒன்றை திரைப்படமாக எடுக்க முன்வந்த இயக்குனர் மைக்கேல் அருணுக்கும், அதை தயாரிக்கத் துணிந்த தயாரிப்பாளர் ஏஞ்சலீன் டாவின்ஸிக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்!
‘நிசப்தம்’ – கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்; மற்றவர்களையும் பார்க்குமாறு அறிவுறுத்த வேண்டிய படம்!
பி.ஜே.ராஜய்யா