நிறம் மாறும் உலகில் – விமர்சனம்

நடிப்பு: பாரதிராஜா, நட்டி நடராஜ், ரியோ ராஜ், சாண்டி, யோகி பாபு, வடிவுக்கரசி, துளசி, ஆதிரா, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவ்யா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைம் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர்
இயக்கம்: பிரிட்டோ ஜேபி
ஒளிப்பதிவு: மல்லிகா அர்ஜுன், மணிகண்டராஜா
படத்தொகுப்பு: தமிழரசன்
இசை: தேவ் பிரகாஷ் ரீகன்
தயாரிப்பு: சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் & ஜிஎஸ் சினிமா இண்டர்நேஷனல்
தயாரிப்பாளர்: எல்.கேத்ரின் ஷோபா & லெனின்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
இது ஒரு ஆந்தாலஜி வகை திரைப்படம். நான்கு கதைகள். இந்த நான்கு கதைகளையும் இணைக்கக்கூடிய ஒரு ஐந்தாவது கதை. இந்த ஐந்து கதைகளிலும் அடிநாதமாய் இருக்கும் அம்மா – பிள்ளை உறவு.
அம்மா விஜியுடன் (விஜி சந்திரசேகர்) சண்டை போட்டுவிட்டு, சூட்கேஸ் சகிதம் வீட்டை விட்டு வெளியேறுகிறார் அபி (லவ்லின் சந்திரசேகர்). தோழியின் வீட்டுக்குச் செல்ல அவர் ரயிலில் பயணிக்கும்போது, டிக்கெட் பரிசோதகர் முத்துக்குமாரை (யோகி பாபு) சந்திக்கிறார். அபியிடம் பேச்சுக் கொடுத்து அவரது சூழ்நிலையையும், மனநிலையையும் புரிந்துகொள்ளும் முத்துக்குமார், உறவின் மேன்மையையும், முக்கியத்துவத்தையும் அவருக்கு உணர்த்தும் வகையில் நான்கு உண்மைக் கதைகளைச் சொல்கிறார். அவற்றின் தொகுப்பே இந்த ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படம்.
மும்பையில் பெரிய தாதாவாகவும், தாய் பாசத்துக்கு ஏங்குபவராகவும் இருக்கிறார் அப்துல் மாலிக் ( நட்டி நடராஜ்). அவருடைய தொழில் எதிரி இன்னொரு தாதாவான லால் பாஜ் (சுரேஷ் மேனன்). இவ்விரு தாதாக்களின் மோதலுக்கிடையே, சாதி ஆணவக் கொலைக்கு பயந்து தப்பி ஓடும் இளம் காதலர்களான கண்ணன் (ரிஷிகாந்த்) – மலர் (காவ்யா அறிவுமணி) சிக்கிக்கொள்கிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது முதல் கதை.

வயதான தம்பதியரான ராயப்பன் (பாரதிராஜா) – குழந்தை (வடிவுக்கரசி), தங்கள் இரண்டு மகன்களால் கைவிடப்படுகின்றனர். ஆயுளின் இறுதி நாட்களை நெருங்கும் அவர்கள், இளமையில் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறார்கள். அவர்களின் கதி என்ன என்பது இரண்டாம் கதை.
தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கலங்குகிறார் அதியன் (ரியோ ராஜ்). அம்மாவைக் காப்பாற்ற கேன்சர் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. ஒரு கொலை செய்தால் பணம் கிடைக்கும் என்று உள்ளூர் தாதா சொல்கிறார். அதை அதியன் செய்தாரா? அம்மா காப்பாற்றப்பட்டாரா? என்பது மூன்றாவது கதை.
ஆதரவற்ற அநாதையான ஆட்டோ டிரைவர் அன்புவுக்கும் (சாண்டி), அவரது ஆட்டோவில் பயணிக்கும் மகிக்கும் (அய்ரா கிருஷ்ணன்) காதல் ஏற்படுகிறது. காதல் கைகூடும் சமயத்தில், தற்செயலாக வந்து சேர்ந்த அன்னக்கிளி (துளசி) என்ற ’அம்மா’வின் பாசம் கிட்டுகிறது. காதலியா, புதிதாய் கிடைத்துள்ள அம்மாவா? இருவரில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி நேர்ந்தபோது அன்பு யாரைத் தேர்ந்தெடுத்தார்? என்பது நான்காவது கதை.
இந்த நான்கு உண்மைக் கதைகளையும் டிக்கெட் பரிசோதகர் முத்துக்குமார் சொல்லக் கேட்ட ரயில் பயணியான அபிக்கு, அம்மா மேலிருந்த கோபம் தணிந்ததா? அவர் என்ன முடிவு எடுத்தார்? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ்.
டிக்கெட் பரிசோதகர் முத்துக்குமாராக வரும் யோகிபாபுவுக்கும், கதை கேட்கும் அபியாக வரும் லவ்லின் சந்திரசேகருக்கும் பெரிய வேலை இல்லை என்றாலும், கொடுக்கப்பட்ட வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.
நான்கு கதைகளின் முதன்மை கதாபாத்திரங்களான அப்துல் மாலிக், ராயப்பன், அதியன், அன்பு ஆகியவற்றில் முறையே நட்டி நடராஜ், பாரதிராஜா, ரியோ ராஜ், சாண்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தத்தமது கதைக்கு முதுகெலும்பாக இருந்து தூக்கி நிறுத்தும் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இவர்களோடு இணைந்து விஜியாக வரும் விஜி சந்திரசேகர், லால் பாஜாக வரும் சுரேஷ் மேனன், கண்ணனாக வரும் ரிஷிகாந்த், மலராக வரும் காவ்யா அறிவுமணி, குழந்தை என்ற கதாபாத்திரத்தில் வரும் வடிவுக்கரசி, இளமைக்கால குழந்தையாக வரும் முல்லை அரசி, இளமைக்கால ராயப்பனாக வரும் ஏகன், அன்னக்கிளியாக வரும் துளசி, மகியாக வரும் அய்ரா கிருஷ்ணன், பாலாவாக வரும் விக்னேஷ்காந்த், மகிமையாக வரும் மைம் கோபி, கண்ணபிரானாக வரும் சுரேஷ் சக்ரவர்த்தி, பரிமளமாக வரும் ஆதிரா, தாஸாக வரும் ஆடுகளம் நரேன், பாத்திமாவாக வரும் கனிகா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அந்தந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் பிரிட்டோ ஜேபி. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள பந்தத்தை, சிக்கல்களை, தாய் பாசத்தை உணர்வுப்பூர்மாக சொல்லியிருக்கிறார். காலங்காலமாக எல்லா கலைப்படைப்புகளிலும் சொல்லப்பட்டு வரும் தாய் பாசத்தை மீண்டும் மீண்டும் சொல்லுவது தவறில்லை தான். ஆனால், இதில் அளவுக்கு அதிகமான சோகத்தை பிழிந்திருப்பதைத் தான் தாங்க முடியவில்லை. அளவோடு சோகத்தை வைத்து, பிளாஷ்பேக்குள் பிளாஷ்பேக் என்பதை தவிர்த்து, சுவாரஸ்யமாக சொல்லியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன், மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு நேர்த்தி.
இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசை ஓகே ரகம்.
’ நிறம் மாறும் உலகில்’ – பார்க்கலாம்!
ரேட்டிங்: 2/5