நினைவெல்லாம் நீயடா – விமர்சனம்
நடிப்பு: பிரஜன், மனீஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, ரோஹித், ரெடின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், பி.எல்.தேனப்பன், முத்துராமன், யாசர், அபி நட்சத்திரா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ஆதிராஜன்
ஒளிப்பதிவு: ராஜா பட்டாச்சார்ஜி
படத்தொகுப்பு: அஷிஷ்
இசை: இளையராஜா
தயாரிப்பு: ‘லேகா தியேட்டர்ஸ்’ ராயல் பாபு
பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்
காதல் உலகெங்கும் பொதுவானது; இனிமையானது; அழியாதது. அப்படித் தான் காதல் திரைப்படங்களும். அவை எந்த மொழியில் இருந்தாலும், எந்த காலத்தில் எந்த இயக்குநரால் எடுக்கப்பட்டாலும் பார்க்க சலிக்காதவை; பார்த்து ரசிக்கத் தக்கவை. பார்வையாளர்களின் நெஞ்சின் ஓரம் ஏக்கத்தை ஏற்படுத்துபவை. அத்தகைய காதல் படங்களில் ஒன்றாக வெளிவந்திருக்கிறது ‘நினைவெல்லாம் நீயடா’ திரைப்படம்.
கதையின் நாயகன் பிரஜனை, அவரது முறைப்பெண்ணான நாயகி மனிஷா யாதவ் ஒருதலையாய் காதலிக்கிறார். ”நினைவெல்லாம் நீயடா” என்று சொல்லக்கூடிய அளவில் வெறித்தனமாக காதலித்து வருகிறார்.
நாயகன் பிரஜனோ, தான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது உயிருக்குயிராக காதலித்த – தன் காதலை ஏற்றுக்கொண்ட அன்றே குடும்பச் சூழ்நிலை காரணமாக அவசரமாய் வெளிநாடு கிளம்பிச் சென்றுவிட்ட – பள்ளிப்பருவ காதலி யுவலட்சுமியை நினைவில் ஏந்தி, அவர் திரும்பி தன்னிடம் வருவார் என மிகுந்த நம்பிக்கையுடன் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்.
இரு வீட்டாரின் சம்மதம் இருப்பதால், பிரஜனின் முறைப்பெண் மனிஷா யாதவ் அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார். ஆனால், மனிஷா யாதவை மணக்க பிரஜன் மறுக்கவே, அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.
இந்நிலையில், ”எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று தெரியாத பள்ளிப்பருவ காதலிக்காக காத்திருப்பதை விட, உன்னை விரும்பும் உன் முறைப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்” என்று பெற்றோர்களும் நண்பர்களும் கட்டாயப்படுத்துகிறார்கள்.
”என் பள்ளிப்பருவ காதலி திருமணம் செய்துகொள்ளாமல் எனக்காகக் காத்திருந்து, என்னைத் தேடி திரும்பி வந்தால், அதன்பிறகு நான் உயிருடன் இருக்க மாட்டேன்; செத்துப்போவேன்” என்று பிரஜன் குமுறிவிட்டு, மனிஷா யாதவை திருமணம் செய்துகொள்கிறார்.
இத்திருமணம் நடந்து முடிந்த சில நாட்களில், பிரஜனுக்காக திருமணம் செய்யாமல் இதுநாள் வரை காத்திருந்த பள்ளிப்பருவ காதலி, பிரஜனைத் தேடி வெளிநாட்டிலிருந்து திரும்பி வருகிறார். பிரஜனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பது தெரிந்து, அதிர்ந்து, தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார்.
இறுதியில், பிரஜன் என்ன செய்தார்? தன் பள்ளிப்பருவ காதலியுடன் இணைந்தாரா? அல்லது விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தாரா? அல்லது முன்பே சொன்னதுபோல் நொந்து தற்கொலை செய்துகொண்டாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு காதலுடன் விடை அளிக்கிறது ‘நினைவெல்லாம் நீயடா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் பிரஜன், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு முழுக்க நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல், சோகம், ஏக்கம் என சகலவிதமான உணர்ச்சிகளையும் பார்வையாளர்களுக்கு துல்லியமாக கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். காதலியா, மனைவியா என டென்ஷனுடன் திண்டாடும் இடத்தில் கவனிக்க வைத்திருக்கிறார்.
நாயகியாக, பிரஜனின் முறைப்பெண்ணாக நடித்திருக்கும் மனிஷா யாதவ் அசத்தலான வனப்புடன் இருக்கிறார். வெறித்தனமான ஒருதலைக்காதலால் கவர்ந்திருக்கிறார்.
பள்ளிக்கால நாயகனாக, மாணவனாக வரும் ரோஹித், அக்கால மாணவியாக, காதலியாக வரும் யுவலட்சுமி ஆகியோர் சிறப்பாக நடித்து, விடலைப்பருவ காதலை சொட்டச் சொட்ட வழங்கியிருக்கிறார்கள். இந்த இருவரும், இவர்களது காதலும் படத்துக்கு மிகப் பெரிய பிளஸ்.
ஸ்ரீ பிரியங்கா, படத்தின் இறுதிக்கட்டத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார்.
ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா, மனோபாலா ஆகியோர் அவ்வப்போது வந்து ஆங்காங்கே காமெடி பண்ணி சிரிக்க வைக்கிறார்கள்.
பள்ளிக்கால காதலி யுவலட்சுமி வளர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின் சினாமிகாவாக வருவதாக முதலில் சொல்லப்படுகிறது. எத்தனை மேக்கப் போட்டாலும் முதிர்முகம் துருத்திக்கொண்டு வெளியே தெரிவதால், படத்துக்கு அவர் மிகப் பெரிய மைனஸ். பெரும்பாலான பார்வையாளர்கள் நொந்து நூலான பின், ஏதோ ஒரு ட்விஸ்ட் வைத்து சினாமிகா ட்ராக்கை முடித்து, படத்தைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள்.
பள்ளிக்கூட டீன் ஏஜ் காதலையும், இளமைக்கால இருபதுகள் வயதுக் காதலையும் இணைத்து கதை உருவாக்கி, படத்தை போரடிக்காமல் நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் ஆதிராஜன். நடிப்புக் கலைஞர்களிடம் திறமையாக வேலை வாங்கியுள்ளார். பார்வையாளர்களை தங்களது விடலைப்பருவ / இளமைக்கால காதலை அசை போட வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்.
இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கின்றன. அவரது பின்னணி இசை, ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவு ஆஷிஷின் படத்தொகுப்பு ஆகியவை திரைக்கதை ஓட்டத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளன.
’நினைவெல்லாம் நீயடா’ – பார்க்கலாம்; ரசிக்கலாம்!